Header Ads



சிங்கள ராவயவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு

சிங்கள ராவய அமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்கு எதிராக, அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பணிப்பாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளார்.  

நேற்று முன்தினம் சனிக்கிழமை தனது சட்டத்தரணி ஏ.எல். பாறூக் சகிதம் அக்ரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்த ஹனீபா மதனி, மேற்படி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார். 

சிங்கள ராவய அமைப்பின் தலைவரும், அதன் சில உறுப்பினர்களும் - சட்டம், ஒழுங்கு, நீதித்துறை, மனித நாகரீகம் மற்றும் பௌத்த தர்மம் போன்றவற்றினை பகிரங்கமாக மீறிச் செயற்படுவதாக, ஹனிபா மதனி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ராவய அமைப்புக்கு எதிராக, ஹனீபா மதனி பதிவு செய்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுள, 

கடந்த 17 மற்றும் 19 பெப்ரவரி 2014 ஆம் திகதிகளில் வெளியான தமிழ் தினசரி பத்திரிகையில் இரண்டு செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

மேற்படி செய்திகளின்படி, நாட்டில் மாடறுப்பினை அரசாங்கம் உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும், அப்படி தடை செய்யாது விட்டால், சிங்கள ராவய எனும் அமைப்பிலுள்ளவர்கள் தமக்குத் தாமே தீவைத்து தற்கொலை செய்து கொள்வார்கள் எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தினை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எனவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ண என்பவர் கூறியிருந்தார்.

இந்தச் செய்திகளிலுள்ள விபரங்களை உள்ளடக்கி, மேலும் பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன. 

சிங்கள ராவய எனும் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன என்பவர், குறித்த கூற்றினூடாக, நமது நாட்டின் நடைமுறையிலுள்ள இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகளான 291 (ஆ), 300, 301, 485 ஆகியவற்றின் படி குற்றங்களைப் புரிந்துள்ளார்.

இதேவேளை, சிங்கள ராவய அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் எவற்றிலும் ஈடுபடுதல் கூடாது என்று, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ ஜிஹான் பலப்பிட்டிய கடந்த 30 ஜனவரி 2014 ஆம் திகதி உத்தரவொன்றினை வழங்கியிருந்தார். ஆயினும், மேற்படி நீதிமன்ற உத்தரவினையும் மீறி, சிங்கள ராவய அமைப்பினர் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும், சத்தியாக்கிரக நடவடிக்கைகளிலும், மோதல்களிலும் ஈடுபட்டிருந்தனர். 

சிங்கள ராவய அமைப்பின் இந்த நடவடிக்கைகள், நமது நாட்டின் மதிப்புக்குரிய நீதித்துறையினை அவமதிக்கும் செயற்பாடுகளாகும். 

மேலும், அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், முஸ்லிம் சமூகத்தினரின் சமய உணர்வுகளை பாதிக்க வேண்டும் என்ற திட்டமான கெடு நோக்கத்தினையுடைய கருத்துடனும், சமய நம்பிக்கைகளை நிந்தனை செய்ய எத்தனிப்பதுடன், அச்சத்தையும் மனக் கிலேசத்தினையும் ஏற்படுத்தி, சர்வதேச சட்டமான வாழு – வாழ விடு என்பதையும் மீறும் வகையில் சிங்கள ராவய எனும் அமைப்பு அண்மைக் காலமாக நடந்து வருகிறது. இவையனைத்தும் சட்டத்தின்படி குற்றச் செயல்களாகும்.

சிறுபான்மையாக வாழும், சக இனத்தவர்களான முஸ்லிம்களை அச்சப்படுத்துவதுடன் நின்றுவிடாது, இலங்கையின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்ற பௌத்த தர்மத்துக்கும், புத்தபெருமானின் போதனைகளுக்கும் முரணாக பொதுஜனங்களை பிழையான வழியில் நடத்துவதற்கும் சிங்கள ராவய அமைப்பானது எத்தனிக்கின்றது. 

தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதென்பதை புத்த பெருமான் அவர்களோ, அவர்களின் சீடர்களோ எப்போதும் அங்கீகரித்திருக்கவில்லை. பௌத்த கொள்கைகளின் பிரகாரம், நபரொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வது, மிக மோசமானதொரு முன்னுதாரணச் செயற்பாடாகும்.  

அந்தவகையில், மனித உயிர்களை தீக்குளிக்கச் செய்து தற்கொலை புரியத் தூண்டுவதென்பது பௌத்த தர்மத்துக்கு மட்டுமன்றி, நாட்டின் சட்டத்துக்கும் எதிரான செயற்பாடாகும். 

ஆகவே, இவ்வாறு சட்டம், ஒழுங்கு, நீதித்துறை, மனித நாகரீகம் மற்றும் பௌத்த தர்மம் போன்றவற்றினை பகிரங்கமாக மீறிச் செயற்படும் சிங்கள ராவய அமைப்பின் தலைவரையும், இந்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய சிங்கள ராவய அமைப்பின் நபர்களையும் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வினயமாக கேட்டுக் கொள்கிறேன். 

3 comments:

  1. Very Good sir. We appreciate you.

    ReplyDelete
  2. Masha Allah. shiranda widayam.

    ReplyDelete
  3. பாவம்......!!! இந்த ஹனிபா மதனியை அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களால் கட்சி கோட்பாடுகளை மீறினார்.... என்றும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாதவர்...... என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு விரைவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தியை விரைவில் ஊடகங்களில் நாம் படிக்கலாம்....!!!!!!!!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.