Header Ads



சமயத் தலைவர்கள் சமயங்கள் மீது, புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவது காலத்தின் தேவை

(சத்தார் எம் ஜாவித்)  

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பதெல்லாம் சிறுபான்மை மக்கள் மீது எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்க்கும் நிலைமைகளே தோற்றம் பெற்று வருகின்றது.

இன்று சிறுபான்மைச் சமகங்களின் சமயங்கள் மீதான தாக்குதல்கள் எந்தவித தடங்கள்களுமின்றி தொடராக மிகவும் கட்சிதமாக நடைபெறுவதானது இலங்கையில் சமய விழுமியங்கள் பேனிக் காக்கப்படுமா? என்ற ஐயம் இன்று சமுகங்களுக்கிடையில் பரவலாக காணப்படுகின்றது.

இன்று இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் சமயங்கள் மீதான தாக்குதல்களுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாத சமய போதகர்களே காரணம் என அவர்களால் கடந்த காலத்தில் தொடராக மேற் கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் அவர்களினால் சிறுபான்மைச் சமுகங்களின் சமயங்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட விரும்பத்தகாத செயற்பாடுகள் இன்று வரை அரசினால் கண்டு கொள்ளப்படாதது மட்டுமல்லாது அவர்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைளும் மேற் கொள்ளப்படாத விடயங்கள் மக்களிடத்தில் பெரும் விசனத்தை தோற்றவித்துள்ளது.

இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தில் இலங்கை வாழ் மக்கள் இலங்கையில் எல்லைக்குள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும், தாம் விரும்பிய இடத்தில் வாழவுமான சகல உரிமையும் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் உள்ளது என குறிப்பிடப்பட்ட போதிலும் அந்த விடயங்கள் இன்று அமுலில் இருக்கின்றதா? என்ற ஐயம் மக்களிடத்தில் தற்போது மேலோங்கியுள்ளது.

மேற்கண்டவாறு அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இன்று இலங்கையில் நடப்பது என்ன? ஜனாதிபதி இலங்கையில் அரசினை ஆதரகிக்கும் மற்றும் ஆதரிக்காத என்ற இரு இனங்கள்தான் உள்ளது என்றும் இந்தநாட்டில் சகல இனங்களும் ஒற்றுமையாக வாழ்வதாகவும் யாரும் யாரையும் சமய ரீதியாக கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுக் கொண்டிருந்த போதிலும் இனவாதிகள் ஜனாதிபதியின் மேற்படி கூற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் சண்டித்தனமாக செயற்படுவது மக்கள் மத்தியில் பாரிய குழப்ப நிலைமைகளையும், சந்தேகங்களையும் எற்படுத்தி வருகின்றது.

அது மட்டுமல்லாது ஜனாதிபதி சகல சமயங்களையும் ஒற்றுமைப் படுத்தவதற்காக ஒவ்வொரு சமயத்தையும் சேர்ந்த தலைவர்கள் அடங்கிய ஜனாதிபதியின் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர்களை நியமித்துள்ள போதிலும் சமயங்கள் மீது இனவாதிகளின் அருவருக்கத்தக்க செயற்பாடுகள் குறைந்தபாடில்லை.

மேற்படி சர்வமத அமைப்பு சர்வ மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை வழுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும் இனவாதக் குழுக்கள் இனவாதத்தை கக்கிக் கொண்டே இருக்கின்றன.

அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் இலங்கையின் நிலையான அமைதிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இனவாதம் என்பது மிக மோசமான புற்று நோய் என்பதுடன் அதற்கு நிரந்தரமாக முடிவு கட்டவேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது உலக நாடுகள் கூட இலங்கையில் சமயங்கள் மீதான இனவாதத் தாக்குதல்களுக்கு தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகம்  இலங்கையில் சிறுபான்மைச் சமுகங்களின் சமயங்கள் மற்றும் மதஸ்தளங்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டுமென கடுமையான தொனியில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனவாதிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சமயச் செயற்பாடுகள் மற்றும் இஸ்லாமிய கலாச்சார விடயங்களான பெண்கள் தமது பாதுகாப்பதற்கான  உடலை மறைக்கும் ஹிஜாப், அபாயா அணிதல்,  ஆண்கள் தொப்பி அணிதல், ஹலால் விடயம் மற்றும் இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல் போன்ற விடயங்களிலும் வியாபாரத் தளங்கள் மீதான தாக்குதல்கள் என நூற்றுக் கணக்கான விரும்பத்தகாத விடயங்கள் மற்றும் தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றனர்.

