மேல், தென் மாகாண தேர்தலில் 155 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 3794 வேட்பாளர்கள் களத்தில் குதிப்பு
(ஏ.எல்.ஜுனைதீன்)
எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 7.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை நடாத்தப்படவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 155 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்தும் சுயேட்சைக் குழுக்களிலிருந்தும் மொத்தமாக 3794 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற அரசியல் கட்சிகள் சார்பான 82 வேட்புமனுக்களில் 01 வேட்புமனுவும் சுயேட்சைக்குழு சார்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 47 வேட்புமனுக்களில் 05 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டு மொத்தாமாக 123 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பில் 2441 வேட்பாளர்களும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில்1353 வேட்பாளர்களும் அடங்கியிருக்கின்றனர்.
மேல் மாகாணத்தில் 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2743 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இம்மாகாணத்தில் மாவட்ட ரீதியாக கொழும்பு மாவட்டத்தில் 1247 வேட்பாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 550 வேட்பாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 946 வேட்பாளர்களும் அரசியல் கட்சிகள் சார்பாகவும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.
தென் மாகாணத்தில் 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1051 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்மாகாணத்தில் மாவட்ட ரீதியாக காலி மாவட்டத்தில் 450 வேட்பாளர்களும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 221 வேட்பாளர்களும் மாத்தறை மாவட்டத்தில் 380 வேட்பாளர்களும் அரசியல் கட்சிகள் சார்பாகவும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நடைபெறவிருக்கும் இரு மாகாணங்களிலும் மொத்தமாக 155 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 40 இலட்சத்து 24 ஆயிரத்து 623 பேரும் தென் மாகாணத்தில் 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 18 இலட்சத்து 73 ஆயிரத்து 804 பேரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
Post a Comment