இம்ராக்கான் வேண்டும் - தலிபான்கள் அறிவிப்பு
பாகிஸ்தான் அரசு அமைத்துள்ள அமைதி பேச்சுவார்த்தை குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் அரசியல் தலைவருமான இம்ரான் கானை இடம் பெறச் செய்ய வேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தாக்குதல்கள் அதிகரித்த நிலையில், பிரச்னைக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தைக்கு பிரதமர் நவாஸ் செரீப் அழைப்பு விடுத்தார். அரசு சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட 4 பேர் குழுவையும் அமைத்து, கடந்த 29ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். குழுவில் மூத்த பத்திரிகையாளர்கள் ரகிமுல்லா யூசுப்சை, இப்ரான் சித்திக், ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் தூதர் ரஸ்தம் ஷா முகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவின் மேற்பார்வையாளராக செரீப்பே உள்ளார்.
பேச்சுவார்த்தை நடைபெறும் காலக்கட்டத்தில் எந்த தாக்குதலையும் நடத்த கூடாது என்ற ஒரு நிபந்தனையை மட்டும் செரீப் விதித்துள்ளார். இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், சமியுல் ஹக், சிராஜுல் ஹக், முகமது இப்ராகிம், முப்தி கிபைதுல்லா, அப்துல் ஆசிஸ் ஆகிய 4 மத குருக்களும் இடம்பெற வேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குயாரி ஷகீல் தலைமையில் 9 பேர் குழுவையும் தலிபான்கள் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமைதி குழுவில் தான் இடம்பெற விரும்பவில்லை என கூறியுள்ள அப்துல் ஆசிஸ், பேச்சுவார்த்தை வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment