Header Ads



விலைவாசி அதிகரிப்பானது மனிதனை, நாயை விட மோசமான கீழ்நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது - ரோசி

நாய்களுக்கான உணவுகளின் விலைகளையும் வரியையும் குறைத்த அரசாங்கம் பிள்ளைகளுக்கான பால்மாவின் விலையை அதிகரித்து மனிதனை நாயை விட மோசமான கீழ்நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது என ஐ.தே.கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்கா தெரிவித்தார்.

இதனை எதிர்த்து இன்று திங்கட்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு புறக்கோட்டையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் அனைத்து தாய்மாரும் இதில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

ஐ.தே. கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரோசி சேனாநாயக எம்.பி. இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

400 கிராம் பால்மாவின் விலையை ரூபா 61 ஆலும் 1கிலோ பால்மாவின் விலையை ரூபா 152 ஆலும் அதிகரித்து பிள்ளைகளினதும் பெற்றோரினதும் வயிற்றில் அரசாங்கம் அடித்துள்ளது.

இன்றும் நாட்டில் வறுமை நிலை நூற்றுக்கு 26 வீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் உண்பதற்கு உணவின்றி தனது நான்கு பிள்ளைகளுக்கு பாகற்காய் அவித்து உணவாக கொடுத்து தாமும் உட்கொண்ட பெற்றோரும் பிள்ளைகளும் கண்டு பிடிக்கப்பட்டனர்.

பாதணிகள் இல்லாமல் பாடசாலை செல்ல முடியாமல் பிள்ளைகள் பரிதவிக்கின்றனர். வடக்கு, கிழக்கு ,தெற்கு என மாகாணங்களில் பெரும்பாலான பிள்ளைகள் போஷாக்கின்மையால் பாதிப்புற்றிருக்கின்றனர்.

நிறை குறைந்த பிள்ளைகள் பிறக்கின்றன. ஆனால் இந்த நிலைமைகள் எதனையும் தெரிந்து கொள்ளாமல் அமைச்சர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர்.

நாய்களுக்கான உணவு வகைகள் மற்றும் அதன் வரிகளை குறைத்து நாய்களுக்கு சலுகைகளை வழங்கிய அரசாங்கம் எமது நாட்டு பிள்ளைகளை நாய்களை மதிக்கும் விதத்தில் கூட மதிக்காது பால்மாக்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் பெற்றோர்கள் மட்டுமல்ல பிள்ளைகளின் வயிற்றிலும் அரசாங்கம் அடித்துள்ளது. தேர்தல்கள் முடிந்ததும் பால் மாக்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாது கேஸின் விலையும் அதிகரிக்கும்.

எனவே மக்களை வாழ விடாது வாழ்க்கை செலவை அதிகரித்து நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ள அரசாங்கத்திற்கு பதிலடி வழங்கி வீட்டுக்கு அனுப்ப தற்போது மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அது தான் மேல் மாகாண தென் மாகாண சபைத் தேர்தல்களாகும். இதில் மக்கள் தமது ஆயுதமான வாக்குப் பலத்தை பாவித்து அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும்.

இன்றும் நாட்டில் பால் மாவை வாங்குவதற்கு அதிக பணம் தேவைப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு அடி தூரத்திற்கு ஹெரோயின் போதைப் பொருளை குறைந்த விலையில் வாங்க கூடியதாக இருக்கின்றது.

ஆசியாவின் ஆச்சரியமாக அல்ல ஆசியாவின் போதைவஸ்து மத்திய நிலையமாக இலங்கை மாறி வருகின்றது. எனவே பிள்ளைகளின் பால்மாக்களின் விலைகளை அதிகரித்ததை எதிர்த்து நாளை (இன்று) திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு பிட்ட கோட்டேயில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளோம்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தாய்மார் அனைவரும் கலந்து கொண்டு அரசுக்கு தமது எதிர்ப்பையும் எச்சரிக்கையையும் விடுக்க வேண்டுமென்றும் ரோசி சேனாநாயக எம்.பி. தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.