ரூ.1.40 கோடிக்கு ஓட்டல் பில் - தப்பிக்க முயன்ற பெரிசுகள்
சுவிட்சர்லாந்தின், பிரபல ஓட்டலில், இரண்டு மாதங்களாக தங்கி, சொகுசாக வாழ்ந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர், 1.40 கோடி ரூபாய்க்கு பில் கட்டாமல் தப்பிக்க முயன்றனர். சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள, நட்சத்திர ஓட்டலில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, 60 வயதைத் தாண்டிய, மூன்று பேர், தங்கினர். மதுபானம் , மசாஜ் என, உயர்தர சொகுசுகளை அனுபவித்து, 60 நாட்களுக்கு ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர்.
இவர்கள் ஓட்டலில் தங்கி கும்மாளமிட்டதற்கான, கட்டணம், இந்திய மதிப்பு 1.40 கோடி ரூபாயை எட்டியது. பணத்தைச் செலுத்த, ஓட்டல் நிர்வாகம் கெடுபிடி செய்த போது, அங்கிருந்து நைசாக, கம்பி நீட்டப் பார்த்தனர். ஓட்டல் அதிகாரிகள் இவர்களைப் பிடித்து விசாரித்த போது, தங்களிடம் பணம் இல்லை என்பதை, ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து, பணத்தை விரைவில் கொடுத்து விடுகிறோம் என, பத்திரத்தில் எழுதிக் கொடுத்து, வெளியேறி உள்ளனர்.
இவர்கள், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஓட்டலுக்குச் சென்று, இது போன்று அதிகம் செலவிட்டு, இறுதியில் காசு கொடுக்காமல் தப்பி விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
ஓட்டலில் தங்க வரும் போது, ஹெலிகாப்டர், ரோல்ஸ்ராய்ஸ் கார் போன்றவற்றில் பந்தாவாக வந்து இறங்குவதை பார்த்து, இவர்களை ஓட்டல் நிர்வாகம் மதிப்பாக நடத்தும். ஓட்டலில் இருந்து இவர்கள் புறப்படும் போதும், மானம் காற்றில் பறக்கும்.
இவர்கள் மூன்று பேர் மீதும், ஏற்கனவே, சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில், மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment