புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கட்டுவலை முறையினை பயன்படுத்தி கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்ட தடையினையடுத்து புல்மோட்டை பிரதேச மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீன் இம்மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியினையடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்த அமைச்சர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை சந்தித்து அவர்களுடன் முதற் சுற்றுப் பேச்சுவார்த்தையினை நடத்தினார்.அதனையடுத்து பிரதேசத்தின் மக்கள் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியதுடன்,தற்போதைய இப்பிரதேச மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில்,நீரியல் வளத் துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடை முறைப்படுத்தப்படும் சட்டம் தொடர்பில்,அது ஒரு சில பகுதி மீனவர்களுக்கு மட்டும் அமுலில் உள்ளமையின் நியாயத்தன்மை என்பனபற்றி எடுத்துரைத்தார்.
பரம்பரையாக கடல் தொழிலிலை நம்பி வாழும் இப்பிரதேச மீனவர்கள் யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும்,அவர்களது வாழ்வாதாரம் இந்த தொழிலிலேயே தங்கியிருப்பதால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவினை விளக்கி மீனவர்களுக்கு இலகுவான நடை முறைகள் தொடர்பில் உதவி செய்யுமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித செனவிரத்னவிடம் விளக்கினார்.
இவ்விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கையினை எடுப்பதாகவும்,இந்த தடை செய்யப்பட்ட வலை தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்களித்ததன் பெயரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீனவர்களுக்கு இந்த உறுதி மொழியினை வழங்கினார்.
Post a Comment