சகல சமூகத்தினருக்கும் பயன்தரத்தக்க நீதி முறைமையை நடைமுறைப்படுத்த கூடுதல் கரிசனை
வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதனூடாக காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதற்கு ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் முன் வந்திருப்பதாகவும் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சட்ட அமுலாக்கம், நீதியைப் பெறும் வழிமுறைகள் மற்றும் சமூக இணைப்பைப் பலப்படுத்தல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு புதன் கிழமை (12) முற்பகல் சர்வதேச தொடர்புகளுக்கும் உபாயங்களுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்ற பொழுது உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன,
நாட்டில் செயற்திறன் மிக்கதும், பாரபட்சமற்றதும் சகல சமூகத்தினருக்கும் பயன்தரத்தக்கதுமான நீதி முறைமையை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் கரிசனை செலுத்தப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (ருNனுP) நாட்டின் சகலரும் நீதியைப் பெறுவதற்கான வழிமுறைகளை சரிவர அடைந்து கொள்வதற்காக நீதியமைச்சு உட்பட புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு என்பவற்றின் ஊடாக சிறப்பான செயல்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
சட்ட உதவி வழங்கல், மத்தியஸ்தம் செய்து வைத்தல் என்பவற்றுக்கான ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. தேசிய சட்ட உதவி கொள்கையை வகுப்பதிலும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் உரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது.
2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு மக்களுக்கு சட்ட உதவி சென்றடைவது பற்றிய பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பல குறைபாடுகளும் அவ் ஆய்வின் மூலம் இனங்காணப்பட்டது.
மக்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் தரப்பினரான பெண்கள் சிறுவர் சிறுமியர் ஆகியோர் உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வது பற்றியும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் காணி சம்பந்தமாக எழும் பிரச்சினைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதனூடாக காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும்.
அமைச்சின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதாக ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இணக்கம் தெரிவித்திருக்கிறது.
பாலியல் மற்றும் அது தொடர்பான வன்முறைகள் பற்றி அரச மற்றும் அரச சார்பற்ற கொள்கை வகுப்பாளர்கள் தங்களுக்கிடையே பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்வது பற்றியும் உரிய கவனம் செலுத்தப்படுகின்றது. அதற்கான தகவல் திரட்டல், ஆக்கத் திறன், கொள்கை வகுத்தல் என்பன பற்றி ஆராயப்படுகின்றது.
இன்னும் இரண்டு முக்கிய விடயங்கள் பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நான் கருதுகிறேன்.
இலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்தின் அங்கமான ஒரு சாரார் தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசின் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு என்பன பற்றி அதிகம் வலிறுயுத்தி வருகின்றனர்.
நல்லிணக்கம் என்பது ஒன்றுபடுதல் என்ற பொருளைத் தருகின்றது. இன்றைய சூழ்நிலையில் அது மீள ஒன்றிணைதல் என்ற தார்மீக பொருளையும் உள்ளடக்கியுள்ளது. வௌவேறு தரப்பினர் இதற்கு தமக்கு சார்பான விதத்தில் வரைவிலக்கணம் செய்கின்றனர். முன்னர் ஒன்றாக வாழ்ந்து பின்னர் வேறுவேறாக பிரிந்து நிற்பவர்களை மீண்டும் ஒன்றிணைப்பது என்பதுவே உண்மையாகும்.
பொறுப்புக் கூறுவது என்பது ஒரு கொள்கையல்ல. சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களின் படி அது ஒரு கடமையாகும். பொறுப்புக் கூறுவது என்பது அரசியல், சட்ட மற்றும் தார்மீக பொறுப்பேற்றல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடந்த காலங்களில் நிகழ்ந்த செயல்களைப் பொறுத்தவரை மனித உரிமைகளின் அடிப்படையில் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு உள்ளது.
இங்கு வந்துள்ள ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹேயோலியங் க்யூ அவரிடம் ஊடகவியலாளர் சிலர் கேட்டிருக்க கூடாத சில கேள்விகளை எழுப்பி, அவரிடமிருந்து இராஜதந்திர ரீதியாக குறிப்பிட முடியாத சில விடயங்களை அறிந்துகொள்ள எத்தனித்ததாக எங்களிடம் கூறினார்.
இலங்கையில் எங்களுக்கு ஒர் ஊடக கலாசாரம் உண்டு. அது இயன்றவரை பேணப்பட்டு வருகின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் கூட துருவப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே விதமான செய்தி அது எந்த மொழியில் கூறப்படுகிறதோ அதற்கு அமைவாக தேவையைப் பொறுத்து வித்தியாசமான தலைப்புகளுடன் கையாளப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எனது சகாவான தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார உரிய கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனூடாக இந்த இடைவெளியை இணைக்கின்ற பாலமாக அவர் விளங்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்.
நீதியைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்பதற்கான முன்னைய இரண்டு திட்டங்களையும் அடுத்து இந்தச் செயல் திட்டம் தொடர்கின்றது. அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேச்சுவார்த்தைகளின் ஊடாக இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு இந்தச் செயல்திட்டமும் உதவியது.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் அரசாங்கக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். இழுபறி நீடித்து காலப்போக்கில் அந்த அமைப்பு இராணுவ ரீதியாக ஒழிக்கப்படும் நிலைமை ஏற்பட்டது.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இவ்வாறான காலத்திற்கேற்ற நவீன அணுகுமுறைகளின் ஊடாக உரிய தீர்வுகளை காணக்கூடியதாக இருக்கும். அதன் பயனாக இந் நாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதற்கு வழி பிறக்கும் என நம்புகின்றேன்.
வெளிநாட்டு தூதுவர்களும், உயர் ஸ்தானிகர்களும், அதிதிகளும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹேயோலியங் க்யூ பிரதான உரையாற்றினார். அத்துடன் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் சந்திரசிரி முத்துகுமாரண, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எரிக் இளையபராச்சி ஆகியோரும் உரையாற்றினர்.
DEAR MR. HAKEEM,'உங்களால் முடியும்' என்று நீங்கள் நினைப்பதை மட்டும்தான் 'அறிக்கை'களாக வெளியிடுமாறு வேண்டிக்கொள்கிறோம். சொல்லில் இருப்பதைவிட செயலில் காட்டுவது தான் சாலச்சிறந்தது. ஆழும் கட்சிக்கு முக்கியத்துவமில்லாத உங்களால் நினைத்ததை சாதித்து விடமுடியும் என்று நினைப்பது ஒரு 'பகல் கனவாக' தெரியவில்லையா...????
ReplyDelete