அரபு எழுத்து ஏற்படுத்திய அச்சம் - பிரிட்டீஷ் விமானத்தில் சோதனை
சக பயணி ஒருவர் அரபு மொழியில் எழுதியதைக் கண்ட அருகில் அமர்ந்திருந்த மாணவர்கள் அச்சமடைந்து புகார் அளித்ததை தொடர்ந்து பிரிட்டீஷ் விமானம் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக தாமதப்படுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. ஆம்ஸ்டர்டாமில் இருந்து நியூகாஸிற்கு புறப்பட இருந்த லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஈஸி ஜெட் விமானம், பறப்பதற்கு சற்று நேரம் முன்பாக 15-16 வயதான மாணவர்கள் விமான பணியாளர்களிடம் புகார் அளித்தனர்.
அரபி மொழி வடிவில் எழுதிக் கொண்டிருந்த நபருக்கு அடுத்திருந்த ஆடம் ரோப்ஸன் என்பவர் மாணவர்களின் அச்சத்தை கவனித்தார். ஈரானைச் சார்ந்த நபர், மனைவியை சந்தித்து விட்டு விமானத்தில் திரும்பினார். அப்பொழுது அவர் தனது நோட்புக்கில் குறிப்பு எழுதிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் பாரசீக மொழியில்தான் எழுதினார் என்று கூறிய ரோப்ஸன், மாணவர்கள் தேவையில்லாமல் இதனை பிரச்சனையாக்கினர் என்று தெரிவித்தார்.
புகார் கிடைத்தவுடன் விமானத்தை டெர்மினலை நோக்கி திருப்புவதாக விமானி அறிவித்தார். பின்னர் அனைவருடைய பைகளும் தீவிர சோதனையிடப்பட்டன. டென்னஸி பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை பயின்று வரும் ஈரான் நாட்டைச்சார்ந்த நபர், ஆம்ஸ்டர்டாமில் பயிலும் தனது மனைவியை சந்தித்து விட்டு திரும்பும் வேளையில்தான் மாணவர்கள் தேவையற்ற பீதியை கிளப்பியுள்ளனர்.
விமானம் தாமதமானதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஈஸி ஜெட் இன்னொரு விமானத்தை ஏற்பாடுச் செய்தது. யார் பாதுகாப்புக் குறித்து எச்சரிக்கை அளித்தாலும் அதிகாரிகள் பரிசோதிப்பார்கள் என்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு விமானத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈஸிஜெட் விமானத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
Post a Comment