Header Ads



அட்டாளைச்சேனை வீதி விபத்தில் ஒருவர் மரணம் - மூதாட்டி மீது விழுந்த மின்கம்பம்


(எம்.ஏ.றமீஸ்)

அட்டாளைச்சேனையில் இன்று(21) அதிகாலை நிகழ்ந்த வீதி விபத்தின்போது சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன் வாகனத்தில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் சென்று மீண்டும் நாடு திரும்பிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஏல்.எம்.நசீரின் சகோதரரான ஏ.எல்.எம்.நசீம்(39) என்பவரை அட்டாளைச்சேனையில் உள்ள இல்லத்திற்கு அழைத்து வந்தபோதே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று அதிகாலை 2.15 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதி தைக்கா நகர் பிரதேசத்தில் பயணித்த டொல்பின் ரக வான் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தின்போது வானைச் செலுத்தி வந்த சாரதி வி.மிஹார்தீன்(54) என்பவர் சம்பவ இடத்தில் பலியானார்.  இவர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தினைச் சேர்நதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை இவ்விபத்துச் சம்பவத்தினை பார்ப்பதற்காக அருகிலுள்ள சாஹுல்ஹமீது கதீஸா உம்மா(75) என்பவர் சென்றவேளை இவர்மீது மின்கம்பி வீழ்ந்து தாக்கியதால் உயிருக்கு போராடிய நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்தின்போது பிரதான வீதியோரத்திலிருந்த மின்கம்பம் சேதமுற்றிருந்த போதிலும் மின்சாரத்தினை துண்டித்து திருத்தங்களை மேற்கொள்ளாமல் மின்சார சபையினர் அசமந்த நிலையில் இருந்ததாலேயே வயோதிபப் பெண்ணுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது என அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 



No comments

Powered by Blogger.