Header Ads



புது முகத்திற்காக காத்திருக்கும் சோமாலிய முஸ்லிம் சகோதரி...!

சோமாலியாவில் சிவில் யுத்தம் காரணமாக தனது இரண்டு வயதில் முகத்தில் குண்டு துளைத்து கடந்த 23 ஆண்டுகளாக அவதிப்பட்டுவந்த பெண்ணுக்கு சர்வதேசத்தின் முயற்சியால் முகத்தை சீர்செய்யும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பான் மருத்துவமனையில் சனிக்கிழமை குறித்த பெண்ணுக்கு 10 மணி நேரம் சத்திரசிகிச்சை இடம்பெறவுள்ளது. சோமாலியாவின் முன்னாள் முதல் பெண்மணியும் முன்னாள் அமைச்சருமான எட்னா அடன் இஸ்மைல் கடந்த 11 ஆண்டுகளாக முயற்சித்தே இந்த சத்திர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

தற்போது 25 வயதாகும் அயான் மொஹம்மட்டின் முகத்தில் குண்டு காயத்தால் துளையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அகோரமடைந்துள்ள அவரது முகத்தை எப்போதும் மறைத்துக் கொண்டே வாழ்கின்றார். அவரால் தனது வலது கண்ணை மூட முடியவில்லை. உணவு உண்ண முயன்றால் கண்ணத்தில் இருக்கும் துளையூடாக வெளியே வருகிறது.

எனினும் தனது முகத்திற்கு நேர்ந்ததை பற்றி யாராவது கேட்டால் அவர் அதிகம் வருத்தப்படுவதாக அயானுடன் சத்திரசிகிச்சைக்காக அவுஸ்திரேலியா வந்திருக்கும் இஸ்மைல் நேற்று முன்தினம் பிரிஸ்பானில் நடந்த ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார். "இந்த கேள்வி எனக்கு வலியை ஏற்படுத்துகிறது" என்று அயான் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த சத்திர சிகிச்சையை இலவசமாக செய்துகொடுக்க மருத்துவ நிபுணர்கள் முன்வந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.