பல கட்சிப்போட்டி முஸ்லிம்களின் பலவீனத்திற்கே..!
(சத்தார் எம் ஜாவித்)
இலங்கை வாழ் முஸ்லிம்களின் பின்னடைவுக்கும், வீழ்ச்சிப் போக்கிற்கும் இனவாதிகளும், சர்வதேச தீய சக்திகளும் காரணமானவர்களாக இருந்து செயற்படும் இத்தருணத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கான ஒரு சவால் மிக்க ஒன்றாக மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றமையை குறிப்பிடலாம்.
நடைபெறவிருக்கும் இரு மாகாண சபைகளிலும் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவங்கள் என்பது மிக மிக முக்கியமானதாகும். இந்தவகையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தீர்க்கமாக சிந்தித்துச் செயற்பட வேண்டிய ஒரு கால கட்டமாகும்.
மேல்மாகாணமாக இருக்கட்டும் தென்மாகாணமாக இருக்கட்டும் தேர்தல் என்ற படகில் பயணிக்க முன் இந்நாட்டின் சிறுபான்மைச் சமுகம் என்ற நோக்கில் மட்டுமல்லாது கடந்த சில காலங்களாக சமய ரீதியாக முஸ்லிம் மக்கள் எதிர் கொண்ட வடுக்கள் இன்று வரை தொடராகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையை சற்றுச் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறானதொரு நெருக்கடி நிலையில் இருந்து முஸ்லிம் சமுகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய வேலையில் அரசியல் வாதிகளின் ச10ட்சுமத்தால் அரசியல் இலாபங்களுக்காக வேட்பாளர்கள் பல கட்சிகளில் களமிறங்கியிருப்பது ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களின் வீழ்ச்சிப் போக்கிற்கான ஆரம்பமே.
சிறுபான்மையாக இருக்கும் முஸ்லிம் சமுகம் இவ்வாறு பல கட்சிகளில் தத்தமது அரசியல் இலாபங்களுக்காக மூழ்கி மக்களின் பெறுமதி மிக்க வாக்குகளை பிரித்து முஸ்லிம் சமுகம் எதற்கும் நாதியில்லாத சமுகமாக பலவீனமடைந்து நடுத்தெருவில் நிற்பதற்கும் வழி வகுக்கப்போகும் ஒரு தேர்தலாகவே நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்கள் அமையப் போகின்றதென்றால் அதைவிட அதிகம் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
முஸ்லிம்கள் அரசியல் செயற்பாடுகளில் ஆக்கபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கி வந்தாலும் பல விடயங்களில் புறக்கணிக்கப்பட்ட அல்லது உரிமைகள் மறுக்கப்பட்ட சம்பவங்களும் தாராளமாக இடம்பெற்று வந்துள்ளதை முஸ்லிம்கள் கண்டு கொண்டாலும் சிறபான்மை என்ற ஒரு காரணத்தால் பொறுமையை கைக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலும் ஆட்சியாளர்களை பகைத்துக் கொள்ளாத நிலைமைகளே அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் இந்த நாட்டு முஸ்லிம்கள் சாதாரண மனிதர்கள் அல்லர் காலாகாலமாக பல்லின சமுகத்திற்குள் குறிப்பாக பெரும்பான்மை பௌத்த மக்களுடன் முரண்பாடுகள் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறுகளே இலங்கை முஸ்லிம்களின் வரலாறுகள் இருந்துள்ளன இதற்கு மறைந்த பல முஸ்லிம் தலைவர்களின் அக்கால அரசியல் செயற்பாடுகள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.
தமக்கு ஆட்சி அதிகாரங்களில் சம பங்கு வேண்டும் என்று என்றைக்கும் அதிகாரம் காட்டியதோ அல்லது எதிர்ப்புப் போராட்டங்களோ நடத்தியதில்லை மாறாக ஒற்றுமைக்காக பெரும்பான்மை மக்களுடன் முடியுமான வரை இணைந்து செயற்பட்ட வரலாறுகளே அதிகம்.
ஆனால் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால் இனவாதத்தின் பலிக்கடாக்களாக பல இனவாதிகளின் மறைமுகமான மற்றும் நேரடியான தீய செயற்பாடுகளால் ஒரு சிறுபான்மைச் சமுகம் என்றவகையில் கதிகலங்கி நிற்கின்றனர்.
அரசியல் வாதிகளைப் பொருத்தவரை சேத்தைக் கண்டால் பூசுவதும் தண்ணியைக் கண்டால் கழுவதுமான கொள்கை உடையவர்கள் அதனால் அவர்களுக்கு தமது சமுகம் பற்றிய என்னமோ அல்லது சமயம் பற்றிய கவலைகளோ அற்றவர்களாக இருப்பதும் தேர்தல்காலங்களில் மக்களை முட்டாள்களாக ஆக்குவதுமே அவர்களின் கைங்கரியங்களாக இதுவரை காலமும் காணப்பட்டன.
