தவிர்கக முடியாத நண்பன்..! (பெற்றோர்களுக்கு)
‘‘ஒரு இடத்தில் உட்கார மாட்டேங்கிறான். எப்பவும் துறுதுறு... இவனைப் பார்த்து பார்த்து வளர்த்து, நான் 5 கிலோ வெயிட் குறைஞ்சுட்டேன்’’ என்று புலம்புவார்கள் அம்மாக்கள். அப்படிப்பட்டவர்கள் குழந்தைகளை ஒரே இடத்தில் கட்டிப் போடப் பயன்படுத்தும் அஸ்திரம் தொலைக்காட்சி, வீடியோ கேம் போன்றவை. சுட்டிகள் வளர வளர அவர்களது குறும்புகள் குறைகிறதோ இல்லையோ, ஊடகம் வயதுக்கு மீறிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும். குழந்தை விளையாடும் போது நடக்கின்ற உடல் இயக்கம், சிந்திக்கும் திறன், பேச்சு, பகிர்தல் அனைத்தும் இதனால் தடுக்கப்படும்.
‘கேட்டல்’ எனும் ஒரு நிகழ்வு மட்டுமே அனுமதிக்கப்பட்டு, காலப்போக்கில் அடம்பிடித்தல், அடிமையாதல் எனத் தொடர்ந்து, அவர்களது உடல், மனம், படிப்பு எல்லாவற்றிலும் விஷம் போல பரவிவிடும் அதன் தாக்கம். ‘‘ஊடகம் வீட்டின் இன்னொரு நபராக மாறிப் போய்விட்டது. அதைப் பார்க்க விடாமல், கண்களைக் கட்டி, குழந்தையை வளர்க்க முடியாது. இன்று உலகில் நடக்கும் பல விஷயங்களை ஊடகத்தின் வழியாகத்தான் தெரிந்து கொள்ள முடியும். அதைப் பொழுதுபோக்கு சாதனமாக இல்லாமல் அறிவுத்தேடலுக்கான சாதனமாக பயன்படுத்துதல், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் பயன்படுத்துதல் என குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது’’ என்கிறார் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அருணா விண்ணரசி.
‘‘ஊடகத்தை ஆரோக்கியமான வழியில் பயன்படுத்தத் தெரிந்த குழந்தைகளால் மிகப்பெரிய வெற்றிகளை எளிதாக எட்ட முடியும். தொலைக்காட்சி, இணையம், வீடியோ கேம் போன்றவை முக்கியமான ஊடகங்கள். இன்றைய சூழலில் ஊடகம் குழந்தையின் தவிர்க்க முடியாத நண்பன்.
பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் இணைந்து அதைக் கையாள்வதில் புதிய விதிகளை வகுக்கலாம். ஒரு நல்ல நிகழ்ச்சியைப் பற்றி வகுப்பறையில் விவாதித்தால் அது குழந்தைகள் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கும். ஊடகம், குழந்தைகளின் அதிகபட்ச நேரத்தையும் விளையாட்டுகளையும் விழுங்கி விடுகிறது. எனவே, சுட்டிகளுக்கு நேர மேலாண்மையை கற்றுத்தர வேண்டியிருக்கிறது.
ஒரு நாளில் இவ்வளவு நேரம்தான் பயன்படுத்தலாம், குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம். குழந்தை எதை செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதை முதலில் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும். குழந்தை தொலைக்காட்சி பார்க்கும் போது பெற்றோரும் உடனிருப்பது அவசியம். அவர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டும் அமர வைத்து அழகு பார்ப்பது தவறு. இடையில் வரும் விளம்பரங்கள் குறித்து கருத்துக் கேட்கலாம். இதன் மூலம் கேள்வி கேட்டு யோசிப்பதற்கான வாய்ப்பை அளிக்கலாம்.
3 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் அதிக நேரம் டி.வி. பார்க்கும் போது வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. உடலுக்கான பயிற்சி குறைகிறது. பேசுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. மொழிக் குறைபாடு, தூக்கம் மற்றும் கவனித்தலில் குறைபாடு உருவாகும். அந்த வயதில் பார்க்கும் அத்தனை விஷயங்களையும் குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியாது. வயதுக்கு மீறிய வார்த்தைகளை பேசும் நிலை உருவாகும். முக்கியமாக படிப்பு பாதிப்புக்கு உள்ளாகும்.
