Header Ads



இனவாத கதைகளால் பிரச்சினைகள் கூடி மக்களின் நிம்மதி மேலும் பாதிக்கப்படும் - அஸாத் சாலி

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பு இன்று (04.02.14) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.

பால் மா விலை அதிகரிப்பு பற்றி பல தடவைகள் இந்த சந்திப்பின் போது நாம் கூறிய விடயம் இப்போது சரியாகிவிட்டது. ஒரு பெரிய மாபியா கும்பல் இதைக் கட்டுப்படுத்துவதாக நாம் கூறி வந்தோம். தற்போது அவர்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டது.அமைச்;சரும் அதற்கு சம்மதம் வழங்கிவிட்டார். விலைகள் அதிகரித்துவிட்டன. மறைத்துவைக்கப்பட்டிருந்த பால்மா பொருள்களை இனியாவது சந்தைக்கு விடுவார்கள் என்று பார்த்தால் அதுவும் போதாது என்று தொடர்ந்து பால் மாக்கள் பதுக்கப்படுகின்றன. அடுத்;த கட்ட விலை அதிகரிப்பை தேர்தலுக்குப் பின் எதிர்ப்பார்க்கலாம்.

சரத் பொன்சேகா இந்த நாட்டின் ஜனாதிபதியை பிரபாகரனுடனும் அமைச்சர் மேர்வின் சில்வாவுடனும் ஒப்பிட்டு இவர்கள் இருவரினதும் தலை மயிரின் பெறுமதி கூட அற்றவர்தான் ஜனாதிபதி என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அவ்வாறு கூறிய காரணத்துக்காக அவரையும் பிரபாகரனையும் ஒப்பிட்டு எந்த முகவரியும் இல்லாமல் ஒரு புத்தகமே அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அதுபற்றி அவரின் ஆதரவாளர்கள் பொலிஸாருக்கு உரிய நேரத்தில் தகவல் கொடுத்தனர்.ஆனால் பொலிஸார் அந்த இடத்துக்கு வரவோ அல்லது ஒரு புத்தகத்தை அச்சிடுவதற்கு இந்த நாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு நியதியையும் பின்பற்றாமல் அந்தப் புத்தகத்தை அச்சடிக்கும் பணியில் ஈடபட்டிருந்த அச்சகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ பொலிஸார் மறுத்துவிட்டனர். இதுவே ஒரு அரச பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடந்திருந்தால் பொலிஸார் இப்படியா நடந்திருப்பார்கள் என்று கேற்க விரும்புகின்றேன். சரத் பொன்சேகாவுடன் எமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அது வேறு விடயம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு கட்சித் தலைவருக்கு எதிரான இவ்வாறான செயல்களை ஏற்க முடியாது. பொலிஸார் எப்போதுமே பாரபட்சமின்றி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோளாகும்.
ஜனாதிபதி மீண்டும் மீண்டும் பொய் உரைத்துக் கொண்டே தனது காலத்தைக் கடத்துகின்றார்.தற்போது தேர்தல் காலத்தில் அவர் மீண்டும் போடுகின்ற அப்பட்டமான பொய் குண்டு தன்னை ஜெனீவா மனித உரிமை பேரவை மூலம் மின்சாரக் கதிரையில் அமரவைத்து தனது உயிரைப் பறிக்கப்ப பார்க்கின்றார்கள் என்பதாகும். இது பற்றி இந்த நாட்டு மக்கள் எந்தக் கவலையும் படத் தேவையில்லை. அது முற்றிலும் பொய்யானது நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை சூறையாட கட்டி விடப்படும் கதை. அவ்வாறு எதையும் ஜெனீவா மாநாட்டின் மூலம் செய்ய முடியாது.அதற்கான சட்டபூர்வமான ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. 

