Header Ads



சுதந்திரத்தின் பின், சுதந்திரமற்ற சிறுபான்மை மக்கள்


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

அந்நியர் ஆட்சியில் இருந்து இலங்கை விடுபட்டு 66 வருடங்கள் கடந்தும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை மாறாக தற்போது பூதாகாரமாக தோற்றம் பெறுவது வருந்தத்தக்க விடயமாகும்.

அந்நியர் ஆட்சியின்போது இலங்கை அவர்களின் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும் என்ற இலங்கை வாழ் மக்களின் நீண்டகாலக் கனவு 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி நனவாக மாறியது.

இவ்வாறு சுயமாக நம்மை நாமே ஆளும் நிலைமைக்கு வித்திட்டவர்கள் அக்காலத்தில் உள்ள மூவின மக்களின் பிரதிநிதிகளே. மாறாக ஒரு இனம் மட்டும் இலங்கையின் சுதந்திரத்திற்கு பாடுபடவோ அல்லது முயற்சிக்கவோ இல்லை அந்த வகையில் இலங்கை சுதந்திரம் பெற்றமைக்கு இலங்கை வாழ் சகல மக்களின் பங்களிப்பும் உள்ளது எனலாம்.

அக்கால மக்கள் பிரதிநிதிகள் அகிம்சை வழியிலான பல்வேறுபட்ட சாத்வீகப் போராட்டங்களை நடாத்தியதன் பயனா இரத்தம் சிந்தாதவகையில் இலங்கை ஏனைய நாடுகளை விடவும் ஒரு வித்தியாசமான வழியில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது எனலாம்.

இவ்வாறு இலங்கை அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெறுவதற்கு அக்காலத்தில் இனவாதமோ அல்லது மதவாதமோ காணப்படவில்லை மாறாக அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தால்போதும் என்ற ஒற்றுமையிலேயே சுதந்திரத்தைப் பெறக் கூடியதாக இருந்தது.

இனபேதம் மதபேதம் அற்ற நிலையில் பெற்ற சதந்திரம் இன்று இனவாதத்தாலும் மதவாதத்தாலும்  மிதந்து ஒற்றமையாக வாழும் பல்லின சமுகத்தையும் முரண்பாட்டுக்குள் ஒருவரை ஒருவர் கண்டால் சண்டையிடும் நிலைமைக்கு இன்று இலங்கையில் இனவாதம் தலைதூக்கியுள்ளது.

இலங்கை எந்த நோக்கத்திற்காக சுதந்திரத்தை பெற்றதோ அந்த நோக்கங்கள் எல்லாம் சின்னாபின்னப்பட்டு இன்று சமுகங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையற்ற வாழ்வு வாழ்வதற்கு இனவாதம் சுயநலங்களுக்காக தலைதூக்கியுள்ளமை சமாதானத்தை விரும்பும்  இலங்கை வாழ் சமுகங்களை கவலை கொள்ளச் செய்து சுதந்திரத்தின் பின் சுதந்திரம் அற்றவர்களாக சிறுபான்மை மக்களை மாற்றியுள்ளது.

இலங்கை வாழ் மக்கள் தமது மக்கள் தலைவர்களால் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழுவதற்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்து முயற்சிகளும் இன்று ஒரு சில பெரும்பான்மை இனவாதிகளினதும் அதற்கு துனைபோகும் குள்ள நரி அரசியல்வாதிகளினாலும் சூறையாடப்பட்டு சுதந்திர தினத்தை சுதந்திரம் அற்ற நிலையில் கொண்டாடும் துர்ப்பாக்கிய நிலைமைகளே இலங்கை வாழ் மக்களிடத்தில் தற்போது திணிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமானால் இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை இனவாதகளின் வஞ்சனைகளிலும், அவர்களின் கபடத்தனமான செயற்பாடுகளில் இருந்தும் பாதுகாக்கப்படவேண்டும். இந்த நிலைமைகளை ஏற்படுத்த வேண்டிய கடமையும் கடப்பாடும் அரசாங்கத்திற்கே உள்ளது.

எனவே சுதந்திரமான இலங்கையைக் காண வேண்டுமானால் இலங்கை வாழ் சகல மக்களும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் அவரவர் சமயங்களை அவரர் விரும்பியபடி கடைப்பிடிக்கவும் நாட்டுக்கு தீங்கற்ற விதத்தில் தமது சமய விழுமியங்களை பாதுகாக்கவும், இனவாதிகளின் சூழ்ச்சுமத்தில் இருந்து சகல மக்களின் வாழ்வியல் உரிமைகளையும் பாதுகாத்து மக்கள் அமைதியாக வாழ்வதற்கான பொறுப்பை ஏற்று அதற்கான உத்தரவாதத்தையும் அரசே வழங்கவேண்டும். இதன் மூலமே சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும் எனலாம்.

No comments

Powered by Blogger.