கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவாக விளக்கமளித்திருந்தால்...!
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவாக விளக்கமளித்திருந்தால், போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை சீரழிந்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், கூறியிருக்க முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தமது சிறிலங்கா பயண முடிவில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய நிஷா பிஸ்வால்,
“போர் முடிந்து ஐந்து ஆண்டுகளில் சிறிலங்காவில் மனிதஉரிமைகள் நிலை சீரழிந்துள்ளது. ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்துள்ளது. ஊழல்கள் அதிகரித்து விட்டன, மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.
இது சிறிலங்கா அரசாங்கத்தக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு ஆங்கல நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
“இங்குள்ள நிலைமையை நிஷா பிஸ்வால் முற்றிலுமாக புறக்கணித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு, இந்திய இராணுவத்தின் மேற்பார்வையில், 1988 நொவம்பர் 19ம் நாள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை வடக்கு மாகாணசபையால் செயற்பட முடியவில்லை என்பதை பிஸ்வாலினால் புரிந்து கொள்ள முடியவில்லை.
விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை அவர் அறிந்திருக்கவில்லை.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மனிதஉரிமை விவகாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டி வருகிறது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வடக்கில் வாக்காளர்கள் வாக்களிப்பது கிரமமாக அதிகரித்துள்ளது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பிஸ்வாலுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், 72 வீதமான வாக்களார்கள் வாக்களித்தனர், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருக்கு மட்டும் 1 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகள் கிடைத்தன.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் அமைதியாகவே நடந்தது.
தமிழ் கட்சிகள் ஆயுதங்களுடன் திரிய அனுமதிக்கப்பட்டிருந்தால் இது சாத்தியமாகியிருக்குமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
Post a Comment