Header Ads



ரத்தப்புற்றால் பாதிக்கப்பட்ட சிறுவனை ‘ஒரு நாள் உயரதிகாரி’ ஆக்கிய அமெரிக்க போலீசார்

உலகம் முழுவதும் புற்றுநோயின் தாக்கத்துக்கு உள்ளாகிய மக்கள் ஒவ்வொரு நாளையும் தாங்க முடியாத வலி, மன வேதனை, மரண பயத்துடன் தான் கழித்து வருகின்றனர்.

அதிலும், இந்நோயின் பாதிப்புக்குள்ளான சிறுவர், சிறுமியரின் பெற்றோரும், உற்றார் உறவினரும் அடையும் மன வேதனை நோயாளியின் வேதனையை விட இரட்டிப்பு மடங்கானது என்ற கருத்தின் உண்மையை அனுபவித்து உணர்ந்தவர்களால் மட்டுமே அறிய முடியும்.

இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்த ஜேவான் ஃபெல்டன் என்ற 9 வயது சிறுவனுக்கு 'லிம்ஃபொபிலாஸ்டிக் லுக்கோமியா' என்ற ரத்தப்புற்று நோயின் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் தெரிய வந்தது.

கணவனை பிரிந்து தனிமையில் வாழும் அவனது தாய், தனது அன்பு மகனுக்கு சிறு வயதிலேயே இத்தகைய கொடிய நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளதை எண்ணி துடித்துப் போனார்.

மிச்சிகன் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ‘கீமோ தெராபி’ உள்ளிட்ட சிகிச்சை பெற்று வந்த ஜேவான் ஃபெல்டன், அடிக்கடி தனது அம்மாவை பார்த்து ‘ஏம்மா... நான் செத்துப் போவேனா? நல்லா படிச்சி, பெரிய ஆளாகி, போலீஸ் வேலையில் சேந்து, தப்பியோடும் திருடர்களை காரில் வேகமாக விரட்டிச் சென்று, அவங்களை கைது செய்து, மெடல் எல்லாம் வாங்கி, பெரிய போலீஸ் ஆபிசராக நினைத்த என் லட்சிய கனவு பலிக்கவே பலிக்காதா?’ என்று ஏக்கத்துடன் கேட்ட போதெல்லாம் மகனுக்கு ஆறுதலும், தைரியமும் கூறி வந்த அவனது தாயார் அமெண்டா க்லின்க்ஸ்கேல்ஸ் தனியாக சென்று குலுங்கக் குலுங்க கதறி அழுவது வாடிக்கையாகி விட்டது.

அவரது சோகத்தை கண்டும், கேட்டும் அறிந்த மிச்சிகன் குழந்தைகள் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரத்தப் புற்று நோயின் தாக்கத்தால் ஏற்பட்ட உடல் வேதனையால் வாடும் ஜேவான் ஃபெல்டனின் மன வாட்டத்தை போக்க தீர்மானித்து அதற்கான நடவடிக்கையில் துரிதமாக இறங்கினர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, ஜேவான் ஃபெல்டனுக்கு பொருந்தும் அளவிலான போலீஸ் சீருடையுடன் அவனது வீட்டுக்கு வந்த டாக்டர்கள் அந்த சீருடையை அவனுக்கு அணிவித்து அழகுபடுத்தினர். வெளியே நின்றிருந்த போலீஸ் காரில் ஏற்றப்பட்டு உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவனை போலீஸ் உயரதிகாரிகள் கம்பீரமாக ‘ஸ்ல்யூட்’ அடித்து வரவேற்றனர்.

பின்னர், உரிய மரியாதையுடன் அவனை போலீஸ் ஹெலிகாப்டரில் ஏற்றி டெட்ராய்ட் நகர போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். வாசலில் நின்று ஜேவான் ஃபெல்டனை கைகுலுக்கி வரவேற்ற டெட்ராய்ட் நகர போலீஸ் கமிஷனர் ஜேம்ஸ் க்ரெய்க் அவனை அணைத்தபடி உள்ளே அழைத்து சென்றார்.

பத்திரிகையாளர்களை சந்திக்கும் மேடையின் மீது ஜேவான் ஃபெல்டனை ஏற்றி ‘டெட்ராய்ட் நகர போலீஸ் தலைமை அதிகாரியாக இன்று ஒரு நாள் மட்டும் நான் பதவி ஏற்றுக் கொள்கிறேன்’ என்ற உறுதிமொழியை வாசிக்க வைத்து, அவனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை கண்ட அவனது தாயார் அமெண்டா க்லின்க்ஸ்கேல்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பதவியேற்றவுடன் ஆலோசனை அறைக்கு அழைத்து சென்று, அன்று ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பாக டெட்ராய்ட் நகர போலீஸ் அதிகாரிகள் புதிய (ஒரு நாள்) கமிஷனருக்கு விளக்கி கூறினர்.

அப்போது கையை அசைத்து இடைமறித்த ஜேவான் ஃபெல்டன், ‘இன்று இந்த வேலைகளை எல்லாம் நீங்கள் செய்யப் போகிறீர்கள். கமிஷனராக நான் இருக்கப் போகிறேன். பாவம்... இத்தனை நாளாக ஓய்வில்லாமல் கமிஷனராக வேலை செய்து வந்த ஜேம்ஸ் க்ரெய்க் அங்கிளுக்கு இன்று விடுமுறை அளித்து விடலாம்’ என்று கூறியதும் அந்த அறையில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆனது.

புற்று நோயாளி சிறுவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவனை கவுரவித்து, மகிழ்வித்த டெட்ராய்ட் நகர போலீஸ் தலைமை அதிகாரியின் மனித நேயத்தை அமெரிக்க ஊடகங்கள் வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றன.

No comments

Powered by Blogger.