Header Ads



ஒலுவில் கடற்பரப்பில் நீராடச்சென்ற மூவரில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்

(எம்.ஏ.றமீஸ்)

ஒலுவில் பிரதேச கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் மூவரில் இருவர் மீட்பு: ஒருவரைக் காணவில்லை.

இன்று(01) ஒருமணியளவில் நண்பர்கள் மூவர் ஒலுவில் கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளனர். சக நண்பர்கள் ஆறுபேர் நீராடச் சென்ற போதிலும் மூவர் கடலில் நீராடவென ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்கென போடப்பட்ட கற்களில் ஏறுவதற்காக சென்றபோது நீரின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நீரில் அள்ளுண்டு போனபோது தரையில் நின்றுகொண்டிருந்த நண்பர்கள் கூக்கிரலிட்டதனால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இருவரை காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஒருவரைக் காப்பாற்ற அப்பிரதேச மீனனவர்களால் முடியவில்லை.

மத்திய கிழக்கு நாட்டிற்கு தொழில் வாய்ப்பிற்காகச் சென்று அண்மையில் நாட்டிற்கு வந்த மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஸ்தபா றிகாஸ்(24) என்ற இளைஞரே நீராடும்போது காணாமல் போனார். இவர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் ஒலுவில் பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார்.

சுபைதீன் றிபாத்(19) மற்றும் எச்.எம்.றுஸான்(17) என்னும் இளைஞர்களே காப்பாற்றப்பட்டவர்களாவர். இவர்கள் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் காப்பாற்றப்பட்டு உடனடியாக ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவரும் கடமையில் இல்லாமையால் அண்மையில் உள்ள பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்கு இவர்கள் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்ததனால் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கhணாமல் போன முஸ்தபா றிகாஸ் என்பவரை ஒலுவில் பிரதேசத்திலுள்ள கரையோர பாதுகாப்புப் பிரிவினரும், கடற்படையினரும்,சுழியோடிகளும், பிரதேச மக்களும் கடற்பிரதேசத்தில் தேடி வருகின்றனர்.

பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் ஒலுவில் பிரதேசத்தில் 24 மணிநேரமும் கடமையில் வைத்தியர்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகும். இருந்த போதிலும் அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் வைத்தியர்களின்மையால் ஏமாற்றத்துடன் திரும்புவது வழக்கமான விடயமாகும் என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இன்று நீரில் மூழ்கிய இருவர்  காப்பாற்றப்பட்டு உயிருக்கு போராடிய  நிலையில் இவ்வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வைத்தியர்கள் கடமையில் இன்மையால் பல்வேறுபட்ட சிரமங்களை சம்பந்தப்பட்டவர்கள் அனுபவிக்க நேர்ந்தது.

ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்கு ஆறு வைத்திய அதிகாரிகள் தேவையான நிலையில் இருந்தும் இங்கு இரண்டு வைத்தியர்களே கடமையினை நிறைவேற்றி வருகின்றனர். மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவரும், பதிவு வைத்திய அதிகாரி ஒருவருமே இங்கு கடமையினை நிறைவேற்றி வருகின்றனர். இதேவேளை இவ்வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான போதிய விடுதிக்கட்டட வசதி இல்லாதுடன் போதிய சிற்றூழியர்களும் இல்லை என வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இன்றைய சம்பவத்தினால் ஒலுவில் பிரதேசம் சோகம் நிறைந்து காணப்படுகின்றது.இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.