Header Ads



இளமையில் முதுமைக்குத் தயார் செய்தல்

(ஏ.எல்.ஜுனைதீன்)

உலகில் இன்று வேகமாக அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கையும் முதியோர் பராமரிப்பில் உள்ள குறைபாடுகளும் சமூகத்தில் பாரிய பிரச்சினையாகத் தோற்றம் பெற்றுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலக சனத்தொகை தொடர்பான   புள்ளிவிபரப்படி     2000ம்         ஆண்டில் 605 மில்லியன் பேர் (11 சத வீதமாக)ஆக இருந்த 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 2050 ம் ஆண்டில்  02 பில்லியன் பேர் ( 22 சத வீதமாக) ஆக உயருமென எதிர்வு கூறப்படுகின்றது. அதேவேளை    இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 2011ம் ஆண்டில் 13 சத வீதமாக ஆக உயர்ந்துள்ளது.

முதியோர் தொகை அதிகரிப்பது வளர்முக நாடுகளுக்கு பல சவால்களைத் தற்போது தோற்றுவித்துள்ளது.

நீண்ட கால ஓய்வூதியம், அதிகரித்த சுகாதார,சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பனவற்றிற்கு மேலாக முதியோர்களை நாட்டின் உற்பத்தி மற்றும்; அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்காளிகளாக இணைத்துக் கொள்ளாமை அபிவிருத்தி குறைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைமேலும் குறைக்கும்.

பெரும்பான்மையான முதியோர் ஓய்வூதியம் போன்ற நிரந்தர வருமானம் இல்லாதவர்களாக தங்கள் பிள்ளைகளையே நம்பி வாழ்கின்றனர். இவ்வுதவிக்கு கைமாறாக அவர்கள் பிள்ளைகளுக்கு பல வகைகளில் உதவி ஒத்தாசையாகவுள்ளனர். இலங்கையில் உள்ள அனைத்து சமய கலாசார விழுமியங்களுக்கமைய பிள்ளைகள் தங்கள் பெற்றோரைக் கவனிப்பதை ஒரு பேறாகவே கருதிய போதிலும் தற்கால சமூக பொருளாதார கெடுபிடிகளுக்கு மத்தியில் கூட்டுக் குடும்ப முறை அண்மைக்காலமாக மறைந்து விட்டது. வெளி நாட்டு வேலை வாய்ப்பு, புலம் பெயர்ந்து வாழ்தல்,கணவன் மனைவி இருவரும் தொழிலுக்குச் செல்லல் போன்ற காரணிகள் பெற்றோரைபிள்ளைகள் நேரடியாகக் கவனிப்பதை மேலும் கடினமாக்கியுள்ளது.

இலங்கையில் முதியோர் தொகை அதிகரிப்புடன் தொடர்புபட்ட பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருகின்ற போதும் அரசோ ,உள்ளுராட்சி நிறுவனங்களோ அல்லது தனியார் துறையினரோ இதில் அக்கறை செலுத்தி தேவைக்கேற்ப சேவைகளை வழங்க முன்வராதிருப்பது கவலைக்குரியதாகும்.

2011 இல் 63 மில்லியன் மக்களைக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தில் 1100 முதியோர் நலன் தொடர்பான விஷேட வைத்தியர்கள்  சேவையில் இருந்தனர். ஆனால் 21மில்லியன்; மக்களைக் கொண்ட இலங்கையில் முதியோர் நலன் தொடர்பான விஷேடவைத்தியர்கள்ஒருவர்தானும் சேவையில் இல்லை. இதற்கு மேலாக இங்குமுதியோருக்கான விசேட வைத்திய சாலை அல்லது விடுதி, கிளினிக்குகள், விஷேட பயிற்சிபெற்ற மருத்துவத்தாதிகள், இயல் மருத்துவ சிகிச்சையாளர்கள்  தொழில்சார் மருத்துவ சிகிச்சையாளர்கள் பேச்சு வள சிகிச்சையாளர்கள் சமூக-வைத்திய சேவையாளர்கள் போன்றோர் தேவையாகவுள்ளனர்.

எதிர்காலத்தில் முதியோர்களுக்கான சுதந்திரம், கவனிப்பு, சுயதேவைகளைப்பூர்த்திசெய்யும்வாய்ப்பு, கௌரவம்,மதிப்பு,பங்கேற்பு, தமக்கென வீடு,உணவு,உடை,பொழுது போக்கு வசதி ஆகியவற்றைப் பெற்றுக்கொடுக்கவும் முதியோர்களை பொறுமை, விட்டுக் கொடுப்பு போன்றநல்விழுமியங்களுடன் வாழப் பழக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

ஏற்பாடுகளுக்கான இலக்குகள்

1. அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முதுமைக்காலத்தில் நிந்தரமான வருமானம், சொத்துக்கள் அல்லது முதலீடுகள் என்பனவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளல்

2. முதுமைக் காலத்தில் வாழ்வதற்கு தமக்கென நிரந்தர வதிவிடம் ஒன்றைத் தயார் செய்தல்

3. முதுமைக் காலத்தில் உதவுவதற்கு நம்பகரமான சேவகர்கள்,சேவையாளர்களை ஏற்பாடு செய்தல்

4. தொழில், பொழுது போக்கு, சமயக் கிரியைகள் போன்றவற்றில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கல்

5. சமூக நடவடிக்கைளில் பங்கேற்று முதியோர் தமது அறிவு அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் வழங்கல் 

6. சமூகத்தில் சில பதவிகளை முதியோருக்காக ஒதுக்குதல்

7. குடும்ப விவகாரங்களில் முதியோர் பங்கேற்றுத் தலைமை தாங்க முன்னுரிமை வழங்கல்

8. முதியோர் தமது அறிவு, திறன், தகுதி ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்கல் 

9. முதியோரின் உடல்,உள,சுற்றாடல் ரீதியான நலனை உறுதிப்படுத்த உதவுதல்

10. முதியோரிடம் நல்விழுமியங்களை ;ஊக்கப்படுத்தல்

11. திருப்திகரமான முதியோர் நல சேவைகள் (அரச, உள்ளூராடசி, தனியார், தொண்டர் சேவைகள்) ஏற்பாடு செய்தல்.

மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கு இன்னும் ஓரிரு தசாப்தங்களுக்குள்முதுமையடையவுள்ள தற்போதைய நடுத்தர வயதைத் தாண்டியுள்ள அனைவரும் தமது முதுமை வாழ்வு நிம்மதியானதாக அமைய தற்போதிருந்தே முன் ஏற்பாடுகள்; செய்ய வேண்டியுள்ளது.
அத்துடன் அரச, உள்ளுராட்சி, தனியார் நிறுவனங்களும் பல சேவைகளை முதியோருக்கு வழங்க முன்வரவேண்டும்.

டாக்டர் எம். ஐ. எம். ஜெமீல்
தலைவர், சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியம்
சாய்ந்தமருது

No comments

Powered by Blogger.