போதைப்பொருட் கடத்தலை முறியடிக்க ஒத்துழைக்குமாறு ஐ. நா. விடம் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்
நாட்டுக்கு நாடு களவாக ஹெரொயின் உட்பட போதைப்பொருட்களை கடத்தும் மோசடி நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின்உயர் அதிகாரிகள் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டு, தற்பொழுது இலங்கை வந்துள்ள அவ்வமைப்பின் இந்து சமுத்திர கடற்பிராந்திய இணைப்பதிகாரி அலன் கோல் மற்றும் கடற் கொள்ளையை முறியடிப்பதற்கான செயல்திட்ட அதிகாரி சானக ஜயசேகர ஆகியோர் நீதியமைச்சர் ஹக்கீமை வியாழக்கிழமை (13) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து உரையாடினர்.
இந்து சமுத்திரத்தின் ஊடாக கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் என்பன மேற்கொள்ளப்படுவதால், அவற்றை முறியடிப்பதற்கு இலங்கையின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என அமைச்சரிடம் வலியுறுத்திய அவர்கள், ஆழ்கடலில் செல்லும் கப்பல்களில் களவாக கொண்டு செல்லப்படும் சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட போதிலும், அப் பிராந்தியங்கள் எந்தவொரு நாட்டினதும் நியாயாதிக்க எல்லைக்கு உட்படாத காரணத்தினால் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடுவதாகவும், அவ்வாறன குற்றச்செயலை புரிவோர் விடுவிக்கப்பட நேர்வதாகவும் சுட்டிக்காட்டினர்.
ஆகையால், ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள சிறிய நாடான சீஷேய்ல்ஸில் போன்று இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் இலங்கையிலும் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என அவர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், இந்த விவகாரம் இந் நாட்டு அரசாங்கத்தின் கொள்கை சம்பந்தப்பட்ட காரணத்தினால், நீதியமைச்சோடு மட்டுமல்லாது, இத்தகைய குற்றச்செயல்களை தடுப்பதிலும் முறியடிப்பதிலும் சம்பந்தப்படக்கூடிய பொலிஸ் திணைக்களம், குடிவரவு , குடியகல்வு திணைக்களம், சட்ட மா அதிபர் திணைக்களம், சட்ட வரைநர் திணைக்களம் போன்றவற்றோடு பரவலான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டு முடிவு அதற்கு காணப்பட வேண்டுமென்றார்.
அத்துடன் இவ்வாறான பாரதூரமான பல் நாடுகள் தழுவிய மிகப் பாரதூரமான குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு ஆபிரிக்க, ஆசிய சட்ட ஆலோசனை மன்றம், இந்து சமுத்திர கடற் பிராந்திய வலையமைப்பு மாநாடு, பொதுநலவாய மாநாடு என்பவற்றின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் தம்மை சந்தித்த உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
கொன்ரெயினரில் ஹெரோயின் கடத்திய கேசில் நாட்டின் பிரதமரின் பெயர் அடிபடுகிறது. இவர் என்னெவென்றால் ஐ.நாவுக்கு போய் அப்பீல் பண்ணுகிறாராம். இதை ஒரு செய்தி என வெளியிட்டிருப்பவர் ”டாக்டர்” !
ReplyDelete