Header Ads



ஒலுவில் துறைமுகத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிந்தவூர் பிரதேச மீனவர்கள்

(உமர் அலி முகம்மதிஸ்மாயில்)

   ஒலுவில் துறைமுகத்துக்கு வடக்கே அமைந்துள்ள நிந்தவூர் கிராமத்தில்  கிட்டத்தட்ட  மூவாயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள்  கரை வலை மீன் பிடித்தொழிலில்  ஈடுபடுகின்றனர் ,அதில் ஐம்பது  வீதத்துக்கும் மேற்ற்பட்டோர்  முழுநேர தொழிலாக  கரைவலை  மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் .கரை வலை மீன்பிடி மூலமாகவே  தமது குடும்ப  வாழ்கையை ஓட்டுகின்ற  இம்மீனவர்களது மீன்பிடித்    தொழிலானது  ஒலுவில் துறைமுக கட்டுமானப்பணி  ஆரம்பமானதில் இருந்து  இன்று வரை  கணிசமான அளவு பாதிப்படைந்துள்ளது துறைமுகம் உருவாவதற்கு முன்னரான காலப்பகுதிகளில்   கடல் கொந்தளிப்பு காலங்களைத்தவிர ஏனய காலங்களில்  அதிக   அளவு  மீன்பிடி நடைபெற்றுவந்தபோதிலும்  தற்போது  அந்தளவு  மீன்பிடி  இடம்பெறுவதில்லை!

                   துறைமுக தடுப்புச்சுவரானது  கடலை மறித்து கரைக்கூடாக அமைக்கப்பட்டதால் கரையோர மீன்களின் வருகை  தடைப்பட்டது மட்டுமன்றி  கரை நீரோட்டம்  திடீரென் திசைமாறி  பாரிய கடலரிப்பு அபாயங்களும்   நிகழ்ந்து கொண்டிருக்கின்றன!.துறைமுகத்தின் வடபகுதியில்  ஒலுவில்,மாட்டுப்பளை ,அட்டப்பள்ளம் போன்ற பகுதிகளில் உள்ள  தென்னங்காலைகள்  கடலரிப்பிற்குள்ளாகி தென்னை உட்பட பல மரங்கள்  கடலால் உள்வாங்கப்பட்டு படிப்படியாக  கடலினுள்  அடித்துச் செல்லப்படுகின்றன.

இவ்வாறு கடலினுள் அடித்துச் செல்லப்பட்ட  மரங்கள் தடிகள்,கட்டிட இடிபாடுகள்  வடக்குப்பக்கமாக உள்ள கடலினுள்  கரைப்பகுதியிலே ஆங்காங்கே   தங்கி  கிடக்கின்றன.இவ்வாறு  தங்கிகிக்கிடக்கும் மரங்களினாலும்  ,புதிதாக கடலில்  தோன்றியிருக்கும்  மணல் திட்டுக்களினாலும்   எஞ்சியிருக்கும் கரைவலை மீனவர்காளது மிச்சசொச்ச தொழிலும் இன்று  கேள்விக்குறியாகியுள்ளது .

  ஆம்,இடைத்தங்கலாகியுள்ள  மரங்கள் மட்டுமன்றி புதிதாக கடலினுள்ளே உருவாகியுள்ள தற்காலிக மணல்மேடுகளும் மீன்பிடி வலைகளைக்  கொழுவி கிழிப்பதால் வலைகள் .மடிகள்,சள்ளைவலைகள் சேதமாவது மட்டுமன்றி  மீன்பிடியும் தடைப்படுகின்றது .இது பற்றி மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கும,கரையோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பலமுறை  தெரியப்படுத்தியும்  எதுவித பலனளிக்கும் நடவடிக்கைகளும்  எடுக்கப்படவில்லை.

மீனவர்களது வாக்குகளை வேட்டையாடி  அரசியல் அரியணை  ஏறிய அரசியல்வாதிகளால் இதுசம்பந்தமாக எதுவித  ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.பலமுறை இது பற்றி பிரதேச அரசியல்வாதிகளின் கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டிருந்தபோதும்   எல்லாம்ஏட்டுச்சுரக்காயாகவே இருக்கின்றது.இதே வேளை இப்பிரச்சினை பெரும்பான்மை சமூகத்தினருக்கு ஏற்பட்டிருப்பின்  மீன்பிடைத்திணைக்களத்தை எத்தனையோ அமைச்சர்கள்,அதிகாரிகள்   இடை விடாது தொல்லை கொடுத்து  எப்படியாவது  மீனவர்களது பிரச்சினையை தீர்க்கும்படி  நெருக்கிக்கொண்டேயிருந்திருப்பார்கள். ஆனால்  இங்கு அப்படி ஏதும் நடக்கவில்லை ,ஆளும் கட்சிக்கு வால்முட்டாக  இருந்து கொண்டிருக்கும் முஸ்லீம்  காங்கிரசிற்கு வாக்குகளை கண்ணை மூடிக்கொண்டு  புள்ளடிபோட்ட ஏழை மீனவர்களை  இன்று கவனிப்பதற்கு யாரும் இல்லை.

அதிகாலையில் ஆவலுடன் கடல்கரை  சென்று  வயிற்ருப்பசிபோக்க எதையாவது  சம்பாதித்துக்கொண்டு வீடு செல்வதற்கு பதிலாக வயிற்ரெரிச்சலுடன் ஏழை மீனவர்கள் கைகளைப்பிசைந்து கொண்டு கிழிந்த வலைகளை அள்ளிக்கொண்டு செல்வது  மிகவும் வேதனைக்குரிய  விடயமாகும்.

தினமும் மீன்பிடித்து அதில் ஐந்தோ பத்தோ  வருவாயை பெற்றவர்கள்  சில நூறு ரூபாய்களையேனும் வருமானமாய் பெறுவதென்பது  இன்று குதிரைக்கொம்பாக  மாறிவிட்டது.சில கரைவலைச்சங்கங்கள்  முற்றாக  இயங்காமல்  போய்விட்டன.அட்டப்பள்ளம் பகுதி, கரைவலை மீன்பிடி முற்றாக தடைப்பட்டுவிட்டது.இதனால் அட்டப்பள்ளத்தைச்சேர்ந்த மீனவர்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நிந்தவூர் தெற்கு குளைன்ஜான் பகுதியில் மீன்பிடி  குறிப்பிட்ட சில இடங்களிலேயே நடைபெறுகின்றது. குறித்த  இடத்திற்குள் எட்டு ஒன்பது தோணிகள் ஒரே நேரத்தில் மீன் வளைவுகளில்  ஈடுபடுவது மிகவும் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.நிந்தவூர் பிரதேச உயர் அரசாங்க அதிகாரிகளும்.குறித்த  பிரதேச அரசியல்வாதிகளும்  இவ்விடயமாக கவனமெடுக்குமாறு மக்கள்  வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது சம்பந்தமாக  நிந்தவூர் மத்திய பிரிவு கிராமிய கடற்றொழில் அமைப்பானது பொதுவாக விடுக்கும் வேண்டுகோள்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.