Header Ads



'தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு'

மனிதர்கள், விலங்குகளைப் போலவே, தாவரங்களுக்கும் நினைவாற்றல் இருப்பதாக, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின், உயிரியல் பரிமாணங்கள் பற்றிய ஆய்வாளர்கள், தாவரங்களின் கற்கும் திறன் பற்றிய ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

விலங்குகளுக்கு மூளை:

இதுகுறித்து, ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

பொதுவாக, விலங்குகள் மனிதர்களைப் போலவே, கற்கும் திறன் படைத்தவை. விலங்குகளுக்கு மூளை இருப்பதால், இயற்கையாக கற்கும் செயல்களையும், மனிதர்களால் கற்பிக்கப்படும் செயல்களையும், அவை மீண்டும் நினைவு கூர்ந்து செயலாற்றுகின்றன. இதன் மூலம் விலங்குகளுக்கு நினைவாற்றல், கற்கும் திறன் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாவரங்களும் நினைவாற்றல் பெற்றுள்ளன. தாவரங்களுக்கு மூளை கிடையாது. எனினும், தாவரங்கள் இயற்கையால் தங்களுக்கு நேரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அதற்கேற்ப செயல்படுகின்றன. அதேபோல், தாவரங்களுக்கு கற்கும் திறனும் உண்டு. தாவரங்களில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. ஒரு தாவரத்தை குறிப்பிட்ட கலனில் வைத்து, நீரில் மூழ்கடித்தோம். நீரில் மூழ்குவதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, அத்தாவரம், தன் இலைகளை சுருக்கிக் கொண்டது. நீரிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இலைகள் மீண்டும் பழைய நிலையை அடைந்தன. இதேபோல் மீண்டும் மீண்டும் செய்த போது, ஒரு குறிப்பிட்ட முறைக்கு மேல், அத்தாவரம், நீரில் மூழ்கடிக்கும் போதும், அதன் இலைகளை சுருக்கிக் கொள்ளவில்லை. முதல் முறை புதிய நிகழ்வு நடக்கும்போது, இடர்பாட்டிலிருந்து தன்னை காத்துக்கொள்ள தாவரம் இலையை சுருக்கியது. அதே நிகழ்வு மீண்டும் மீண்டும் நிகழ்ந்ததால், அதில் ஆபத்து இல்லை என உணர்ந்த அத்தாவரம், இலைகளை சுருக்குவதை நிறுத்திக் கொண்டது. இதேபோல், தாவரங்களின் கற்கும் திறன் குறித்தும், சில சோதனைகள் நடத்தப்பட்டன.

வியப்பு:

வெவ்வேறு பருவநிலைகளில், வெவ்வேறு சுற்றுச் சூழலுக்கு ஏற்ப தாவரங்களின் கற்கும் திறன், நினைவாற்றல் மாறுபடுகிறது. இது ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தாவரங்கள் பற்றிய மேலும் சில ஆய்வுகளுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறபப்பட்டுள்ளது.

1 comment:

  1. this is good news to proof , that not only prohibit the animal sacrifice but also plants. So for Buddhist nothing remaining to eat.

    ReplyDelete

Powered by Blogger.