சவுதி அரேபியாவில் இந்திய நர்ஸ் படுகொலை
சவுதி அரேபியாவில் ஒரு வீட்டில் நர்சாக வேலை பார்த்து வந்த இந்தியரை, அதே வீட்டில் வேலை பார்க்கும் ஆப்ரிக்கர் சரமாரி குத்தி கொன்றார். சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் ஒரு வீட்டில் ஆண் நர்சாக பணிபுரிந்து வந்தவர் ஹுசைன் சயீத். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவர், கடந்த 2 வருடங்களாக அங்கு பணியாற்றி வந்தார்.
அந்த வீட்டின் வேலைக்காரராக, ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த ஒருவர் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஹுசைனுக்கும் வீட்டு வேலைக்காரருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நடந்த மோதலில், ஹுசைனை வேலைக்காரர் சரமாரி குத்தி கொன்றார். இதுகுறித்து தகவல் கிடைத்த போலீசார், விரைந்து சென்று ஹுசைன் சடலத்தை கைப்பற்றினர். அவரை கொலை செய்த எத்தியோப்பியரையும் கைது செய்தனர்.
இந்தியர் கொலை தொடர்பாக கிழக்கு மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜியாத் கூறுகையில், ‘ஹுசைனின் மார்பின் இடது பக்கத்தில் ஆழமான காயங்கள் உள்ளன. வீட்டில் ஏற்பட்ட தகராறில் கூர்மையான பொருளால் ஹுசைனை எத்தியோப்பியர் குத்தி உள்ளார். தகராறுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றார்.
Post a Comment