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாக முன் வைக்கப்பட்ட சாசனத்தில் அவர் கையொப்பம் இடவில்லை. அதனால் இலங்கைத் தலைவர் எவருக்கும் தண்டனைகள் வழங்க முடியாது. அவர்களை சர்வதேச ரீதியாக கைது செய்யவும் முடியாது. இலங்கைக்கு எதிராக தடைகளைக் கொண்டுவரும் நோக்கம் கூட தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்க பிரதிநிதி தெளிவாகக் கூறியுள்ளார். அதற்கெல்லாம் இன்னும் காலம் செல்லலாம். ஆனால் இந்த முறையும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்பது மட்டுமே இப்போதைக்கு நிச்சயம். இவர்கள் செய்திருக்கின்ற குற்றங்கள் மற்றும் மோசடிகளுக்காக சர்வதேச ரீதியில் அல்ல உள்நாட்டில் உள்;நாட்டு மக்களே இவர்களுக்கு தண்டனை அளிப்பார்கள். ஜனாதிபதியின் இந்த பொய்களை எல்லாம்; நம்பும் அளவுக்கு இந்த நாட்டின் மக்கள் மடையர்கள் அல்ல என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

அதுமட்டுமல்ல 2005ம் ஆண்டு முதல் உள்நாட்டு விடயங்கள் பற்றி பொது விவாதம் ஒன்றுக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்து வருகின்றார். ஜனாதிபதி இன்று வரை இந்த அழைப்பை ஏற்கவில்லை. நாம் இப்போது ஜனாதிபதியிடம் வேணடுகின்றோம். எதிர்க்கட்சி தலைவரின் அழைப்பை ஏற்று இந்த விவாதத்திற்கு செல்லுங்கள் சகல தொலைக்காட்சிகள் வழியாகவும் அது ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். அது ஒரு மணிநேர விவாதமாக இருக்கவும் கூடாது. ஒருநாள் முழுவதும் இந்த நாட்டின் பிரச்சினைகள் பற்றி இருவரும் விவாதியுங்கள். அப்போது தான் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவரும். இது நாங்கள் ஜனாதிபதிக்கு விடுக்கும் சவால். முடிந்தால் எதிர்க்கடசித் தலைவரின் சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.யுத்தத்தைப் பற்றி பேசாமல் சுதந்திரத்தை கூட நினைவு கூற முடியாத நிலையில் அரசு உள்ளது. யுத்தத்தை நாங்கள் தான் முடீவுக்கு கொண்டு வந்தோம் என்று கூறாமல் ஒரு நாளை கூட இவர்களால் கழிக்க முடியாது எந்த நாளும் மக்களுக்கு வழங்கப்படும் சீனி முட்டாய் இதுதான்.ஆனால் இந்த யுத்தத்துக்காக எவ்வளவு பணம் செலவழித்தார்கள்? அதன் மூலம் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதை எல்லாம் மக்களுக்கு கூற இவர்களால் முடியுமா?

பள்ளிவாசல்கள் ஆலயங்கள் மற்றும் கோயில்கள் உடைக்கப்பட்டமை தொடர்பாக அமெரிக்கப் பிரதிநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஆமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் இவை உள்ளக சமூக மட்டப் பிரச்சினைகள.; அண்மைக் காலத்தில் கட்டப்பட்வை என்று என்னவெல்லாமோ கூறி அதை மழுப்ப அவர் முயற்சி செய்துள்ளார். சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல அரசுக்கு எதிராகப் பேசினால் பௌத்த மத விஹாரைகளும் கூட தாக்கப்படும் நிலைக்கு நாடு வந்துள்ளது. இவை எல்லாம் இன்று அரசுக்கு எதிரான ஆவணங்களாக மாறி உரிய இடத்துக்குச் சென்றுள்ளன.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து அரச நிறுவனங்களில் தலைவர் பதவி வகிப்பவர்களும் இன்று தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கின்றனர். ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் இதில் குறிப்பிடத்தக்கவர். தனது டார்லிங் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் தனது கோஷ்டியோடு செல்ல வேண்டும் என்பதற்காகவும் விமான சேவைகளின் நேர அட்வணையையே மாற்றி தலைகீழாக விமான சேவையை நடத்துகின்றார். ஏற்கனவே இருக்கின்ற நட்டம் போக தனிப்பட்ட தேவைகளுக்காக விமான சேவையை பயன்படுத்துவதால் ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. வாடகைக் கார்களை அழைப்பது போல் அவர் விமானங்களைப் பயன்படுத்துகின்றார். இவ்வாறான மோசமானதோர் அரசை நாம் இதற்கு முன் இந்த நாட்டின் வரலாற்றில் பார்த்ததே இல்லலை.

அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டமூலத்துக்கு நாம் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் என்றும் மாகாண சபை முறை நீக்கப்படவேண்டும் என்று உரத்து கோஷமிட்ட உதய கம்மன்பில தான் இன்று அரசின் மேல் மாகாண கொழும்பு வேட்பாளர்களுக்கு தலைமை தாங்க முன்வந்துள்ளார். ஒரு இனவாதியை கொழும்பில் தலைமை தாங்க வைக்கும் அளவுக்கு அரசுக்குள் வேட்பாளர் பஞ்சமும் தலைமைத்துவ பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. பெயரை குறிப்பட முடியாத நிலைக்கு ஆளும் கட்சி தள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வங்குரோத்து நிலையை இது மிக நன்றாக படம் பிடித்து காட்டுகின்றது. உதய கம்மன்பி;ல வெளிப்படையில் மாகாண சபை முறையை எதிர்த்தாலும் அவரது குடும்பமே வருமானத்துக்காக மாகாண சபையில் தான் தங்கி உள்ளது. ஊடகங்களுக்கு முன்னிலையில் தான் மிகவும் நேர்மையானவர் போல் காட்டிக் கொள்ளும் அவரின் உண்மை சொரூபம் அதுவல்ல. கடந்த கொழும்பு மாநகர சபை தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான விளையாட்டுப் பொருள்களை கையளித்து தேர்தல் சட்டங்களை மீறியவர் தான் இவர். ஆனால் இப்போது அவர் மிகவும் நல்லவர் போல் நடித்து மக்களிடம் நூறு ரூபாய் வீதம் தேர்தல் நிதி வசூலிக்க முன்வந்துள்ளார். சிறுபான்மை இன மக்களின் வழிபாட்டுத் தலங்களை தாக்குகின்ற சக்திகளின் பின்னால் செயற்படுகின்றவர்கள் இவர்கள் தான். சிஹல உறுமய தமது இனத்துக்கான ஒரு பகுதியையும் பொது பல சேனா, சிஹல ராவய போன்ற அமைப்புக்கள் இனத்துக்கான வேறு பிரிவுகளில் வேலை செய்வதாகவும் தேவை ஏற்படும் நேரத்தில் இந்த சக்திகள் ஒன்றிணைந்தும் பணியாற்றும் என்றும் இவர்கள் பகிரங்கமாகக் கூறுகின்றனர்.

அமைச்சர் மைத்திரிபால கவி பாடத் தொடங்கியிருப்பது போல் இன்று முதல் ஜனாதிபதி வேதம்(பண) ஓதத் தொடங்கியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின் பெரும்பாலும் அவர் இதைத் தான் செய்ய வேண்டியிருக்கும் என்று நாம் நினைக்கின்றோம்.கொலன்னாவை விஹாரையின் பிரதான மதகுரு ஒரு பாரிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கொலன்னாவை பிரதேசத்தில் போதைப் பொருள் பெருமளவில் கொண்டு வரப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருவதாக அவர் பகிரங்கமாக ஊடகங்கள் வழியாக குற்றம் சாட்டியுள்ளயார். அது சம்பந்தமாக சுமார் 17 பேரின் பெயர்களையும் அவர் பகிரங்கப்டுத்தி உள்ளார். இவர்கள் அனைவரும் அரசாங்க சார்பு அரசியல் வாதிகளின் ஆதரவோடு செயற்படுகின்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எங்கே சட்டம்? அதற்கு பொறுப்பானவர் இதைக் கேள்வியுற்ற பிறகும் என்ன செய்கின்றார்? சட்டத்தின் செய்ற்பாடு என்ன? அதை செயற்படுத்துகின்றவர்கள் எங்கே? ஒரு மதகுரு இப்படி பகிரங்கமாக குற்றம் சாட்டிய பிறகும் ஏன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அரசாங்க அதிகாரிகள் அரச தொலைக்காட்சிகளில் தோன்றி இந்த நாட்டின் பௌத்தர்களுக்கு மட்டும் தான் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளதாக அப்பட்டமாக பொய் உரைக்கின்றனர். ஆனால் உண்மையாக அநீதி இழைக்கப்பட்டவர்களை அவர்கள் அடியோடு மறந்து விட்டனர் அல்லது மறக்கப் பார்க்கின்றனர். இவ்வாறான இனவாத கதைகளால் பிரச்சினைகள் கூடி மக்களின் நிம்மதி மேலும் பாதிக்கப்படும். எனவே இவ்வாறான கதைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். யாருக்கும் எந்தவொரு இனத்துக்கும் அநீதிகள் இழைக்கப்படக் கூடாது என்பதே எமது பிரார்த்தனையாகும்.

No comments

Powered by Blogger.