Header Ads



மாடு அறுப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் மாடு அறுப்பதற்குத் தடைவிதிக்கக்கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கடந்த 18.02.2014 அன்று செவ்வாய்க்கிழமை சிங்கள ராவய என்னும் அமைப்பினர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் செய்திகளை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த இரண்டு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அவ்வார்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமைக்கெதிராக காத்தான்குடி மீடியா போரம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறது.
இது தொடர்பாக காத்தான்குடி மீடியா போரத்தின்  தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் ,செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பொதுவாக ஊடகவியலாளர்கள் என்பவர்கள் இன மத மொழி பேதங்களுக்கப்பால் நாட்டின் நிகழ்வுகள உரிய முறையில் உண்மைத்தன்மையோடு மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கில் தன்னலம் பாராது தொண்டாற்றும் சேவகர்கள் ஆவார்கள். ஆனால் சிங்கள ராவய போன்ற கடும்போக்குவாதிகள் தங்களின் ஆர்ப்பாட்ட களத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடாத்தி அவர்களிடம் இருந்த மிகவும் பெறுமதிவாய்ந்த வீடியோ கமராக்கள் மற்றும் தொலைபேசிகள் போன்றவற்றை அபகரிப்பது மிகவும் கீழ்த்தரமான ஓர் செயற்பாடாகும்.
இவ்விடயம் தொடர்பில் இதுவரைக்கும் இவ்விடயத்தில் தொடர்புபட்ட யாரும் கைது செய்யப்படாமலும் சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படாமலும் இருப்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
எனவே இதுபோன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான இனரீதியான வன்முறைகள் இனியும் இடம்பெறாவண்ணம் உரிய முறையில் சகல பாதுகாப்புத் தரப்பினரும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும்  காத்தான்குடி மீடியா போரம் கோரிக்கை விடுக்கிறது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஊடகவியளாளர்களும் புத்தியோடு நடந்திருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக நடக்கும் ஓர் பிக்கெட்டிங் இல் இவர்கள் ஏன் மூக்கை நுழைத்து பிரச்சினைகளுக்கு வழிவகுக்க வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.