சாதாரண மக்களின் நிலைமைகள் அவர்களுக்குப் புரிவதில்லை ஒரு அரசியல் வாதி உண்மையான மக்கள் சேவகனாக இருக்கவேண்டிய தருணத்தில் வசதி வாய்ப்புக்களைக் கண்டவுடன் தன்னையும் மறந்து தமக்கு வாக்களித்த மக்களையும் மறந்தவர்களாக உள்ள நிலைமைகளே தற்கால அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடுகளாகும்.
இன்று கொழும்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையான முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இவர்களின் நிலைமைகளை எடுத்து நோக்கினால் அவர்களில் அதிகமானவர்கள் பட்டியைத் திறந்தால் தெரிகெட்டு ஓடும் மந்தைகளைப்போல் இருக்கின்றனர். அரசியலில் குதிக்க வேண்டும் என்ற கோதாவில் எல்லாக் கட்சிகளிலும் பிரிந்து நிற்பது மட்டுமல்லாது சுயற்சைக் குழுக்களிலும் கூட பல பிரிவுகளில் பிரிந்து நிற்பது வேதனைக்குரிய விடயங்களாகவே அமைகின்றன.
அதிகமான முஸ்லிம் கட்சிகள் இன்று குறிப்பாக மேல் மாகாணத்தில் பிரிந்து நின்று முஸ்லிம் சமுகத்திற்கு துரோகம் இழைக்கும் கட்சிப் பிரமுகர்களாகவே தம்மை அடையாளப் படுத்தியுள்ளனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பல கட்சிகளிலும், பல சுயற்சைக் குழுக்களிலும் பிரிந்து நிற்பதானது முழு முஸ்லிம் சமுகமும் யாரை ஆதரிப்பது? யார் மூலம் தமது கடந்தகால சமய ரீதியாக நிந்நிக்கப்பட்டமைக்கு தீர்வு கிடைக்கும் என்ற ஒரு தர்ம சங்கடமான நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்கள் அரசியலில் இருந்து ஓட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்டு மற்றய சமுகத்தின் அடக்கு முறைக்கும் அவர்களின் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடப்பதற்கான பாரிய சதி முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதை முஸ்லிம் அரசியல் வாதிகளும் சமுகமும் கண்டு கொள்ளவேண்டும்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை அது வடக்காக இருக்கட்டும் தெற்காக இருக்கட்டும் ஆலையில் அகப்பட்ட கரும்புபோல் இனவாதிகளாலும், அரசியல் வாதிகளாலும் தொடராக நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரமான காலமாக தற்காலம் அமைந்துள்ளது எனலாம்.
இன்று முஸ்லிம்களுக்குத் தேவையான விடயம்கள் சமுக ஒற்றுமை, சமாதானம், அமைதியான வாழ்வு முறை இவ்வாறான செயற்பாடுகளை விரும்பும் சமுகமாக முஸ்லிம் சமகம் இருக்கின்ற நிலையில் இவர்களின் என்னங்களையும், செயற்பாடுகளையும் சுக்கு நூறாக்கும் செயற்பாடுகளாக அரசியல் மக்கள் மத்தியில் சாத்தான் வடிவில் நுழைந்திருப்பது எதிர்கால இலங்கையின் இறையான்மைக்கு ஏற்படவிருக்கும் பாரியதொரு பின்னடைவே எனலாம்.
நல்ல என்னங்களை பிரதிபலிக்கவேண்டிய அரசியல் தலைமைகள் இன்று தமது அரசியல் இலாபங்களுக்காக தமது சமுகத்திற்குள்ளேயே ஒருவரை ஒருவர் முட்டிமோதும் சமுகமாக சித்தரித்துவிட்டனர் எனலாம்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்துணர்வுடனும் நன்நோக்குடனும் சிந்திப்பார்களானால் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலைமைகள் இந்தளவுக்கு தலை தூக்கியிருக்காது என அரசியல் ஆய்வாளர்கள் தமது கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் காணப்படும் சிறுபான்மையினராக முஸ்லிம்களும், தமிழ் மக்களுமே காணப்படுகின்றனர் ஒட்டுமொத்தத்தில் இரு இனங்களும் சேர்ந்து 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களாக காணப்படும்போது 70 சதவீதமாக காணப்படும் பெரும்பான்மையும் இதய சுத்தியுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் இல்லாத நிலைமைகளே கடந்த மூன்று தஸாப்த கால யுத்தத்திற்கான மூல காரணங்களாகும்.
