இலவச சாப்பாட்டுக்காக விமான டிக்கெட்டை 300 முறை கால நீட்டிப்பு செய்த ருசிகர ஆசாமி..!
சீனாவில் விமான நிலையத்தில் கிடைக்கும் ஓசி சாப்பாட்டை சாப்பிடுவதற்காக தனது டிக்கெட்டை 300 முறை நீட்டிப்பு செய்த ஆசாமி பிடிபட்டார்.சீனாவில் விமானத்தில் செல்ல முதல் வகுப்பு விமான டிக்கெட் முன்பதிவு செய்ய, வாங்க, தேதி மாற்ற வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மேலும், முன்பதிவு செய்த டிக்கெட்டின் தேதியை மாற்றிக் கொள்ள கட்டணம் கிடையாது. இந்நிலையில், ஜியான் விமான நிலையத்தில் கிழக்கு சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முன்பதிவு செய்த ஒருவர், அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பகுதிக்கு சென்று தினமும் ஓசி உணவை சாப்பிட்டு வந்துள்ளார். இதற்காக தனது முதல் வகுப்பு பயண சீட்டின் தேதியை 300 முறை நீட்டிப்பு செய்தும் வந்துள்ளார்.
ஷான்சி மாகாணத்தில் இவ்வாறு தனது டிக்கெட்டை கொடுத்து கால நீட்டிப்பு செய்ய முயன்ற போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். அப்போது அந்த டிக்கெட் குறித்த விபரங்களை கம்ப்யூட்டரில் பார்த்த போது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஓராண்டில் மட்டும் 300 முறை கால நீட்டிப்பு செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது முக்கிய பிரமுகர்கள் பகுதியில் ஓசியில் கிடைக்கும் தரமான உணவை சாப்பிடுவதற்காக இவ்வாறு நூதன முறையில் கால நீட்டிப்பு செய்து வந்ததாக அவர் தெரிவித்தார். கிழக்கு சீனா ஏர்லைன்ஸ் நிறுவனம் டிக்கெட் பயண தேதியை மாற்றி கொள்ள கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை என்பதை தெரிந்து கொண்டு இவ்வாறு செயல்பட்டதாக தெரிவித்தார். வேறு வழியில்லாமல் அவரது டிக்கெட்டை பெற்றுக் கொண்டு டிக்கெட்டுக்கான கட்டணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
Post a Comment