இதேவேளை  இடைக்கிடை இந்துக்களின் கோயில்களை உடைப்பதும் அவர்களின் சமய நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தல் மற்றும் அவர்களை அச்சுறுத்துதல் போன்ற விடயங்களில் தமது அடாவடித் தனங்களை அரசு பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் பகிரங்கமாகவே மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கத்தோலிக்க மக்கள் மீதும் அவர்களின் சமயத்தளங்கள் மீதும் தாக்குதல்களை ஆரம்பித்தள்ளனர்.

அன்மையில் தென்பகுதியில் காலி மற்றும் ஹிக்கடுவையில் உள்ள இரு கத்தோலிக்க ஆலயங்கள் மீது பௌத்த குருமார்கள் கொண்ட குழுக்கள் தாக்குதல்கள் மேற் கொண்டதுடன் அவற்றை உடைத்த சம்பவங்கள் எல்லாம் தற்போது இலங்கையில் சிறுபான்மைச் சமயங்களின் இருப்பில் பாரியதொரு கேள்விக் குறியை தோற்றுவித்துள்ளது.

இவ்வாறு சிறுபான்மைச் சமுகங்களின் சமய விழுமியங்களின் மீது பெரும்பான்மை இனவாதக் குழுக்கள் இலங்கையின் நீதி மற்றும் நிருவாகச் சட்டங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் தமது ஈனச் செயல்களை மேற் கொள்வது எந்தவிதத்தில் நியாயமானது? என சமாதானத்தை விரும்பும் புத்தி ஜீவிகள் ஆட்சியாளர்களிடம் கேட்கின்றனர்.

இவ்வாறு அடாவடித் தனங்களில் பகிரங்கமாகவே ஈடுபட்டு வரும் மேற்படி இனவாத பௌத் குருமார்களுக்;கு இலங்கையில் நீதி, நியாயச் சட்டங்கள் பொருந்தாதா? அல்லது அவர்களுக்கு அவை அரசினால் விதி விளக்களிக்கப்பட்டுள்ளதா? என சிறுபான்மைச் சமுக ஆர்வளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இவ்வாறு சட்டம் தூங்குவதும் குற்வாளிகள் தண்டிக்கப்படாத கலாச்சாரங்களே இலங்கையில் தற்போது உதயமாகியுள்ளது. இந்த விடயத்தில்  பிரிட்டனும் கூட இலங்கையை குற்றஞ்சாட்டியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறு பலவாறு இனவாதிகளின் மிகமோசமான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வரும் சிறுபான்மைச் சமுகம் தொடர்ந்தும் அமைதி காத்த வருகின்றமை இனவாதிகளுக்கு சாதகமாக இருந்தாலும் அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும் விடயம் என்பதனை அரசு கவனத்திற் கொள்ளவேண்டும்.

காரணம் பொறுமைக்கும் எல்லை உண்டு, தொடர்ந்தும் இனவாதிகள் சிறுபான்மைச் சமுகங்களின் சமயங்களில் சீண்டுவார்களானால் அது எதிர் காலத்தில் இலங்கையில் பாரியதொரு இன மோதல்களில் வந்து முடியலாம்.

எனவே அரசு வெள்ளம் வருமுன் அனைக்கட்டுவதே நல்லது. மாறாக அரசு இனவாதிகளின் பொறம்போக்குத் தன்மைகளில் பொடுபோக்காக இருக்குமானால் அது ஈற்றில் சர்வதேசத்தின் விளிம்பில் கொண்டுபோய்விடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

சமய ரீதியாக உலக நாடுகளில் கத்தோலிக்க, இஸ்லாமிய, இந்து மக்களே அதிகமாக வாழுகின்றனர் இந்த வகையில் உலக அரங்கில் ஒரு சொற்ப மக்களாக இருப்பதை கண்டு கொள்ளாத இனவாதக் கும்பல் இலங்கையில் பெரும்பான்மை என்ற ஆணவத்தால் கொக்கரிப்பது அவ்வளவு தூரம் நல்ல விடயமல்ல என்பதனை புரிந்து கொண்டு இனியாவது சிறுபான்மையினர் மீதான காழ்ப்புணர்ச்சிகளை கைவிட்டு விட்டு அமைதியாக வாழப்பழகிக் கொள்வது இலங்கையின் இறையான்மைக்கும், அமைதிக்குமானதொரு விடிவுகலமாகும்.

