பங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு நிசாம் காரியப்பருடன் சந்திப்பு
(ஏ.எல்.ஜுனைதீன்)
பங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழுவொன்று நேற்று புதன்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்து மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
பங்களாதேஷ் சிக்காகொங்க் பில்ட்ரக் விவகார அமைச்சின் இணைச் செயலாளர் பசுதெக் அஜ்ஜர்ஜீ தலைமையில் வருகை தந்த இக் குழுவினர், யுத்தத்திற்குப் பின்னர் கல்முனைப் பிராந்திய மாகாண மக்களின் கல்வி, கலாசார, சமூக, பெண்கள், மற்றும் சிறுவர்களின் நிலை குறித்தும் உட்கட்டுமான அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றியும் முதல்வரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் அவை தொடர்பில் தமது நாடு கைக்கொள்ள வேண்டிய பொறிமுறை பற்றியும் கலந்துரையாடினர்.
பங்களாதேஷில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிக்காகொங்க் நகரை மீளக் கட்டியெலுப்புவதர்கு இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்த இத்தூதுக் குழுவினர், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்று பாரிய அழிவுகள் ஏற்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் அவற்றை குறுகிய காலத்திற்குள் புனரமைப்பு செய்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதை தமது விஜயத்தின் போது அறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
தாம் இலங்கைப் பாராளுமன்றம் மற்றும் முக்கிய அமைச்சுகளுக்கும் வட மாகாணத்திற்கும் விஜயம் செய்ததாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
தமது விஜயத்தின் நினைவாக முதல்வர் நிசாம் காரியப்பருக்கு தூதுக் குழுவினர் நினைவுச் சின்னமொன்றை வழங்கி கௌரவித்தனர். யுனிசெப் அனுசரணையுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள இக் குழுவினரின் கள விஜயத்தை கலாநிதி எஸ்.எல்.றியாஸ் நெறிப்படுத்தினார். இக்குழுவில் பங்களாதேஷ் சிக்காகொங்க் பில்ட்ரக் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர்களும் மற்றும் உயர் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
Post a Comment