Header Ads



93 வயதில் கின்னஸ் சாதனை படைத்த 'யோகா ஆசிரியை'

கைத்தடியுடன் தட்டுத்தடுமாறி, தள்ளாடி நடக்கும் வயதில் கூட, இளம்பெண்ணைப் போன்ற உற்சாகத்துடன் ‘யோகாசன’ கருத்தரங்கங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தும் 93 வயது அமெரிக்கப் பெண், ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற சிறப்புத் தகுதியுடன் உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.

இதனால், இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார்.

மேலைநாட்டு ‘பால்ரூம்’ நடனக்கலையை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்த இவர், பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்று, ஐரோப்பிய கண்டத்தின் அழகிய (நடன) கால்களுக்கு சொந்தமானவர் என்ற சிறப்பு பட்டம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளையும், பாராட்டுக்களையும் நடன துறையில் இவர் அள்ளிக் குவித்துள்ளார்.

எனினும், மேலைநாட்டு மோகத்தில் முற்றிலுமாக மூழ்கி விடாமல், இந்தியாவின் பழம்பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசானத்தை பயிற்றுவிப்பதற்காக நியூயார்க் நகரில் 'வெஸ்ட்செஸ்டர் யோகாசன பயிற்சி மையம்' என்ற பள்ளியை தொடங்கினார்.

கடந்த 70 ஆண்டு காலமாக இடைவிடாது யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், தற்போது தனது 93-வது வயதிலும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, யோகாசனம் தொடர்பான கருத்தரங்கங்களில் துடிப்புடன் பங்கேற்கிறார்.

யோகாசன கலையைப் பற்றிய நுணுக்கங்களை தனது சொற்பொழிவு மற்றும் செய்முறை விளக்கங்களின் வாயிலாக இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்தும் வருகிறார்.

யோகா கலையின் மீது இளம்வயதில் இவர் கொண்ட தீராத காதலை ‘கின்னஸ்’ புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது. ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற வகையில் டாவோ பொர்ச்சான் லின்ச்-சின் பெயர் கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.