அரசாங்கத்தைப் பொருத்தவரை தற்போது ஆட்சியில் போதியளவு அறுதிப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு தமது மக்களின் அவள நிலைமைகளை போக்காதது மட்டுமல்லாது கடந்த காலங்களில் இலங்கையில் ஒவ்வொரு சமயத்திற்கும் தனித்தனியாக இருந்த அமைச்சுக்களை தற்போது ஒரு சமயத்தின் அமைச்சின் கீழ் அதாவது புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் கீழ் வைத்திருப்பதும் சிறுபான்மை மக்களைப் பொருத்தவரை பாரியதொரு இழப்பாகவும் பல பின்னடைவுகளுக்கு காரணமாகவும் அமைந்தவிட்டது.

முன்னைய காலங்களைப்போல் ஒவ்வொரு சமயங்களுக்கும் தனித்தனியான அமைச்சுக்கள் இருக்கமாயின் தற்போது ஏற்பட்டுள்ள இனவாதத்த தாக்குதல்கள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்காமல் இருந்திருக்கலாம்.

இன்று சிறபான்மைச் சமுகங்கள் தமக்கான சமயங்களுக்கு தனித்தனியான சமய அமைச்சக்கள் இல்லாதிருப்பதையிட்டு கவலை கொண்டள்ளனர். இந்த நிலைமைகள் எல்லாம் இன்று சிறுபான்மைச் சமுகங்களில் சமய விழுமியங்கள் புறக்கணிக்கப்படுவதற்கும், சமயங்கள் இனவாதிகளால் கொச்சைப் படுத்தப்படுவதற்குமான சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் நாட்டு மக்களின் நலன்களிலும் அவர்களின் வாழ்வியழிலும் விளிப்பாக இருக்க வேண்டிய தருணத்தில் புதிதாக முளைத்த சதிகார குழுக்களுக்கு மண்டியிட்டுக் கிடக்கும் நிலைக்கு உள்ளானதாகவே தற்போதைய அரசாங்கத்தை கருதவேண்டியுள்ளதாக கல்விமான்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இன்று பெரும்பாலான மக்களும், சமயத் தலைவர்களும்  சமய ரீதியாக ஒற்றுமையாக மக்கள் வாழுவதற்கு  மகத்தான காரியங்களைச் செய்யும்போது அதற்கு அரசாங்கம் தம்மாலான ஒத்துழைப்பக்களை வழங்குவதை விட்டுவிட்டு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இனவாதக் குழுக்களின் திருவு தாளங்களுக்கு சாவுமணி அடிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருப்பதானது மக்கள் மத்தியில் பின்னடைவுகளை எற்படுத்துவதற்கான ஆரம்பங்களாகவே நோக்க வேண்டியுள்ளது.

அரசாங்கம் இலங்கையில் சமாதானமும் ஒற்றுமையும் நிலவ வேண்டுமானால் சமய ரீதியாக விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும், தீய சக்திகளால் சமயங்களின் மீது மேற் கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் அடாவடித் தனங்களை உடன் நிறுத்தத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதே சாலச் சிறந்தது.

சமயங்கள் மீதான சமத்தவத்தையும், புரிந்துணர்வுகளையும் ஏற்டுபடுத்துவதற்கான தூர நோக்குடனான செயல் திட்டங்களும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தவேண்டும். இதனையே காலஞ் சென்ற முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸ செய்திரந்தார்.

அவர் அவரது காலத்தில் சமயங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற நன்நோக்கில் சமயத் தளங்களை அருகருகில் அமைத்துக் கொடுத்தமையை இத்தருணத்தில் குறிப்பிடலாம்.

எனவே இலங்கை இனவாதிகளால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன் ஒரு ஸ்திரமான சமய ஒற்றுமையை வழப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டு சமயங்களைப் பாதுகாக்குமாறு சிறுபான்மைச் சமுகங்கள் ஜனாதிபதியை வேண்டி நிற்கின்றனர்.

No comments

Powered by Blogger.