பிரபாகரனின் ஆவி குறித்து அரசாங்கம், அவதானமாக இருக்க வேண்டும் - ஞானசார தேரர் எச்சரிக்கை
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டுமொரு அழிவை கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே தென்படுகிறது. எனவே புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாது போனவற்றை செய்ய முயலும் பிரபாகரனின் ஆவியே விக்னேஸ்வரன் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
வட மாகாண மக்கள் முறையான அடிப்படை வசதிகளின்றி பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனியான விமான சேவை மற்றும் கப்பல் சேவைகளை பற்றி பேசுவதானது, மீண்டும் பிரிவினைவாதத்திற்கே வழிகோலும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை,பலாலி திருகோணமலையிலிருந்து இந்தியாவிற்கு விமான சேவையை ஆரம்பிப்பதுடன் காங்கேசன்துறைதறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக்க வேண்டுமென்னும் பிரேரணைவட மாகாண சபையில் அண்மையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் வட மாகாண சபைக்கு விமான சேவை மற்றும் கப்பல் சேவை தொடர்பாக எந்தவிதத் தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வட மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு நேரடி விமான மற்றும் கப்பல் சேவையினை ஏற்படுத்துவது தொடர்பான கோரிக்கை குறித்து பெொதுபல சேனாவின் பெொதுச் செயலாளர் கலகெொட அத்தே ஞானசார தேரர் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வட மாகாணத்திற்கு தனியான கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதாலோ, விமான சேவைகளை ஆரம்பிப்பதாலோ தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக முறையானதும் தூர நோக்குடனுமான வேலைத் திட்டங்களே முன்னெடுக்கப்பட வேண்டும்.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தினால் இன, மத பேதமின்றி எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வட ,கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கினார்கள். எனவே அந்த நிலைமை மீண்டும் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது.
விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் மிகவும் பயங்கரமானதும் பாரதூரமானதுமாகவே உள்ளன. இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டில் மீண்டும் பிரிவினை வாதமும் தேவையற்ற பிரச்சினைகளுமே ஏற்படும். எனவே அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்க கூடாது.
வடமாகாணத்திற்கான தனியான விமான மற்றும் கப்பல் சேவை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனை ஒரு போதும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதே போன்று பிரபாகரனின் ஆவியாக செயற்பட்டுவரும் விக்னே௧ஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையிலேயே விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளானது தமிழ் மக்களை மீண்டும் முப்பது வருடங்களுக்கு பின்னோக்கிக் கொண்டு செல்லும் வகையிலேயே அமையும்.
வட மாகாணத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் இனவாதம் கிடையாது. விக்னேஸ்வரன் போன்றவர்களின் செயற்பாடுகளாலும் கருத்துக்களாலும் அந்த ஒற்றுமை சீர்குலையும் அபாயம் உள்ளது. எனவே, இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். vv
Post a Comment