கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதியை வர்த்தமானிப் பிரகடனம் செய்ய வேண்டியது காலத்தின் தேவை
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதி என அழைக்கப்பட்டு வருகின்ற பாதையின் பெயரை வர்த்தமானிப் பிரகடனம் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று கல்முனை தீனத் பௌன்டேசன் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பின் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் முபாரிஸ் எம்.ஹனிபா ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
"கல்முனைக்குடி- 01 , 02 மற்றும் கல்முனை- 3 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கிடையில் பிரதான வீதியில் ஆரம்பித்து மத்திய கடற்கரை வீதியை குறுக்கறுத்துச் சென்று கிழக்குக் கடற்கரை வீதியில் முடிவடைகின்ற வீதியின் பெயரினை வர்த்தமானி பிரகடனம் செய்வதற்கு கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிசாம் காரியப்பரினால் முன்மொழியப்பட்ட பிரேரனை தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தவறான ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருவதானது பெரும் வேதனையளிக்கின்றது.
குறித்த வீதியில் இருபுறங்களிலும் நூறு சதவீத பூர்வீக முஸ்லிம் குடியிருப்பாளர்களாக வசிக்கின்ற மக்களாகிய நாம் பல தசாப்தங்களுக்கு மேலாக சகல அன்றாடத் தேவைகளிலும், ஆவணங்களிலும் கடற்கரைப் பள்ளிவாயல் வீதியென்றே பயன்படுத்தி வருகின்றோம். நாங்கள் அதனை சட்டரீதியில் பதிவு செய்ய முற்படுகையில் இவர்கள் தடுக்க முயற்சிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
கல்முனையில் வெறுமனே இருபத்தியொன்பது சதவீதம் வாழுகின்ற தமிழ் மக்கள் தங்களுக்கு என ஓர் பிரதேச செயலகம் வேண்டுமென்று போராட்டம் நடத்துகையில் குறித்த வீதியில் நூறு சதவீதம் வாழும் முஸ்லிம் மக்கள் தாங்கள் பயன்படுத்தி வழக்கப்படுத்திக் கொண்ட பெயரினை பதிவு செய்ய முற்படுகையில் இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை.
மேலும் இவர்கள் தாமாகவே தவறான வரலாற்றைப் புனைந்து அதனையே அனைத்து ஊடகங்களிலும் மேற்கோள்காட்டி வருகின்றார்கள்.
மாநார சபை எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தரவைப்பிள்ளையார் ஆலயம் முந்நூறு வருடம் பழமை வாய்ந்தது என்றும், எதிர்க்கட்சி உறுப்பினர் கமலதாசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஐந்நூறு வருடம் பழமை வாய்ந்தது என்றும், இன்னுமொருவர் நாநூறு வருடம் பழமைவாய்ந்தது என்றும் வெவ்வேறான வரலாற்றைப் புனைந்து கூறுவது அபத்தமாகும்.
இந்நிலையில் இவ்வீதி தோற்றம் பெற்ற வரலாற்றை பார்ப்போமேயானால்;;; இவ்வீதிக்கு அப்பால் பிரதான வீதியில் காணப்படுகின்ற தரவைப்பிள்ளையார் ஆலயமும், இவ்வீதியின் முடிவில் காணப்படுகின்ற கடற்கரைப் பள்ளிவாயலும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் (1930 வரைக்கும்) குறித்த வீதியானது பிரதான வீதியில் ஆரம்பித்து வெறும் 150 மீற்றர் நீளமுடையதாகவே இவ்வீதி காணப்பட்டது. அதனால் இவ்வீதியின் கிழக்கு கடற்கரைப் பக்கமாக உள்ள கடற்கரைப் பள்ளிவாயல் சென்று முஸ்லிம் மக்கள் தனது மார்க்க வணக்கங்களை மேற்கொள்வதற்கு காடு வழி சென்று தங்களது மார்க்க கடமையை மேற்கொள்ள வேண்டிய துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இதனால் அவ்வீதியில் வசித்த முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து காடு வெட்டி கடற்கரைப் பள்ளிவாயல் வரைக்கும் வீதி அமைத்தார்கள். இதன்போது 150 மீற்றர் நீளமுடைய வீதியை 987 மீற்றர் நீளமுடைய வீதியாக மாற்றியமைத்தார்கள்.
எனவே இவ்வீதி உருவாக்கப்பட்டதன் நோக்கமே கடற்கரைப் பள்ளிவாயலை சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் என்கின்ற உண்மை புலனாகிறது.
