மட்டக்களப்பு மாட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு இந்த விடயம் தெரியாதா..?
(MSM.பாயிஸ் - சவூதி அரேபியா)
காத்தான்குடி முன்னணி தேசிய பாடசாலைகளில் ஒன்றான மத்திய கல்லூரிக்கு பௌதீகவியல் பாடம் கற்பிக்கக் கூடிய தகுதிவாய்ந்த ஆசிரியர் ஒருவர்தேவைபடுகிறார்.
சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். என்றதொரு விளம்பரம் அங்கு ஆசிரியராக கடமை புரியும் ஒரு பட்டதாரி ஆசிரியரினால் முகனூலில் இன்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது ஒரு அரசாங்க பாடசாலைதானே, கல்வித் திணைக்களம்தானே ஒருவரை நியமிக்க வேண்டும். அரசாங்கம்தானே சம்பளம் கொடுக்க வேண்டும், நீங்கள் ஏன் இவ்வாறானதொரு தனிப்பட்ட விளம்பரத்தை செய்ய வேண்டும் என அவரை தொடர்புகொண்டு கேட்ட போது அவர் தெரிவித்த பதில் மிகவும் கவலையைஏற்படுத்தியது.
அரச நியமனத்தை நம்பி இருந்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், இங்கு பௌதீகவியலுக்கு இரண்டு பிரிவுகளும் 7 வகுப்புக்களும் இருக்கின்றன, ஒரே ஒரு ஆசிரியர் மாத்திரமே கடமை புரிகிறார், எமக்கு அவசரமாக ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார் என அவர் பதிலளித்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் கௌரவ நஜீப் ஏ.மஜீத்துக்கு இவ்விடயம்
தெரிவிக்கப்படவில்லையா? அமைச்சர் கௌரவ பஷீர் சேகு தாவூத் M.P அவர்களுக்கு இவ்விடயம் தெரியாதா? காத்தான்குடியில் கல்விக்கு உயிர் கொடுத்த காவியத் தலைவன் என இப்பாடசாலை வரவேற்பு தோரணத்தில் சிரித்துக்கொண்டிருந்த பிரதியமைச்சரும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான கௌரவ ஹிஸ்புல்லாஹ் M.P,M.A அவர்களுக்கு இவ்விடயம் தெரியாமல் போனதா? கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க உயர் உறுப்பினருமான அஹமது ஷிப்லி பாரூக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் ஹாஜியார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் S.அமீர் அலி, கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றோருக்கு இவ்விடயம் தெரியாதா?
இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதோடு ஆளும் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பவர்கள். ஒரு முன்னணி முஸ்லிம் பாடசாலை ஒன்றில் உயர் தர வகுப்புக்கு முக்கிய பாடத்துக்கு ஆசிரியர் இல்லை என்பதை முகனூலில் விளம்பரம் செய்துதான் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத்தான் எமது அரசியல் தலைவர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது.
அரசியல் தலைவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பாடசாலைக்கு தகுதிவாய்ந்த ஒரு பௌதீகவியல் ஆசிரியரை நியமித்து இப்பாடசாலையின் உயர்தர மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும் என இவ்விணையதள வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
Post a Comment