Header Ads



நவீன சமூகப் பிரச்சினையில், கையடக்கத் தொலைபேசிப் பாவனை

(எம்.எம்.ஏ.ஸமட்)
சமூகப் பிரச்சினை என்ன என்பது பற்றி பல்வேறு அர்த்தங்கள் பல்நாட்டு சமூகவியலாளர்;களினாலும், அறிஞர்களினாலும் வழங்கப்பட்டுள்ளன. சமூகத்துக்குப் பாரிய அளவில் சவாலாக அமையும் அல்லது பலரின் அபிலாஷைகளுக்கு தடையாக அமையும் மனிதத் தொடர்புகள், செயற்பாடுகள் சமூகப் பிரச்சினையென சமூகவியலாளர் றபேன்ட் செஸ்னிக் குறிப்பிடுகிறார். சமூகப் பிரச்சினைகள் என்பது பொது அபிவிப்பிராயத்தின்படி துரதிஷ்டமானதும் நியாயமற்றதுமான செயற்பாடுகள் எனக் குறிப்பிடப்படுகிறது. 

சமூகப் பிரச்சினையானது ஒருவருக்கு அல்லது முழுச் சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், சமூகத்திலிருந்தே உருவாக்கப்படும், சமூகத்துக்குப் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். சமூகப் பிரச்சினை பற்றிய தெளிவு பலருக்கு இருந்தும் அவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற உணர்வு, தேவை இருந்தும் அதற்கான யதார்த்தபூர்வமான முயற்சிகள் உரியவர்களினால் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாற்றும் நிலவுகிறது.

நமது சமூதாயங்களின் மத்தியில் போதைப் பொருள் பாவனை, தற்கொலை, கருக்கலைப்பு, சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம், வறுமை என நீண்டு கொண்டு செல்லும் சமூகப் பிரச்சினைகளின் வடிவில் நவீன சாதனங்களினூடாகப் புரியும் குற்றச்செயல்களும் சமூப் பிரச்சினைகள் என்ற வரையறைக்குள் இணைக்கப்பட்டுவிட்டன. இந்தவகையில் தற்போதைய நவயுகத்தின் அதித தேவையாக மாறியுள்ள கையடக்கத் தொலைபேசியினுடாக புரியும் குற்றங்கள் அதிகரித்துவிட்டது.  அது சமூகப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.  அவற்;றை தடுப்பதற்கும் இப்பிரச்சினை தலைதூக்காமல் இருப்பதற்குமான காத்திரமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் சமூக உறுப்பினர்கள் அனைவரும் விழிப்படையவேண்டிய தேவையுள்ளது. இத்தேவையை உணர்த்துவதாகவும்; மொபைல் போன் பாவனையின்போது எத்தகைய விடயங்களைக் கைக்கொள்ள வேண்டுமென்ற வழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது. 

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய 'ஐ' போன் வரை வளர்ச்சியைக்கொண்;ட மொபைல் போனின் வயது சுமார் 30யை எட்டிவிட்டது.

1983ல் கலாநிதி மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாக உலக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் பணம்படைந்தவர்களினதும் உயர் பதவி வகித்தவர்களினதும் நவீன சொகுசு சாதனமாக கையடக்கத் தொலைபேசி இருந்து வந்தது. இந்நிலை நீண்ட காலமாக இருந்து வந்த போதிலும், தற்காலத்தில் கைடயக்கத் தொ(ல்)லைபோசி இல்லை என்றால் வாழ்க்கையே இல்லையென்ற நிலைக்கு உலக மக்கள் மாத்திரமல்லாது நம்நாட்டு மக்களும் மாற்றமடைந்து விட்டனர். அந்தளவுக்கு செல்போனானது அத்தியாவசிய தொழில்நுட்ப சாதனமாக ஆகிவிட்டதுடன் அதன் பாவனையும் மக்கள் வாழ்க்கையின் அத்தியாவசிமானதொன்றாக மாற்றம் பெற்றுவிட்டது.

கையடக்கத் தொலைபேசி அறிமுப்படுத்தி ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12 ஆயிரம் பேரே அதன் பாவனையாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக் கணக்கானோர் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். அண்மைய ஆய்வொன்றின்படி இலங்கையின் 22.8 மில்லியன் சனத்தொகையில் 20.3 மில்லியன் மக்கள் மொபைல் போன் பாவனையாளர்களாக உள்ளதாகத் தெரிவக்கப்பட்டுள்ளது..