கடந்தகால யுத்த வடுக்களையாவது கருத்தில் கொண்டு செயற்படவேண்டிய அரசியல் தலைமைகள் இன்று மாற்றாந்தாய் மனப்பான்மையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் ஒரு குற்றச் செயலாகவே நோக்கப்படுகின்றது.
முஸ்லிம் சமுகத்தின் விடயத்தில் குறிப்பாக சமய ரீதியாக ஒரு கூட்டமைப்பாக செயற்பட வேண்டிய ஒரு தர்ணமே இன்றைய காலமாகும். மாறாக அரசியல் தலைமைகளும் கட்சிகளும் தமது போக்கில் செல்வார்களானால் அது எதிர் காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் விடயங்களில் ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகளுக்கும் அரசியல் போட்டிகளுக்கும் உட்பட்ட தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமது சமுகத்தின் அரசியல் கட்டமைப்பைக் கருத்திற் கொண்டு ஒற்றுமைப்பட்டதுபோல் அவர்களின் பாடங்களை கற்றுக் கொண்டு முஸ்லிம்களும் முஸ்லிம் தலைமைகளும் ஒற்றுமைப்பட வேண்டிய காலமே தற்போதைய காலமாகும்.
இவ்வாறு ஒற்றுமைப்படும் பட்சத்தில் இலங்கையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அதன் மூலம் இனவாதிகளின் அடாவடித் தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியான சூழ் நிலையை இலங்கைவாழ் சகல சமுகங்களும் கண்டு கொள்ளும் சந்தர்ப்பங்கள் தாரளமாக காணப்படுகின்றது.
தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட சமுகமாக வாழும் நிலையில் இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டுமானால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒரு கூட்டமைப்பின் கீழ் செயற்படுவதற்கு முன்வரவேண்டும் அதன் மூலமே இனவாதிகளுக்கு தகுந்த பாடத்தை புகட்டி இந்த நாட்டின் சிறுபான்மை மக்களும் அரசியலில் ஒரு பலமானவர்கள் என்பதனை உருவாக்க முடியும்.
மேல் மற்றும் தென்மாகாணங்களில் நடைபெறப் போகும் தேர்தலில் ஒற்றுமைப்பட்டு வரலாற்றில் இனவாத அரசியல் தலைமைகளுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டும்போது கடந்த காலத்தில் எதிர் கொண்ட பல பிரச்சினைகளுக்கு முடிவு கட்டவும் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்புக்கள் குறைவடைவதற்கும் ஒரு பாலமாக அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த காலங்களில் தேர்தல்களில் தகுதியற்றவர்களை அரசியலில் கொண்டு வந்து அதன் மூலம் அந்த அரசியல்வாதிகள் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்களை ஓரங்கட்டி திறமைபடைத்த சமகத்திற்கு சேவை செய்யக் கூடிய தகுதியானவர்களை இனங்கண்டு கொள்ளவேண்டிய தருணத்தில் மேல் மற்றும் தென்மாகாண சபை மக்கள் காணப்படுகின்றனர்.
இவ்வாறு சமுக நோக்கமற்றவர்களாலும், அதிகார தரப்பினராலும் அவர்களுடன் இணைந்திருப்பவர்களாலும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பிள்ளை என்பதனை இதுவரை காலமும் கண்டு கொண்ட சமுகமாக முஸ்லிம் மற்றம் தமிழ் சமுகம்கள் காணப்படுகின்றன.
அரசியல் பாதையில் செல்பவன் அவன் எந்தச் சமுகத்தைப் பிரதி நிதிதத்தவப் படுத்துகின்றானோ அவன் அந்த சமுகத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தி சமுகத்தைப் பாதுகாக்க வேண்டும் ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் அதற்கு முற்றிலும் மாறுபட்டவர்களாக காணப்படுகின்றமை வேதனை தரும் விடயங்களாக உள்ளன.
கடந்த காலங்களில் கறைபடிந்த விடயங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரு அரசியல் சானக்கியம் படைத்த தலைமைகளை அல்லது அரசியல் வாதிகளை முன்நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மக்களிடத்தில்தான் உள்ளது.
எனவே எதிர் காலம் இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரை பல சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வெண்டிய காலமாகும். இதனைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பு மற்றும் நிரந்தரமான இருப்புக்களுக்கு உறுதிப்படுத்தக் கூடிய ஒரு சமுகக்கட்டமைப்பு தேவை என்பதனை உணர்ந்து அரசியலில் ஈடுபடக்கூடிய திறமைசாலிகளை உருவாக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களினதும் தலையாய கடமையாகும்.
Post a Comment