உலகளவில் 3 மாதத்தில் இருந்து ஒரு வயதுக்குள் 40 சதவிகிதக் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். 2 வயது வரை 90 சதவிகிதக் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கின்றனர். அந்த நேரத்தில் நொறுக்குத்தீனி அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். ‘அக்ரஸிவ்னெஸ்’ உருவாகிறது. கோபம், வன்முறை குணங்கள் தலையெடுக்கின்றன. குழந்தைகள் பார்க்கும் விஷயங்களின் உண்மைத்தன்மை குறித்து விவாதிப்பது அவசியம். ஊடகத்தில் வரும் தகவல், திரைப்படம், விளம்பரம் அனைத்தும் மக்களால் உருவாக்கப்படுபவை, ஊடகத்தினர், அவர்களுடைய சொந்த கருத்தை தெரிவிக்கிறார்கள் என்பது குழந்தைக்குப் புரிய வேண்டும்.
விளம்பரத்தில் சொல்லப்படுபவை நிஜத்துடன் ஒத்துப் போவதில்லை என்பதை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கலாம். விளம்பரத்தில் சொல்லப்படும் சாஃப்ட் ட்ரிங்க், சாக்லெட் அந்தளவுக்கு இனிக்கிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க குழந்தை பழகும். மனதில் ஊடகம் உருவாக்கியிருக்கும் கருத்தாக்கம் தானாகவே மாறும். சூப்பர் ஃபாஸ்ட் காரை திரையில் காண்பது போல கரடு முரடான பாதையில் ஓட்ட முடியாது என்பது புரியும். போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, இயற்கையை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம், சமூகக் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது போன்றவற்றை ஊடகத்தின் மூலம் குழந்தை தெரிந்துகொள்ள முடியும்.
ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னால் யார் யார் எல்லாம் உழைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விவாதிக்கலாம். நிகழ்ச்சியின் கிளைத் தகவல்களையும் இதன் மூலம் குழந்தை பெறுகிறது. ஒளிப்பதிவு நுட்பங்களை விவாதிக்கும்போது அது சார்ந்த தேடலுக்கான வழி குழந்தைக்குத் திறக்கப்படுகிறது. ஊடகத்தில் சொல்லப்படும் விஷயத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக இல்லாமல் அது சார்ந்து கேள்வி கேட்பது, பதில் தேடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். வீடியோ கேம், டி.வி. - எதுவாக இருந்தாலும் அதை எதற்காகப் பார்க்கிறோம் எனப் பட்டியலிடவும். பொழுதுபோக்கு, ஷாப்பிங், தகவல் சேகரிப்பு, உடல்நலம் சார்ந்த அல்லது ஒரு கட்டுரைக்கான தேடல் என்று எதுவாகவும் இருக்கலாம்.
ஊடகத்துக்கும் குழந்தைக்குமான உறவு பொழுதைப் போக்குவதாக மட்டும் இல்லாமல் தேடலாகவும் இருக்க வேண்டும். அதற்கு குழந்தையுடன் பெற்றோர் திட்டமிட வேண்டும். 3 வயது வரை தொலைக்காட்சி, வீடியோ கேம் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 7 வயது வரை ஒரு நாளில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம், 7 முதல் 12 வயது வரை ஒரு மணி நேரம், 12 முதல் 15 வயது வரை ஒன்றரை மணி நேரம், 16 வயதுக்கு மேல் அதிகபட்சம் 2 மணி நேரம் பார்க்கலாம். அவர்களின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து பார்க்கச் சொல்லலாம். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் ஆகியவற்றை குழந்தையின் படுக்கை அறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
சாப்பிடும்போது ஊடகத்தில் பார்த்த விஷயங்களை, புரிந்து கொண்டதை விவாதிப்பது ஆரோக்கியமான சிந்தனையை உருவாக்கும். ஊடகம் இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியமில்லாதது... தேவையில்லாதது. அந்தந்த காலகட்டத்தில் சமூகத்தில் இருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு குழந்தைக்கு அவசியம். எந்த ஊடகமாக இருந்தாலும் மனதுக்குள் ஒரு ரிமோட் வைத்திருக்க வேண்டும்.
சரியானதைத் தேர்வு செய்து, குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்க்கும் பழக்கத்தை சிறு வயதிலேயே குழந்தை தொடங்க வேண்டும். இந்த விஷயத்தில் செல்லத்தின் ரோல் மாடல் பெற்றோர்தான். தாத்தா, பாட்டியோ... அப்பா, அம்மாவோ... குழந்தை வீட்டில் இருக்கும் போது ஊடகம் சார்ந்த ஆசையை அடக்குங்கள். குழந்தைகள் இருக்கும் இடம் அவர்களுக்கானதாக இருக்கட்டும்’’ - தீர்க்கமாகச் சொல்கிறார் அருணா விண்ணரசி.
Post a Comment