Header Ads



ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்

ஒரு மனிதனின் உணவுத் திட்டம், தூக்கம் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ச்சியாக இல்லாமல் அடிக்கடி மாறும் போது உடலை கண்டிப்பாக  சர்க்கரை நோய் தாக்கும். யார் புரோகிராம் செய்ததோ தெரியாது, நம் உடல் எனும் சிஸ்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஹார்மோன்கள்  சுரப்பதும், அதற்கான பணிகளை செய்வதும் வழக்கம் போல் நேரம் தவறாமல் நடந்து வருகிறது. புறச்சூழலுக்கு ஏற்ப தன் சிஸ்டத்தை மாற்றிக்  கொள்வது மற்றும் நோய் தாக்குதலுக்கு ஏற்ப எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என தன் வேலையை மிகவும் அறிவுப் பூர்வமாக உடல் தனக்குத்  தானே செய்து கொள்கிறது.

உயிர்ச்சங்கிலியில் ஒரு கன்னி அறுந்தாலும் அது இயற்கையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாறுதல்களை உருவாக்கும். ஒரு உயிரினம் அழிக்கப்படும்  போது அதற்கான விலையை இந்த சமூகம் கொடுக்கத் தவறுவதில்லை. இதே போல் தான் உடலும். கணினியில் வைரஸ் தொற்று ஏற்பட்டால்  செயல் இழக்கிறது. தான் சேமித்து வைத்ததை எல்லாம் தொலைத்து விடுகிறது. கணினியால் தனக்குத் தானே ஆன்ட்டி வைரஸை உற்பத்தி செய்து  கொள்ளத் தெரியாது. ஆனால் உடலுக்குத் தெரியும். 

உடலுக்கான செயல்பாடுகள் நேர் கோட்டில் இருந்தால் தான் இடையில் வரும் தடைகளை முன் கூட்டியே அனுமானித்து அதனால் தடுக்க முடியும்.  அடிக்கடி பாதையை மாற்றிக் கொண்டே இருப்பது போல் உணவு, தூக்கம் மற்றும் அன்றாட செயல்பாடுகளுக்கான நேரம் ஷிப்ட் முறையில் மாறும்  போது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உடல் சந்திக்கிறது என்கிறார் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் எம்.ஜி.யுவராஜ்.

மேலும் இவர் கூறுகையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஷிப்ட் வேலை செய்யும் போது சர்க்கரை நோய்  தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் பகலில் வேலை மறு வாரம் இரவுப் பணி என  மாறும் போது சர்க்கரை நோய் தாக்கும். மாதத்திற்கு 4 நாட்கள் வரை இரவு ஷிப் வேலை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்னையால்  பாதிக்கப்படுகின்றனர்.

தூங்கும் நேரம் மாறும் போதும் இரவு நேரத்தில் கண் விழித்து வேலை பார்க்கும் போதும் ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால்  இன்சுலின் ஹார்மோன் வேலை செய்வது குறைகிறது. தூக்கம் கெடும் போது அதிக பசியைத் தூண்டுகிறது. இதன் காரணமாக அதிக உணவு எடுத்துக்  கொள்வதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. பகல் மற்றும் இரவு ஷிப்ட் என வேலை மாறுவதால் குறித்த நேரத்துக்கு உடற்பயிற்சி செய்ய  முடியாது. இரவு நேர வேலையால் உடற்பயிற்சி பாதிப்பதுடன் தூக்கம் கெட்டு மனக்குழப்பத்துக்கு ஆளாக நேரிடும். 

பகலில் வேலை பார்ப்பவர்கள் மாலை நேர ஷிப்ட் பார்க்கும் போது பெரிய பாதிப்பு ஏற்படாது. எனவே பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஒரே  ஷிப்ட் வேலை பார்ப்பது போல் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாமல் ஷிப்ட் வேலை பார்க்கும் சூழல் அமைந்து விட்டால் ஒரே  இடத்தில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. நடந்து கொண்டே வேலை பார்க்க வேண்டும். டீ, காபி, பிஸ்கட் ஆகியவற்றை தேவையற்ற நேரத்தில்  சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். வேலை நேரத்தில் டென்சன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்,” என்கிறார் யுவராஜ்.

1 comment:

  1. எந்த ஒரு மனிதனும், தன்னைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறுக்கவில்லை. கடவுல் இல்லை எனச் சொல்பவனும் தனது உதட்டளவில்தான் சொல்கிறான் என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படி இருக்க, யுவராஜ் அவர்களோ, 'யார் செய்தொ ப்ரொக்ரமோ' என எதுவும் தெரியாதவராக கேழ்வி எழுப்பியுள்ளார்.

    மனிதன் ஒருவாக்கும் ஒவ்வொரு பொருளும் இயற்கையை கவனித்துதான் செய்கிறான், கண்டுபிடிக்கிறான். அப்படியிருந்தும், இயற்கைக்கு சார்ந்து போகவேண்டிய மனிதன் இன்று இயற்கையை தனக்கு சாதகமாக மாற்றப் பார்க்கிறான். இதனால்தான் பல பிரச்னைகள் உருவாகிறது என்பதை அறிகிறானில்லை.

    இயற்கைக்கு மாற்றம் செய்யக் கூடாது என மனிதன் உணரும் போதுதான் அவனுக்கிடையில் நிம்மதி வரும்.

    ReplyDelete

Powered by Blogger.