பேசுவதற்கு மட்டும் என்று வந்த கையடக்கத் தொலைபேசி இன்று இன்னொரென்ன தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அது தவிர பலரை ஆபத்துக்களிலும் சிக்கவைக்கிறது. எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி பாவனையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதைக் கற்பனை கூட செய்ய முடியாத நிலைக்கு மாற்றமடையவுள்ளது.

எல்லோருக்கும் பொதுவான இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் இந்த கையடக்கத் தொலைபேசியும் ஒன்றே என்று சொல்லலாம்.. அருட்கொடையாக வழங்கப்பட்ட அறிவின் புரட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கையடக்கத் தொலைபேசி; இன்று நம் எல்லோருக்கும் உணவை விட உறையுளை விட தன்மானத்தை விட ஏன் கன்னித் தன்மையை விட உயர்ந்ததாக, தேவையின் சிகரமாக மாறிவிட்டது. அவ்வாறு மாற்றமடைந்து நம் ஒவ்வொருவரினதும் கரங்களை விட்டு அசையாது அப்பிக்கொண்டிருக்கும் இந்த கையடக்கத் தொலைபேசி எவ்வாறு பிறகுக்கு தொல்லை வழங்காக தொலைபேசியாகப் பாவிக்க முடியும் என்பது பற்றி பலருக்கு இன்னுமே தெரியாமல் இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பொதுவாக எந்தவொரு மதமும் பிறருக்குத் தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவுல்லை ஊக்கப்படுத்தவுமில்லை. அவ்வாறான நிலையில் கையடக்கத் தொலைபேசி மூலமாக தொல்லை கொடுப்பது விரும்பத்தகாததும் தடுக்கப்பட வேண்டிதொன்றாகும். நாம் எந்தவேளைப் பழுக்கலும் இல்லாத நிலையில், எவ்வித அவசரத் தேவையுமில்லா பொழுதில் நமது நேர விரைவுக்காக மற்றவர்களுக்கு  தொலைபேசி அழைப்பெடுத்து அவர்களை தொல்லைப்படுத்துவதும் தர்மசங்கடத்துக்குள்ளாக்குவதும் நாகரியமற்றது. நாம் ஒருவருக்கு அழைப்பு எடுக்கின்றபோது அவர் வேலையில், வணக்கத்தில், கூட்டத்தில், தூக்கத்தில் இருக்கலாம். அவரிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராதவிடத்து மீண்டும் மீண்டும் அழைப்பை மேற்கொண்டு தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். ஏதாவது அவசரத் தேவைக்கு அழைப்பை மேற்கொண்டு உரியவரிடமிருந்து பதில் வராதவிடத்து நமது அவசரத்தை ஒரு குறும் தகவலின் ஊடாக அனுப்பி வைப்பதே சிறந்தது. 

தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுக்கம் நிறைந்ததாகவும் தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் செய்யும். ஒருவரோடு தொடர்பு கொள்ளும்போது நாம் யார் என்பதை அடையாளப்பத்துவது அவசியம் என்பது நிச்சம் மனதில் நிறுத்தப்பட வேண்டியது. குறிப்பாக தொலைபேசியினூடாக நாம் தொடர்பு கொள்ளும்போது நாம் யார் என்பதை அடைளாப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்பவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வேண்டிய வாய்ப்பிருக்கிறது, சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறு முனையில் இருப்பவரை நீங்கள் யார் என வினவுவது அநாகரீகமான செயற்பாடாகும். அவ்வாறு கேட்பது தொடர்பாடல் நடத்தையை மலினப்படுத்துவதுடன் நம்மையும் நாகரியமற்றவர் என்றும் விளக்கமற்றவர் என்றும் புடம்போட்டுக் காட்டவும் கூடும்.

அதனால், தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகம் செய்வதே தொலைபேசி உரையாடல் அல்லது கருத்துப் பரிமாறலுக்கான ஒழுங்குப் பொறிமுறையாகும். இந்த ஒழுங்குப் பொறிமுறையல்லாத தொடர்பாடல்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம். இவ்வாறில்லாவிடின், நம்மை நாமே நாகரியமற்ற பண்புள்ளவர் என்ற மனப்பதிவை மற்றவர்களிடத்தில் ஏற்படுத்துகிறோம். எனவே இவற்றை மறந்து தொலைபேசி உரையாடலைத் தொடங்கக் கூடாது. 

