ஆதம் (அலை) அவர்களின் வாரிசுகளாக இலங்கை முஸ்லிம்கள் இருந்து வருகின்றார்கள் - ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
நாம் பெற்ற சுதந்திரக் காற்றினை சுவாசித்து இலங்கையர் என்ற ரீதியில் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகிய நாம் அனைவரும் இன மத பேதமின்றி எல்லா இனத்தவர்களுடனும் ஒன்றிணைந்து சுபீட்சமாக வாழ எமது எதிர்காலத்தை சிறப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும்,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை ஆரம்பமான சாரணியர் ஒருநாள் பயிற்சிப் பட்டறையின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே மாநகர சபை உறுப்பினர் இவ்வாறு கூறினார்.
இச் சாரணியர் பயிற்சி பட்டறை நிகழ்வில் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத் முன்னாள் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் எம்.ஐ.முஸ்தபா. அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்க பயிற்சி ஆணையாளர் கே.எம்.தமீம் சாரணர் குழுத்தலைவர் எம்.ஏ.சலாம், ஏ.ஆர்.எம்.யூசுப் மற்றும் இணைப்பாடவிதான ஆசிரியர் யூ.எல்.எஸ்.ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பறக்கத்துள்ளாஹ் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது:
இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதில் நாம் எல்லோரும் பெருமைப்படல் வேண்டும். தேசப்பற்றுள்ள, தாய்நாட்டில் அதிக அக்கறை கொண்டவர்களாக இன்றும் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்.
இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களும் ஓர் பூர்விக சமூதாயமாக இருந்து வருவது எழுதப்படாத வரலாறாகிறது. ஆதிகாலம் தொடக்கம் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு மற்றும் அடையாளங்கள் ஆதிக்க சமூகத்தினரால் அழிக்க முற்பட்டுவருவது இன்று சாதாரணமாகி வருகின்றது.
மன்னர்களாலும், அரசர்களாலும் ஆதிக்க சக்தியின் பின்னணியில் எழுதப்பட்ட வரலாறுகளில் முஸ்லிம்களின் வரலாறுகளை அதிலிருந்து கிள்ளி எறிவதையே எம்மால் காணமுடிகிறது.
இலங்கை நாட்டில் பாதம் பதித்த முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களின் வாரிசுகளாக இலங்கை முஸ்லிம்கள் இருந்து வருகின்றார்கள். முஸ்லிம்கள் வாழ்ந்து சென்றதற்கான தடையங்கள் இன்மையால் இவைகளை எம்மால் நிரூபித்துக் காட்ட முடிவதில்லை. சுதந்திரத்திற்கு முதல் தொடக்கம் இன்றுவரையிலான சிங்கள ஆட்சியாளர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் ஒன்றிணைந்தே செயற்பட்டிருக்கின்றனர்.
பிரித்தானியர் 1796 ஆம் ஆண்டு இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதியைக் கைப்பற்றி ஆட்சியமைத்த பின்னர் கண்டிராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்ற 1804 ஆம் ஆண்டு முனைந்தபோது கிழக்கு மாகணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் கண்டி மன்னனுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்கின்றனர்.
தனது ஆட்சியை எதிர்த்த பிரித்தானிய அரசு செயலாளர் தமது படையினரை எதிர்த்த முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து கொண்ட அனைவரையும் ராஜா துரோகிகள் என 1804 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியதும், இச்செய்தி பிரித்தானியரின் 1803 - 4 ஆம் நீதி நிர்வாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதும் வரலாறாகிறது.
சுதந்திரத்திற்குப் பின்னரும் இலங்கையை ஆட்சி செய்த டீ.எஸ். சேனநாயக்க, எஸ்.டபிள்யூ. பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச, ரீ.பி. விஜயதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க,மஹிந்த ராஜபக்க்ஷ வரையானவர்களுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பக்கபலமாக இருந்து சிறப்பான முறையில் பணியாற்றி வந்திருக்கிறார்கள்.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து சுமார் 33 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்கள் உருப்பெற்று சுதந்திர இலங்கையின் ஆட்சியை குழைத்துக் கொண்டு செயற்பட்டு வந்தன.
இவ்வாயுதக்குழுக்கள் சுமார் 30 வருடகாலமாக செயற்பட்டு பல வழிகளில் இலங்கையின் அமைதியைச் சீர்குலைத்து செயற்பட்டன. இதன் உக்கிரங்கள் பல பாரிய விளைவுகளை தோற்றுவித்ததும் வரலாறாகிறது.
2009 ஆம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ. என்ற ஆயுதக்குழு இன்று முற்றாக ஒழிக்கப்பட்டு 30 வருடங்களுக்குப்பின்னர் இலங்கை நாடு மீண்டும் மறு சுதந்திரம் பெற்றது என கூறிக் கொள்ள முடியும்.
இன்று எமது நாட்டுக்கு சுதந்திரக் காற்று வீசத்தொடங்கிய 66 ஆவது வயது. இச்சுதந்திரக் காற்றினை சுவாசித்து இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் இன மத பேதமின்றி சுபீட்சமாக வாழ எமது எதிர்கால சந்ததியினர்களான மாணவர் சமுதாயம் வழி அமைக்க வேண்டும். இவ்வாறு பறக்கத்துள்ளாஹ் கூறினார்.
Post a Comment