Header Ads



”மெல் குணசேகர என்னை அடையாளம் கண்டதால் கொலை செய்தேன்” கெலையாளி தெரிவிப்பு

(Nf)  சுதந்திர ஊடகவியலாளரான மெல் குணசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை 48 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சுதந்திர ஊடகவியலாளரான மெல் குணகேரவின் இறுதி கிரியைகள் நாளை பொரளை மயானத்தில் நடைபெறவுள்ளன.

சுதந்திர ஊடகவியலாளரான மெல் குணசேகர, பத்தரமுல்லை பகுதியிலுள்ள அவரது வீட்டின் சமையலறையில் அவரது வீட்டில் பணியாற்றிய நிறபூச்சு பூசும் நபரினால் நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தொம்பே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலையாளி, மெல் குணசேகரவின் வீட்டை நோக்கி பயணித்த காட்சிகள், அயல் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராக்களில் பதிவாகியிருந்தது.

இதற்கமைய அவர் பிரதான சந்தேகநபராக பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், மெல் குணசேகரவின் உறவினர்களிடமிருந்து குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டு, தொலைத்தொடர்பு கோபுரத்தின் தொலைபேசி அலைவரிசையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஞாயிற்றுகிழமைகளில் வீட்டின் உரிமையாளர்கள், மத வழிபாடுகளுக்காக செல்கின்றமையை அவதானித்ததன் பின்னர், வீட்டிலுள்ள பொருட்களை கொள்ளையிட நேற்றைய தினம் வந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பின்புற கதவின் ஊடாக வீட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த வேளையில், சமையலறையில் இருந்த மெல் குணசேகர தன்னை அடையாளம் கண்டுக்கொண்டதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, தான் அவரை கொலை செய்துள்ளதாகவும் சந்தேகநபர் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளார்.

மெல் குணசேகரவின் கழுத்து பகுதியில் இரண்டு கூரிய ஆயுதங்களால் 6 வெட்டுக்கள் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரின் ஆடையில் இரத்த கறைகள் படிந்தமையினால், மெல் குணசேகரவின் சகோதரனது ஆடையை அணிந்து, மெல் குணசேகரவின் கையடக்கத் தொலைபேசி மற்றும் 1,200 ரூபா பணத்தை சந்தேகநபர் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

நேற்றிரவு 8.30 மணியளவில் கொலையாளி கைது செய்யப்பட்ட அதேவேளை, சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மெல் குணசேகர ஒரு பார்வை

1973ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி பிறந்த மெல் குணசேகர, கொழும்பு புனித பிரிட்ஜட்ஸ் பாடசாலையில் கல்வி பயின்ற மெல் குணசேகர, பின்னர், ஈஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியை தொடர்ந்தார்.

1997 ஆம் ஆண்டு ஊடகவியலாளராக சன்டே டைம்ஸ் – லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் ஆகிய ஊடக நிறுவனங்களில் கடமையாற்றினார்.

2012ஆம் ஆண்டு வரையான ஐந்து வருட காலம் பிரான்ஸ் செய்தி சேவையில் கடமையாற்றிய மெல் குணசேகர, சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தனது 40ஆவது வயதிலே மெல் குணசேக்கர கொலை செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.