Header Ads



66 ஆவது சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி


(ஏ.எல்.ஜுனைதீன்)

  இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின வைபவத்தைக் குறிக்கும் முகமாக நாளை 3 ஆம் திகதி திங்கள் கிழமையும் நாளை மறுதினம் 4 ஆம் திகதி செவ்வாய்கிழமையும் அரசாங்க  அலுவலகங்களாகப் பேணப்படுகின்ற சகல கட்டடங்களையும் விழாக்கோல ஒளிவிளக்குகளாலும் பல வண்ணக் கொடிகளாலும் அலங்கரிப்பதுடன் அக்கட்டடங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

  இது சம்மந்தமான அறிவிப்பு  அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சகல அமைச்சுக்களின் செயலாளர்கள்  சகல மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் சகல திணைக்களத் தலைவர்கள் சகல கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

   இதேவேளை, உலகம் முழுவதும் எமது தாய் நாட்டை வெற்றி பெறச் செய்வதற்கு ஒன்று கூடுவோம் எனும் தொனிப்பொருளில் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி செவ்வாய்கிழமை இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை கேகாலையில் பெருமையுடன் கொண்டாடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

  இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தவும் எமது தேசத்தைக் கட்டியேழுப்பவும் அபிவிருத்தியை எட்டுவதற்கும் அன்றைய தினம் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் எனவும் அரசு மக்களைக் கேட்டுள்ளது.

  கேகாலையில் நடைபெறவிருக்கும் பிரதான வைபவத்திற்கு ஒருங்கிணைவாக மாகாணம் மற்றும் மாவட்ட மட்டத்திலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறன. 

  நாட்டிலுள்ள அனைத்து மதங்களையும் கெளரவிக்கும் வகையில் சர்வமத அதாவது பெளத்த இந்து இஸ்லாமிய ரோமன் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  கேகாலையில் இடம்பெறும் பிரதான வைபவத்திற்கு ஒருங்கிணைவாக தேசியக் கொடி ஏற்றலும் தேசியக் கீதம் பாடுதலும் (தேசியக் கொடி ஏற்றுதல் 2014.02.04 ஆம் திகதி மு.ப 8.50) எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.