Header Ads



'கொடையாளர்கள்’ பட்டியலில் 970 மில்லியன் டாலர்கள் வழங்கி, பேஸ்புக்’ அதிபர் முதலிடம்

பொது காரியங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அதிக நன்கொடை அளிக்கும் 50 கொடையாளர்களின் பெயரை ‘தி க்ரானிக்கைல் ஆஃப் ஃபிலாந்த்ரொஃபி’ என்ற பத்திரிகை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது.

நேற்று வெளியான அந்த பத்திரிகையின் முடிவின்படி, கடந்த (2013) ஆண்டு அதிக நன்கொடை அளித்த அமெரிக்க கொடையாளர் என்ற பெருமை ‘ஃபேஸ்புக்’ அதிபரான மார்க் ஸுகெர்பெர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிஸ்ஸிலா சான் ஆகியோரை சென்றடைந்துள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 கொடையாளர்களும் சேர்ந்து கடந்த ஆண்டில் மட்டும் 7.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை புதிய நன்கொடையாக வழங்கியுள்ளனர். அது மட்டுமின்றி, முந்தைய ஆண்டுகளில் அளிப்பதாக ஒப்புக்கொண்ட வாக்குறுதி தொகையான 2.9 பில்லியன் டாலர்களையும் அளித்துள்ளனர்.

‘ஃபேஸ்புக்’ அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிஸ்ஸிலா சான் ஆகியோர் சிலிகான் வேல்லியின் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 970 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 6 ஆயிரத்து 53 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இதற்கு முன்பு வரை அதிக தொகையை நன்கொடையாக அளித்து வந்த ‘மைக்ரோ சாஃப்ட்’ அதிபர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் கடந்த ஆண்டில் 181.3 மில்லியன் டாலர்களை அளித்துள்ளனர். முந்தைய வாக்குறுதி தொகையான 3.3 மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 50 பெயர்கள் கொண்ட பட்டியலின் இதர கொடையாளர்கள் அனைவரும் 37.5 முதல் 50 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான தொகையை தர்ம காரியங்களுக்காக அளித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரம்பக் கல்வி, சுற்றுச்சூழல், கலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதாரம் போன்றவற்றுக்காக பெரும்பகுதி நிதியை வழங்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.