இன்னும் கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புக்கு பதில் வழங்குவதும் நாகரியமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்துபவருக்கும் தொல்லைதரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே கையடக்கத் தொலைபேசிகளை உபயோகிப்பவர்கள் கூட்டங்களின்போது இத்தகைய செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்வது அவர்களைப் பண்பாளர்கள் என்று பிறரை எண்ணச் செய்யும். தொலைபேசியைத் துண்டிக்காது இருக்க வேண்டுமென்றால்  'மொபைலை ஸைலென்ட் மூடில்' வைத்துக்கொள்ளலாம். வணக்க வழிபாடுகளின்போதும் கூட்டங்களின் போதும் அவை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இது தொடர்பில் ஞாபகமூட்டுவது பயன்தக்கதாக அமையும்.

வாகன செலுத்துனர்கள் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டே வாகனங்களைச் செலுத்துவர். இவ்வாறு வாகனங்களைச் செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசயில் உரையாடுவது அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களைச் செலுத்தும்போது கையடக்கத் தொலைபேசியினூடாகப் பேசுவதாலும் குறுந்தகவல்கள் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ;தி வாஷிங்டன் போஸ்ட்' இணையத்தளம் கூறுகிறது, 

இதனாலேயே, பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் வாகனங்களைச் செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் உரையாடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அச்சட்டத்தை பலர் மீறியே நடந்துகொண்டிருக்கின்றனர் இதனை இங்கு சுட்டிக் காட்டுவது பொறுத்தமாகும்.
கையடக்கத் தொலைபேசியின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒரு சிலர் வேண்டத்தகாத விடயங்களையெல்லா,ம் குறுங்தகவல்களாக அனுப்புகின்றனர். ஆபாசமான, விரசமான செய்திகளையும் படங்களையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களைப் புண்படுத்தக் கூடிய செய்திகளைப் பரப்புவதும் என பலர் அதேயே பொழுதுபோக்காக செய்துகொண்டிக்கிறார்கள். இத்தகையவர்கள் பல பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்பதையும் காணக் கூடியதாகவுள்ளது. அது மாத்திரமின்றி இச்செயற்பாடுகள் சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன.

கையடக்கத் தொலைபேசியானது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்தபோதிலும் அதை வேடிக்கைகாயகப் பயன்படுத்துவது தனிநபரிலும் குடும்பத்திலும் சமூகத்திலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கச் செய்கிறது.

கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள வீடியோ போட்டோ கமெராக்களை வைத்து அந்நியப்பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமா பதிவு செய்வதும் மிகவும் கேவலமான செயற்பாடுகளாகும்;. இவை பல விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு திருட்டுத்தனமாக படம் எடுக்கப்பட்ட பலர் தங்களது கௌரவமும் மரியாதையும் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உயிர்களை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் நம்நாட்டிலும் சர்வதேசத்திலும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய விபரிதங்களை விளையாட்டாகவும் தொழிலாகவும் மேற்கொள்வோர் அடுத்தவரின் துன்பங்களை உணரத் தவறிவிடுகின்றனர். மற்றவரைத் துன்புருத்தி இன்பம் காண்பது என்பது ஒரு வகையான உளவியல் பிரச்சினை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சமூகமும் சமூக அங்கத்தவர்களும் இத்தகைய கேவலமான நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது புரியப்படுதல் அவசியமாகும்.

எந்த பொந்தில் எந்தப் பாம்பு உள்ளது என்பதை சரியாக தெரிந்து கொள்ள முடியாதொரு காலகட்டத்தில் வாழும் நாம் பழுதடைந்த கையடக்கத்தொலைபேசிகளை திருத்துவதற்காக போன் திருத்துனர்களிடம் ஒப்படைத்தவர்கள் பெரும் அசௌகரிங்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் நாளாந்தம் நடந்தேருகின்றன.  அதனால்  திருத்தும்பணிக்காக திருத்துனர்களிடம் போன்களை ஒப்படைக்கும்போது மிகக் கவனமாக இருப்பது நம்மை ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக கையடக்கத் தொலைபேயிலுள்ள மெமரி காட்டைக் எடுக்காமல் கொடுப்பதை; தவிர்த்துக்கொள்ளவும்.

