புல்மோட்டை முஸ்லிம்களும், முஸ்லிம் காங்கிரஸும் (படங்கள்)
கொக்கிளாய் கடல் ஏரியில் மீன்பிடித்தலில் ஈடுபடும் ஏனைய பிரதேச மீனவர்களின் சட்டவிரோத முறைகளையும் தடை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால், தாமும் சட்டபூர்வமான மீன்பிடி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட இணங்க முடியுமென புல்மோட்டை மீனவர்கள் கூறியதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.
நீதி அமைச்சர் ஹக்கீம் சனிக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்த போது அன்றைய தினம் தாம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்ததால், அந்த விஜயத்தில் தம்மால் இணைந்துகொள்ள இயலாது போனதால், அங்கு சென்று மீனவர்களை சந்திக்குமாறு தமது கட்சியின் தலைவர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, மறுநாள் தாம் அங்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மீனவர்களுடன் கலந்துரையாடிய பொழுது அவரது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப, புதிய அணுகுமுறையைப் பற்றி தீர்மானிக்கப்பட்டதாகவும் எம்.எஸ். தௌபீக், எம்.பி. மேலும் தெரிவித்தார்.
புல்மோட்டை பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தடையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்த விவகாரம் அண்மைக் காலமாக பெரிதும் சூடுபிடித்திருந்தது. மீனவர்கள் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டிருந்ததால் வறுமையால் வாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
புல்மோட்டை, கொக்கிளாய், கடல் ஏரியில் மீன்பிடித்தலில் ஈடுபடும் மீனவர்கள் சட்ட விரோதமான முறைகளை கையாள்வதாக கூறி, அவ்வாறான மீன்பிடித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உகந்த மாற்று வழிவகைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான உபகரணங்களையும், தேவையான பொருட்களையும் மீன்பிடி அமைச்சின் ஊடாக வழங்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தும் படி நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மீன்பிடி, கடற்றொழில் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் வலியுறுத்தியிருந்தார்.
புல்மோட்டை மீனவர்கள் தமக்கு எதிரான தடையை நீக்குமாறும், தம்மை கைது செய்வதை நிறுத்துமாறும் கோரி சில நாட்களாக ஆர்ப்பாட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நீதியமைச்சர் ஹக்கீம் அங்கு நேரில் சென்று அதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து நிலைமையை அவதானித்தார். புல்மோட்டை, திருகோணமலை சந்தியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றினார். அத்துடன் உடனடியாகவே அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மீனவர்களுடனான இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் முபாரக், பிரதித் தலைவர் தௌபீக், பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அமைச்சர்கள் ஹக்கீம், ராஜித சேனாரத்ன ஆகியோருக்கிடையிலான நீண்ட தொலைபேசி உரையாடலை அடுத்து, மீண்டும் கொழும்பில் சந்தித்து இதுபற்றி விரிவாக கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவை கூடியிருந்த மக்கள் மத்தியில் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் உண்ணாவிரதத்தையும், பகிஷ்கரிப்பையும் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஆகியோர் புல்மோட்டை பிரதேச மீனவர்களுடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இந்த விவகாரம் தொடர்பில் அண்மையில் அவரது அமைச்சில் இருமுறை சந்தித்து உரையாடியதும் குறிப்பிடத்தக்கது. பிராந்தியத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் உட்பட மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகளையும் அமைச்சர் ஹக்கீமும் குழுவினரும் ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்தனர்.
நீர்கொழும்பு போன்ற தூரப் பிரதேசங்களிலிருந்து மீனவர்கள் கொக்கிளாய் களப்பு பிரதேசத்திற்கு வந்து, தங்கியிருந்து சட்ட விரோதமான முறைகளை கையாண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க, புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டும் தொழில் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment