கடனாகப் பெறப்பட்ட பாண்டா கரடிகள்
அருகிவரும் உயிரினங்களில் ஒன்றான பாண்டா கரடிகள் சீனாவின் காடுகளில் 1,600 என்ற எண்ணிக்கையிலும், உலகின் பிற இடங்களில் கூண்டுகளில் அடைக்கப்பட்டவிதத்தில் 40 கரடிகளும் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் பெல்ஜியம் நாடு தங்கள் நாட்டு மக்களுக்காக இரண்டு பாண்டா கரடிகளை 15 ஆண்டுகளுக்கு கடனாக சீனாவிடமிருந்து வரவழைத்துள்ளது. தலா 110 கிலோ எடை கொண்ட இரண்டு கரடிகள் இன்று பிரதமர் எலியோ டி ரூபோ ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளின் வரவேற்பிற்கு மத்தியில் பெல்ஜியம் வந்திறங்கின. கார்கோ விமானத்தில் வந்திறங்கிய இந்தக் கரடிகளை அரசு அதிகாரிகள் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும் விமான நிலையத்திற்கு அருகில் இருந்த பள்ளி ஒன்றின் மாணவர்களும் வரவேற்றனர்.
இவற்றில் ஒன்று நான்கு வயதான பெண் கரடியாகும். நட்பு என்ற பொருள் கொண்ட ஹவூ ஹவூ என்ற பெயர் பெண் கரடிக்கும், ஒளிரும் நட்சத்திரம் என்ற பொருள்படும் சிங் ஹுயி என்ற பெயர் ஆண் கரடிக்கும் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரு கரடிகளும் வரவேற்பிற்கு பின்னர் தலைநகர் பிரஸ்ஸல்ஸிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புருகெல்லட் என்ற பகுதியில் உள்ள பெய்ரி டெய்சா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு 10 மில்லியன் யூரோ செலவில் சைனா கார்டன் என்ற பெயரில் குளம், குகை மற்றும் மூங்கில் தோட்டங்கள் அடங்கிய தங்குமிடம் ஒன்று இவற்றுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை புதிய சூழ்நிலைக்குப் பழகுவதற்காக இந்தக் கரடிகள் தனிமைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் அறிவிப்பு செய்திருந்தனர். இருப்பினும், இவற்றின் வருகையை முன்னிட்டு இன்று அந்த பூங்காவின் அனுமதி டிக்கட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்திருந்தன.
இந்த பாண்டா கரடிகளுக்காக பெல்ஜியம் ஆண்டுதோறும் சீனாவிற்கு ஒரு மில்லியன் யூரோக்களை வழங்க உள்ளதாகக் குறிப்பிடும் பெல்ஜியம் பத்திரிகைகள் சீனாவிற்கு இந்தத் தொகை தூதரகம் மற்றும் வருவாய் அளவிலான ஒரு மதிப்பு மிக்க தொகையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
Post a Comment