யுவன் சங்கர் ராஜாவின் மாற்றத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு..?
(சுவனப்பிரியன்)
இரண்டு நாட்களாக ஊடகத் துறையில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றத்தைப் பற்றியே! இவர் ஒரு பௌத்தராகவோ அல்லது கிறித்தவராகவோ மாறியிருந்தால் இந்த அளவு எதிர்ப்புகளை சம்பாதித்திருக்க மாட்டார். ஆனால் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தது இந்துத்வாவாதிகளை ரொம்பவுமே கொதிப்படைய வைத்துள்ளது. தினமலரும் (இந்திய பத்திரிகை) தனது பங்குக்கு இதை ஊதி பெரிதாக்க அந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டது. ஆனால் நினைத்ததற்கு மாற்றமாக இந்துக்களின் பிறபடுத்தப்பட்ட மக்களில் பெரும்பாலோர் அவரது மாற்றத்தை வரவேற்றுள்ளது தினமலருக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வெண்டும்.
உடனே மறு செய்தியாக சில நண்பர்கள் மூலம் கிடைத்ததாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மலேசியாவில் ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக இஸ்லாத்துக்கு மாறியுள்ளதாகவும், கொலு வைப்பது சம்பந்தமாக தந்தை இளையராஜாவோடு தகறாரு வந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டு தனது அரிப்பை தீர்த்துக் கொண்டது தின மலர்.
தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையான தினமலர் சம்பந்தப்பட்ட யுவனே வதந்திகள் என்று மறுத்தும் சில நண்பர்கள் கூறினார்கள் என்ற பெயரில் பொய்களை பிரசுரித்து தான் 'தினமலம்' தான் என்பதை நிரூபித்துள்ளது.
ஏன் இப்படி ஒரு எதிர்ப்பு? காலகாலமாக பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மையினரை சிறுபான்மையான பார்பனர்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர். கோவிலுக்குள் அனுமதி இல்லை: சூத்திரன் என்று அவர்களை கேவலப்படுத்துவது: சாதி மாறி கல்யாணம் செய்தால் கொலை செய்வது: ஊர் விலக்கம் செய்வது: அக்ரஹாரத்துக்குள் தலித்களை அனுமதிப்பது இல்லை: என்னதான் படித்து அரசு வேலையில் இருந்தாலும் அவனது சாதியை காட்டி மட்டம் தட்டுவது: இன்னும் வரிசையாக சொல்லலாம். இது போன்ற அவலங்கள் அனைத்தும் தொடர வேண்டும் என்று மேட்டுக்குடி நினைக்கிறது.ஆனால் ஒருவன் இஸ்லாத்தை ஏற்றவுடன் இந்த வர்ணாசிரமம் என்ற கட்டிடம் பொல பொல வென்று உதிர்ந்து மண்ணோடு மண்ணாவதை நாம் யதார்த்தத்தில் பார்க்கிறோம். தங்களின் ஆளுமை தங்கள் கையை விட்டுப் பொகிறதே என்பதால்தான் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தையும் முடிச்சுப் போட்டு தங்கள் ஊடகங்களின் மூலம் இதுவரை பொய்களை பரப்பி வந்தனர். ஆனால் இணையம் என்ற ஒரு சக்தி இன்று ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் அனாயசமாக தட்டுகிறது. மன நிம்மதி இழந்து தவிக்கும் பல ஆயிரம் இளைஞர்களின் மனதை இந்த குர்ஆன் உலுக்கி எடுக்கிறது. இன்று தமிழகத்தில் நாம் பார்க்கும் நிலைதான் அன்றைய அரபுலகத்திலும் நடந்தேறியது.
அன்றைய அரபுலகை சற்று நோட்டமிடுவாம்....
பல்லாண்டு ஊற வைத்த மதுக்குடங்கள் இருப்பது கொண்டு அன்றைய அரபுகள் பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர். தந்தைக்கு நூறு மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். வறுமைக்கு பயந்து பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர்.உயர் சாதி கீழ் சாதி என்று மனிதனை பாகுபடுத்தி அதனை கடவுளின் பெயரால் அங்கீகரித்தனர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.
