Header Ads



சாய்ந்தமருதுவில் பொதுவான வாகனத் தரிப்பிடத்தின் அவசியம்

(மருதூர் ப்ரிஆ)

சாய்ந்தமருது பகுதியின் பிரதான வீதியில் அண்மைக் காலமாக வர்த்தக நோக்கிலான வாகனங்கள் ஆங்காங்கே இரவு பகலாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடியவாறான பொதுவான வாகனத் தரிப்பிடம் இல்லையென்றாலும் கூட, இதனால் மாணவர்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினரும் அசௌகரியத்துக்குள்ளாகின்றனர் என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

குறிப்பாக, சாய்ந்தமருது பொது நூலகம், அதனோடு அண்டிய சாய்ந்தமருது மின்சார சபை, கமு/கமுஃமல்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் பாடசாலை மற்றும் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை போன்ற பொது நிறுவனங்களின் முன்பாக இரவு பகலாக கல், மண் ஏற்றிய வாகனங்கள் உட்பட வர்த்தக நோக்காகக் கொண்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இந்த நிறுவனங்களை நாடிச் செல்கின்ற பொது மக்கள், நோயாளர்கள் மற்றும் குறிப்பாக மாணவர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பாடசாலையின் வடக்குப் பக்கமாக இருந்து கால்நடையாக வருகின்ற மாணவர்கள் பிரதான வீதியில் நடந்து வரவேண்டியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட இந்த நிறுவனங்களின் உள்ளே இருந்து வந்து வடக்குப் பக்கமாக செல்ல வேண்டியவர்கள், விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகுந்த பிரயத்தனம் எடுக்கவேண்டியிருக்கிறது. இவ்வாறு வாகனங்கள் தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ என மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஏனெனில், தினமும் போக்குவரத்துப் பொலீசார் இவ்வீதியால் ரோந்து செல்வதுடன், வீதியால் செல்லும் வாகனங்களை நிறுத்திப் பரிசோதனை செய்கின்ற பொலீசாரும் இவ்விடத்தில் தினமும் நிற்பதைக் காண முடிகின்றது. 

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் தலையிட்டு இந்த வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு மாற்றுவழியாக, குறிப்பிட்ட இடமொன்றை இதற்கென ஒதுக்க வேண்டும். 

இது பொதுமக்களுக்குத் தொந்தரவில்லாத வகையில் அமைய வேண்டும்.

விபரீதம் ஒன்று நடந்து அதன் பின் உசாராவதை விடுத்து, இப்போதே காரியத்தில் இறங்குவார்களா?

No comments

Powered by Blogger.