ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் -
ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் இன்று பாராளுமன்றத்தில் சமர்பித்த தனி நபர் பிரேரணை தொடர்பில் விவாதத்தில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் உரையாற்றினார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சபைக்கு குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமை தாங்கினார்.அங்கு தொடர்ந்து தமதுரையில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
மனித உரிமையும்,அடிப்படை உரிமைகளும்,வாழ்வுரிமைகளும் மீறப்பட்ட ஒருவன் என்ற வகையில் இந்த பிரேரணை மீது உரையாற்றுவது பொருத்தம் என நிணைக்கின்றேன்.14 வது அரசியல் உறுப்பபுரிமை சொல்லுவது எல்லோருக்கும் வாழும் உரிமை இருக்கின்றது என்று ஆனால் இந்த நாட்டில் வடக்கில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது.1990 ஆம் ஆண்டு வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்பில் இங்கு கவனம் செலுத்த வேண்டும்.வடபுலத்தில் முஸ்லிம்களின் அனைத்து பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டன.கல்வி,பொருளாதாரம், கலாச்சாரம் என்பன இதன் மூலம் பறிக்கப்பட்டன.
இந்த அடிப்படை உரிமை மீறியவர்கள் தொடர்பில் சர்வதேசம் எதுவும் பேசுவதில்லை.அது மட்டுமல்லாமல் இலங்கையில் வாழுபவர்களும் பேசுவதில்லை.ஜெனீவா மாநட்டில் பேச வேண்டும் சொல்பவர்கள்,முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அதனை செய்தவர்கள் தொடர்பில் கேள்விகளை கேட்க வேண்டும்.அண்மையில் இலங்கைக்கு வருகைத்தந்த இராஜங்க துாதுவர் ஒருவரை சந்தித்து கலந்துரையாடி போது அவர் முஸ்லிம்களை மறந்த நிலையில் பேசினார்.நான் அவருக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இழந்துள்ள துறைகள் பற்றியும் விளக்கப்படுத்தினேன்.
வருடத்திற்கு 3 பேர் வீதம் இந்த 23 வருட காலத்துக்குள் 69 பேர் சட்டத்துறையில்,69 பேர் உயர் பதவிகளில் இருந்தீக்க வேண்டும்.ஆனால் அவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது.பொருளாதாரம் என்பது முற்று முழுதாக அழிக்கப்பட்டது.தமது பொருளாதாரத்தை அவர்கள் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.தேவையான நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றது.
வடமாகாண சபையின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.இவர்களது இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கான நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.அது அவர்களது தார்மீக பொறுப்பாகும்.மனித உரிமை தொடர்பில் இவர்கள் பேசுகின்ற போது வடக்கில் சிறுபான்மையாக இருக்கும் முஸ்லிம்கள் தொடர்பில் பேச வேண்டும்.இதனை மறந்து அவர்கள் செயற்பட முடியாது.தமிழ் பேசும் மக்கள் வடக்கில் மிகவும் நெருக்கத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை யாவரும் அறிவார்கள்.வடக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் சமூகம் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பலவந்தமான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதால் இழந்தவற்றினை மதிப்பீடு செய்து அவர்களது வாழ்வாதார உரிமையினை வழங்க வேண்டும்.அது வேளை இந்த முஸ்லிம்களுக்காக விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து பாதிப்புக்கள் தொ்டர்பில் உரிய நஷ்டயீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.
Post a Comment