Header Ads



பேஸ்புக்கினால் தற்கொலையான மாணவியின் சகோதரி பாடசாலை செல்ல மறுப்பு - அதிபருக்கு இடமாற்றம்

(Nf) 
பேஸ்புக் கணக்கொன்றில் காணப்பட்ட நிழற்படம் தொடர்பில் கண்டனத்திற்கு உள்ளானமைக்காக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் மாணவியின் சகோதரி பாடசாலைக்கு சமூகமளிப்பதை நிராகரித்து வருவதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

குருநாகல் ஜோன் கொத்தலாவல வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த தற்கொலை செய்துகொண்ட மாணவியின் இளைய சகோதரியும் அதே பாடசாலையின் 9 ஆம் தரத்தில் கல்வி பயில்கின்றார்.

தமது மூத்த மகளின் மரணம் நிகழ்ந்து 15 நாட்கள் கடந்துள்ள போதிலும், இளைய மகள் பாடசாலைக்கு சமூகமளிப்பதை தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலைக்கு சமூகமளிப்பதற்கான விருப்பம் தனக்கு இருக்கின்ற போதிலும், சம்பந்தப்பட்ட அதிபர் அந்த பாடசாலையில் இருக்கின்ற நிலையில், நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சம் தனக்கிருப்பதாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் இளைய சகோதரி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த குருநாகல் ஜோன் கொத்தலாவல வித்தியாலய அதிபர், பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டார்.

உயிரிழந்த மாணவியை கண்டித்து அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் வித்தியாலய அதிபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமையின் கீழ், தமது ஆலோசனைகளை கவனத்திற்கொள்ளாது பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.

சிறுவர் துன்புறுத்தல் சம்பவத்தின் அடிப்படையிலேயே அதிபர் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிட்ட அதிகார சபையின் தலைவர், தனது அறிவுக்கெட்டிய விடயங்களுக்கு புறம்பான ஒரு “பி” அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

ஆயினும், இந்த சம்பவம் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அதிகார சபையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அதன் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

மாணவியின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவியிருந்தமை மற்றும் பிணை வழங்கப்படுவதன் மூலம் சந்தேகநபர் மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபட ஏதுவாக அமைந்துவிடும் என்ற காரணங்கள் “பி” அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தம்மிக கமஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி பிணை வழங்கப்பட்டதன் பின்னர் அதிபர் பாடசாலைக்கு சென்று கூட்டம் நடத்திய பின்னர், பிற்பகல் 3.30 அளவிலேயே மாணவர்களை பாடசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளமை, அந்த மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருத்திற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என சட்டத்தரணி கூறினார்.

இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகின்ற போது, தனக்கு பிணை வழங்கப்படும் என்பதை அதிபர் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற சந்தேகம் எழுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

எத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், மாணவி மீது கடுமையாக நடந்துகொண்ட காரணத்திற்காகவே அதிபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ சிறுவர்களை துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது குற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் ஜோன் கொத்தலாவல வித்தியாலய அதிபரை வலயக் கல்வி அலுவலகமொன்றிற்கு இடமாற்றம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாகாணத்திலுள்ள அதிபர்களோ ஆசிரியர்களோ  மாணவர்கள் மீத தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்வார்களாயின், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்து :-

“பாடசாலைக்குள் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, அதிபரினால் ஏதேனும் தடை ஏற்படும் பட்சத்தில், அது பாரிய பிரச்சினையாக மாற்றமடையக் கூடும் என்பதால், குறித்த அதிபரை வலய அலுவலகமொன்றிற்கு மாற்றுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.ஏனெனில் இந்த பாடசாலையில் 5,000ற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.”

சமூக இணைத்தள பாவனை காரணமாக குருநாகல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயிரிழந்த சில தினங்களில், அதேபோன்ற மற்றுமொரு சம்பவம் காலி, எல்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது.

எல்பிட்டி, மன்னாகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த வருடத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றியிருந்த அவர், இம்முறையும் இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார்.

தனது பேஸ்புக் கணக்கில் தனது நிழற்படத்திற்குப் பதிலாக வேறொரு அழகிய யுவதியின் நிழற்படத்தை பதிவேற்றியிருந்தமையே இந்த யுவதியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.