இந்த முஹம்மது ஷைத்தானிடமிருந்து சில மந்திரங்களை அறிந்து கொண்டு அவற்றை மக்களிடம் ஓதிக்காட்டி மக்களை மயக்குகிறார்; வழிகெடுக்கிறார். அவர் ஒரு சூன்யக்காரர், கவிஞர், பொய்யர், சந்ததியற்றவர், பைத்தியக்காரர், மோசடிக்காரர் என்றெல்லாம் தொடர்ந்து துர்ப்பிரச்சாரம் செய்து மக்கள் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் நெருங்க விடாமல் செய்தனர். தப்பித்தவறி கூட குர்ஆன் ஓதுவதை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மக்களை காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள தூண்டினார்கள். அல்குர்ஆனை நெருங்க விடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் தாருந்நத்வா புரோகிதரர்கள் செய்தனர். அதே காரியத்தைத்தான் நமது நாட்டில் இன்றைய மேட்டுக்குடிகளும் பத்திரிக்கைகள் வாயிலாகவும், காவல்துறையினர், நீதித் துறையினர் வாயிலாகவும் முஸ்லிம்களின் மேல் அபாண்டங்களை சுமத்துகின்றனர்.
மக்காவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த ஆரம்பக் காலக் கட்டம். மக்காவுக்கு ஒரு வியாபாரி வந்தார். மக்கத்து குரைஷிகள் அவரைத் தடுத்து சொன்னார்கள்: "நீங்கள் மக்காவுக்குள்ளே செல்லவேண்டாம். காரணம், அங்கே முஹம்மது என்பவர் புதிய மார்க்கத்தைப் பரப்புகிறார். அவர் ஓதுகிற குர்ஆனிய வசனங்களை நீங்கள் கேட்டால் உடனே மதம் மாறிவிடுவீர்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்’’ என்றனர்.
அவர் மக்காவுக்குள் செல்லவில்லை. ஆனாலும் ஊருக்குத் திரும்புகிறபோது ஒருமுறையாவது கஃபாவை வலம் வந்து விட்டு செல்லலாமே என்று நினைத்தார். அதனாலே அவர் உள்ளே செல்லும்போது குர்ஆனின் வசனங்கள் காதுக்குள் விழுந்துவிடக்கூடாது என்று காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு மக்காவிற்குள் சென்றார். அப்படி இருந்தும் சில வசனங்களை கேட்டு விடுகிறார். சில வினாடிகள் நபியவர்கள் ஓதிய குர்ஆனின் வசனங்கள் அவர் காதுகளில் விழ அந்த வினாடியே உள்ளம் நடுங்கி ''சத்தியமாக இது இறைவனின் வார்த்தைகளே'' என்று கூறி இஸ்லாமைத் தழுவுகிறார்.
முஹம்மதின் தலையை தரையில் வீழ்த்தாதவரை என் வாள் உரையில் போகாது'' என்று வீரமுழக்கம் செய்து புறப்படுகிறார்கள் உமர். ஒரு மந்திர மாற்றம் நடக்கிறது. அவர்களின் சகோதரி ஓதிய ஒரு வசனத்தைக் கேட்டதின் விளைவால் அந்த மாற்றம் ஏற்பட்டு நபியிடம் சென்று கலிமா சொல்லி நபியின் பெரும் ஆதரவாளராக திரும்புகிறார்கள்.
அது போன்ற ஒரு மாற்றம் தான் இன்று இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மனதிலும் ஏற்பட்டுள்ளது. 'குர்ஆன் வசனங்கள் தான் என்னை மாற்றியது' என்று அவர் கூறுவது முற்றிலும் உண்மை. அத்தகைய சக்தி இந்த இறை வேதத்துக்கு உண்டு.
ஒரு தினமலர் வாசகரான இந்து நண்பரின் பின்னூட்டத்தை படித்துப் பாருங்கள்....
இளையராஜாவின் பாவலர் குடும்பம் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னால் பல பிராமண குடும்பங்களை தங்களது கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மூலம் காப்பாற்றி இருக்கிறது. அந்த குடும்பத்தில் ஒருவர் வெளியேறுவது மன கஷ்டம் கொடுக்கத்தான் செய்யும். தனி மனித விருப்பம் என்பது வேறு. பொது வாழ்க்கை என்பது வேறு. இடையில் சிறிது காலம் பிராமண பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதன்படி கல்யாணம் செய்து விவாகரத்து ...பின் பெரியார். ...கடவுள் மறுப்பு கொள்கையில் ஈடுபாடு ...இப்போது புது மார்க்கம். ஆனால் ஒன்று குரான் படிப்பவர்கள், அரபி மொழி மற்றும் இசை கேட்பவர்கள் படிப்பவர்கள் அதற்கு அடிமை யாகி விடுவார்கள் என்பது திண்ணம். அவைகளுக்கு அப்பேற்பட்ட சக்தி இருப்பது உண்மை. படித்து விட்டால் மீள்வது மிக கடினம். எங்கிருந்தாலும் வாழ்க
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
ReplyDelete