Header Ads



'முபாரக், சதாம் ஹுசைன், முஷாரப் ஆகியோருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதை உணர வேண்டும்'

(Adt) ´வடக்கின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலையே நான் கவனித்து கொள்கிறேன் அரசியல் தொடர்பான செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து கொள்கிறார்கள் எனவே நான் ஜெனிவா செல்லவேண்டிய அவசியம் இல்லை´ என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தனது வாசஸ்தலத்தில் இன்று (12) காலை நோர்வே தூதுவருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார். 

அச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவரினால் ஜெனிவா கூட்டத்தொடரில் வடக்கின் முதலமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொள்வீர்களா? என கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

´ஐநா மனித உரிமைக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டேன். நான் செல்வவேண்டிய அவசியமுமில்லை. நான் வடக்கின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளையே கவனித்து வருகின்றேன். 

அரசியல் நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்த்து வருகின்றார்கள். அவர்கள் செல்வார்கள் பெண்கள் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்´ என தெரிவித்தார். 

அதேவேளை, தென்மராட்சியில் ஆற்றிய உரைதொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்ட போது, 

´எனது உரை தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதியினால் குழு அமைக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.

இதுவரை அந்த உரை தொடர்பாக எந்த அறிவித்தலுமோ விளக்கமோ என்னிடம் கோரப்படவில்லை. அவ்வாறு ஏதாவது விசாரணை நடைபெற்றால் அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்´ என தெரிவித்தார். 

சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹீசைன், பாகிஸ்தானின் முஷாரப் , ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும். என தென்மராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வொன்றில் சி.வி. விக்னேஸ்வரன் உரையாற்றி இருந்தார். 

ஜனாதிபதியை சாடியே அவர் அவ்வாறு குறிப்பிட்டு இருந்ததாகவும் அது தொடர்பில் விசாரிக்கவே ஜனாதிபதி விசாரணை குழுவை அமைத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.