Header Ads



பரீட்சை சான்றிதழ்களை ஒரே நாளில் பெற விசேட நடவடிக்கை

(Tn) அரசாங்கப் பரீட்சைகளின் கடந்தகால பெறுபேறுகளை ஒரு நாளுக்குள் பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான விசேட பொறிமுறையினை பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார். இதற்கான விசேட பிரிவு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் 05 ஆம் திகதி புதன்கிழமை பரீட்சைகள் திணைக்களத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதற்கிணங்க 1992 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட பெறுபேறு சான்றிதழ்களை 2 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்குமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார். இதேவேளை, 1992 இற்கு முற்பட்ட காலப் பகுதிகளைச் சேர்ந்த பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் ஒரு நாளுக்குள் பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கடந்தகால க. பொ. த. சாதாரணதர, உயர்தர பெறுபேற்று சன்றிதழ்களும், வெளிநாடுகளுக்குச் செல்வோரின் சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்தும் செயன்முறையும் குறித்த பிரிவின் கீழ் முன்னெடுக்கப்படும்.

இதற்கென விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிய பின்னர் வருட அடிப்படையில் சான்றிதழ் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் வழமையான கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் செய்யப்படவில்லையெனவும் அவர் கூறினார். இருப்பினும் வேலை நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு முன்பாக அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டுமெனவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக் காட்டினார்.

எதிர்வரும் 05 ஆம் திகதி அமைச்சரின் தலைமையில் பரீட்சைகள் திணைக்களத்தில் புத்தக சாலையொன்று திறந்து வைக்கப்படவுள்ளதுடன் பரீட்சை பெறுபேறுகளை நேரடியாக திணைக்களத்தி லிருந்தே உடனுக்குடன் வெளிப்படுத்தும் வகையிலான புதிய இணையதளமொன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட வுள்ளது. பரீட்சை பெறுபேறுகளுக்கான புதிய இணைய தளத்தினூடாக அன்றைய தினம் ஜி. ஐ. டி. பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுமெனவும் அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.