அத்துடன், இன்று பாலகன் முதல் வயோதிபர் வரை கையடக்கத் தொலைபேசியைக் காணாத, பயன்படுத்தாத எவரும் இல்லையென்றே கூற வேண்டும். அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் மாறிவிட்டது. இதனிடையே பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அவர்களின்பால் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. பிள்ளைகள் பெற்றோரிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை ஒழுக்க விழுமியத்துடன் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களைச் சார்ந்தது.

நவீன யுகத்தின் தொழில்நுடப் புரட்சியின் பயணத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன் தொழில்நுட்ப சாதனங்களின் உச்ச நிலையாhக கருதப்படும் கையடக்கத் தொலைபேசிகளை இன்றைய ஒரு சில இளைய தலைமுறையினர் வேடிக்கைக்காகவும் மற்றவர்களை புன்படுத்துவதற்காகவும் தகாத செயற்பாடுகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடையே ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுவதற்கு பல்வேறு வசதிகளுடன் உலக சந்தையில் வந்து குவியும் கையடக்கத் தொலைபேசிகள் காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது மாத்திரமின்றி, மாணவர்களின் கல்வியிலும் பாதிப்புக்களைத் தோற்றுவிப்பதாக அறியமுடிகிறது. பள்ளிக்காலங்களில் காதலிக்கும் மாணவர்கள் காதல் கடிதங்களை பரிமாறுவதற்குப் பதிலாக நவீன முறையில் மொபைல் போன்களை வாங்கிக் கொடுத்து காதலிக்கும் நிலைமைக்கு இன்றைய இளைய தலைமுறையினர் முற்பட்டுள்ளமையானது ஓர் ஆரோக்கியமற்ற சமூகக் கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கும் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சமூக ஆர்வளர்களும் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய தவறுகள் சமூகத்தில் நவீன வடிவில் பிரச்சினைகளை உருவாகுவதற்கு ஏதுவாக அமைகிறது. அதனால்,; பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மொபைல் போன் பாவைனை தொடர்பில் அக்கறை காட்ட வேண்டும். அவர்களை சரியான வழியில் ஆத்மீக ரீதியாக வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டியது அவசியமாகும்.

அது மாத்திரமின்றி, பெரும்பாலானோர் நேரத்தின் பெறுமதி விளங்காமல் காலத்தைச் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கின்றனர். நாம் நேர காலத்தை வீணடிக்கின்றோம் என்று எண்ணிப்பார்க்கவே பலர் விரும்புவதில்லை. அவசியப்படாததொன்றை எதற்காக செய்து கொண்டிருக்கின்றோம் என்று கூட பலர் நினைப்பதில்லை. ஒவ்வொருத்தரும் மூன்;று நான்கு மொபைல் இணைப்புக்களை வைத்துக்கொண்டு ஒரு நாளின் எட்டிலொரு பகுதியை மொமைபல் போன் பாவனைக்காக செலவு செய்கின்றனர். இவ்வாறு நேரத்தைச் துஷ்பிரயோகம் செய்து பல பிரச்சினைகளை சமூகத்தின் மத்தியில் நவீன வடிவில் பலர் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையையும் உரைக்கப்டுவது அவசியமாகும்.

மனிதனின் அறிவு விருத்தியால் உருவாக்கப்பட்ட நவீன இலத்திரினியல் சாதனங்களில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் நமது கரங்களிலிருந்து அசையாது ஒட்டிக்கொண்டிருக்கும் கையடக்கத் தொலைபேசியினால் நமது சமூக, சமய, கலை, காலசார பண்பாட்டில் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு அவை நமது சமூக பொருளாதாத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது இருப்பதற்கும் முறையற்ற தொலைபேசி பாவைனை சமூக பிரச்சினைகளை உருவாக்காமல் இருப்பதற்கும் காத்திரமான நடவடிக்கைககள் எடுக்கப்படுவது அவசியம் என்பதுடன் பணத்தையும் காலநேரத்தையும் விரையம் செய்யாது ஒழுக்க விழுமியத்துடனும் ஒழுக்கப் பொறிமுறையுடனும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த முயற்சிப்பதன் ஊடாக மாத்திரம்   ஆரோக்கியமான சமூகக்கட்டமைப்  எதிர்காலத்தில் உருவாக்க முடியும் இதுவே சமூதாய சீர்மியவாதிகளின் எதிர்பார்ப்பாகவுமுள்ளது.

No comments

Powered by Blogger.