Header Ads



ஜனாஸா நல்லடக்கத்தின் போது பயன்படுத்த மெகாபோன் அன்பளிப்பு


(மருதூர் ப்ரிஆ)

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் மூன்று மையவாடிகளில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மூன்று மையவாடிகளும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தின் கீழுள்ள மூன்று பள்ளிவாசல்களின் பொறுப்பிலே உள்ளன.

ஜனாஸா நல்லடக்கத்தின் போது, மறுமை பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்தும் நோக்குடன் மார்க்க உபந்நியாசம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இந்த உபந்நியாசம் நிகழ்த்தப்படுகின்ற போது, குறித்த ஜனாஸா நல்லடக்க கடமையிலே கலந்து கொண்டிருப்பவர்கள், குழுக்களாக கூடிக்கதைத்துக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இதற்கு ஒரு காரணமாக, நிகழ்த்தப்படுகின்ற மார்க்க உபந்நியாசம் தங்களுக்கு கேட்பதில்லை என்று கூறப்படலாம்.

இந்தக் குறைபாடு சம்மந்தமாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாகடர் என். ஆரிப் அவர்களின் முயற்சியின் பயனாக நிவர்த்தியாகியுள்ளது. மேற்படி விடயத்தை வெளிக்கொணர்ந்ததனை அறிந்து கொண்டு தற்போது குடும்பத்துடன் சவுதியில் தொழில் நிமித்தம் வசித்து வரும் நபீல் அப்துல் றசீட் என்ற சகோதரர் அவரது காலஞ் சென்ற தந்தையான மர்ஹும் ஏ. ஆர். ஏம். அப்துல் றசீட் மாஸ்டரின் ஞாபகார்த்தமாக மூன்று மெகாபோன்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மூன்று மெகாபோன்களும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை. எம். ஹனிபா அவர்களிடம் ஜனாஸாக் குழுவினரின் முன்னிலையில் இன்று 22. 02. 2014 சனிக்கிழமை குறித்த சகோதரர் நபீலின் சார்பாக, டாக்டர் என். ஆரிப் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இவை இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மையவாடிகளையும் பரிபாலித்து வரும் சாய்நதமருது அக்பர் பள்ளிவாசல், சாய்ந்தமருது தைக்காப் பள்ளிவாசல், மாளிகைக்காடு நூர் பள்ளிவாசல் ஆகிய மூன்றுக்கும் நாளை 23. 02. 2014 ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த விடயத்தை பொதுமக்கள் பெரிதும் பாராட்டுவதுடன், எதிர்காலத்தில் இம்மாதிரியான உதவிகள் அவசியம் என்பதையும், ஏனையோரும் இதனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்வின் இறுதியில் இதனுடன் சம்மந்தப்பட்ட அனைவருக்காகவும் துஆப் பிரார்த்தனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.