சாய்ந்தமருது தோணா ஆற்றை சுத்தம் செய்வதற்கு 13 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு
(அப்துல் அஸீஸ் )
சாய்ந்தமருது தோணா ஆற்றை சுத்தம் செய்வதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் 13 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியாப்பர் விடுத்த வேண்டுகோளையேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை இந்நிதியைக் கொண்டு சாய்ந்தமருது தோனாவை சுத்தம் செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு முதல்வர் நிசாம் காரியப்பர், மாநகர ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தோணா ஆற்றை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இந்நிதிக்கு மேலதிகமாக நிதி தேவைப்படுமாயின் அதனை மாநகர சபை மூலம் ஒதுக்கித் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
சாய்ந்தமருது ஊரை ஊடறுத்து செல்லும் இந்த தோணா கடந்த பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வருவதால் நீரோட்டம் தடைப்பட்ட நிலையில்- துர்நாற்றம் வீசி வருகின்றது.
இந்நிலையில் கல்முனை மாநகர முதல்வராக நிசாம் காரியப்பர் பதவியேற்றதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த வேண்டுகோளையேற்று சாய்ந்தமருதுக்கான தனது அபிவிருத்தித் திட்டங்களுள் இத்தோனா ஆற்றை சுத்தம் செய்யும் வேலைத் திட்டத்தை முன்னுரிமைப்படுத்தி அதற்கான நகல் வரைபை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்து- கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் பயனாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் தனது திணைக்களத்தின் ஊடாக இதற்கான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்திருந்தார்.
Post a Comment