மேலும் முழு வீதியாய் உருவாக்கியவர்களும் இவ்வீதியில் பூர்வீகமாக வசித்து வருபவர்களும் அவ்வீதிக்கு பெயர் பதிவு செய்ய முற்படுகையில் இவர்களைத் தடுக்க முற்படுவதானது பிள்ளையை பெற்றெடுத்து வளர்த்தவன் பிள்ளைக்கு பொருத்தமான பெயர் வைக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் வேண்டாமென்று தடுத்தாற்போல் வேடிக்கையாக உள்ளது.
மேலும் கல்முனை– 03 இல் காணப்படுகின்ற மாதவன் வீதி, மாரியார் வீதி, சின்னத்தம்பி வீதி ஆகியவற்றினில் முஸ்லிம் மக்கள் எழுபத்தியைந்து வீதத்திற்கும் அதிகமாக செறிந்து வாழ்கின்ற போதிலும் மேற்படி வீதிகளை முஸ்லிம் கலாசாரம் தொணிக்கும் பெயர்களைக் கொண்டு மாற்றியமைக்க நாங்கள் இதுகால்வரையும் கிஞ்சித்தும் முயற்சி செய்யவுமில்லை, இனி செய்யப் போவதுமில்லை.
காரணம் நாங்கள் இன ரீதியாக சிந்தித்து செயற்படக் கூடியவர்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களுடன் சிறந்த பரஸ்பரத்துடனும், விட்டுக்கொடுப்புடனும் வாழ்ந்து வருகின்றோம் என்பதற்கு இத்தகைய நிகழ்வானது பெரும் சான்று பகரும்.
அதேவேளை கடற்கரைப் பள்ளிவாயல் வீதிக்கு பெயர் சூட்டுதலானது காலத்தின் தேவையாகும். ஏனெனில் இவ்வீதியினை இம்மக்கள் கடற்கரைப் பள்ளிவாயல் வீதி என பெயர் கொண்டழைக்க காரணமாக இருக்கின்ற இவ்வீதியில் காணப்படுகின்ற மிக பிரசித்தி பெற்ற முஸ்லிம்களின் சமய வழிபாட்டு புனித தலமான கடற்கரைப் பள்ளிவாயல் அமைந்துள்ளமையாகும்.
நீண்ட வரலாற்றுச் சிறப்புடைய இப்பள்ளிவாயலில் இஸ்லாமிய மதப்பெரியாரின் நினைவாக வருடா வருடம் கொடியேற்று விழாவும் நடைபெற்று வருகின்றது.
இப்புனிதமிகு கொடியேற்று விழா இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானி பத்திரிகையின் பிரகாரம் தேசிய விழாவாக பிரகடனப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
இப்புனிதமிகு விழாவிற்கு இலங்கை திருநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல இலட்சக்கனக்கான பக்தர்கள் வருகை தருவதோடு இவ்வீதியில் கடற்கரைப்பள்ளி வாயல் வீதி எனும் பெயர் நாமம் பொறிக்கப்பட்ட ஒரு நிலையான பெயர்ப் பலகை இல்லாத காரணத்தினால் பக்தர்கள் இவ் வீதியை இனங்காண்பதில் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஆக இத்தகைய நியாயபூர்வமான காரணங்களுக்காகவே குறித்த வீதியின் பெயரை வர்த்தமானி பிரகடனம் செய்ய முயற்ச்சிக்கின்றோமே ஒழிய வேறு எந்த காரணங்களுக்காகவும் அல்ல என்பதை தமிழ் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
மேலும் மாநகர கட்டளைச் சட்டத்தின் படி ஒரு வீதிக்கு பெயர் சூட்டுவதற்கு குறித்த வீதியில் வசிக்கும் மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெறுதல் அவசியமாகும்.
இதன் பிரகாரம் இவ்வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் குறித்த வீதியில் வாழும் நூறு சதவீத மக்களும் விரும்புகின்ற- அவர்கள் பயன்படுத்தி வழக்கமாக்கிக் கொண்ட பெயரினை பதிவு செய்தல்தான் ஜனநாயகமும் தர்மமும் ஆகும்" என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம் குறித்த அறிக்கை ஊடாகவே இதன் வரலாற்று பதிவை அறியக்குடியதாக உள்ளது நன்றி முபாரிஸ் M.ஹனிபா
ReplyDeleteBy:A.L.Jahan
From: Doha-Qatar