சமூகங்களை பிளவுபடுத்தும் ஆயுதமாக சில ஊடகங்கள் எம்மை சித்தரிக்கின்றன - றிசாத் பதியுதீன்
தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டுவருகின்ற போது அதனை பிழையாக காண்பித்து எம்மை சமூகங்களை பிளவுபடுத்தும் ஆயுதமாக சில ஊடகங்கள் தொடராக சித்தரித்துவருகின்றது என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதை ஏன் இந்த சக்திகள் விரும்புவதில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.
தமது சொந்த ஊரான மன்னார் தாராபுரம் அல்மினா பாடசாலையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் எம்.ஜபருள்ளா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் நகர சபை உறுப்பினர் நகுசீன்,மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான்,டாக்டர் மகேந்திரன் ,முசலி பிரதேச சபை உறுப்பினர் சுபியான் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது –
நாங்கள் ஏற்றுக் கொண்டு பின்பற்றுகின்ற இஸ்லாம் மதம் மனிதர்களுக்கு உதவி செய்யுமாறே கூறுகின்றது.அந்த அடிப்படையில் நாங்கள் இனம்,மதம்,பார்த்து பணியாற்றுவதில்லை.பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனை செய்ய வேண்டுமோ அதனையே செய்து வருகின்றறோம்.இதனை தாங்கிக் கொள்ள முடியாத சக்திகள் இனங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவிக்க முயல்கின்றனர்.
வடக்கில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக 3 இலட்சம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வவுனியாவுக்கு வந்தனர்.அவர்கள் வந்த போது அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுத்தோம்.அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்தோம்.நலன் புரி முகாமில் இருந்த கல்வி பொதுத்தராதர உயர் தரம் கற்கும் மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்ய வேண்டும் என்பதற்காக கொழும்பிலிருந்து சிறந்த ஆசிரியர்களை அழைத்து வந்து அவர்களது கல்வி மேம்பாடுகளுக்கு உதவிகளை வழங்கினோம்.அதே போல் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களது வாழ்வாதார வசதிகள்,மற்றும் வீடமைப்பு உதவிகள் என்பவைகளை வழங்கி சொந்த மண்ணில் மீள்குடியேற்றினோம்.இவ்வாறு நாம் இனவாதமற்று மனித நேயத்துடன் செய்த இந்த பணிகளை தமிழ் மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.தமிழ் சகோதரர்கள் எம்முடன் இணைந்து மக்களுக்கான பணிகளை செய்கின்ற போது அவர்களையும் விமர்சிக்கின்றனர்.
1990 ஆம் ஆண்டு இங்கிருந்து நாம் வெளியேற்றப்பட்டோம்,32அகதி முகாம்களில் எமது மக்கள் பெரும் அவலத்துடன் வாழ்ந்தார்கள். தற்போது அவர்கள் மீள்குடியேற வந்த போதும் அவர்களுக்கான வசதிகள் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய முனையும் போது என்னை இனவாதியாக காட்டும் படலத்தை அரங்கேற்றிவருகின்றனர்.இந்த வன்னி மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையினை நான் பாதுகாத்தவருகின்றேன்.
நான் பட்ட கஷ்டங்களும்,துன்பங்களும் இந்த மாணவ சமூகம் படக் கூடாது,இந்த அரசாங்கம் மாணவர்களின் கல்வி மேம்பாடு தொ்டர்பில் அதிகமான கவனத்தை செலுத்திவருகின்றது.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் என்னிடம் சமர்ப்பிக்கப்படுகின்ற எல்லா திட்டங்களுக்கும் அனுமதியினை வழங்கி வருகின்றேன்.இதில் எவ்வித இனபாகுபாடுகளும் பார்க்கப்படுவதில்லை.எமது மாவட்ட மாணவர்கள் கல்வித் துறையில் அதி கூடிய நிலையினை அடைவதுடன்,துறைசார்ந்தவர்களாக உருவாக வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும்.
மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் சியான் அவர்கள் இன்னும் வார வகுப்புகளுக்கு சென்று தமது மேற்படிப்பினை மேற்கொள்கின்றார்.இது எதனை காட்டுகின்றது என்பதை மாணவ சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.கற்றவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு என்ற பழமொழிக்கு ஒப்ப கற்றல் செயற்பாடுகளை உயிர் உள்ளதாக மாற்ற வேண்டியது அதிபர்களினதும்,அசிரியர்களினதும் பொறுப்பாகும்.இந்த கல்வி சார் சமூகத்தை உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் பெற்றோர்களது பங்களிப்பு மகத்தானது என்பதை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தம் என நம்புகின்றேன்.
Post a Comment