முஸ்லிமாக இருந்தும் பாக்கீர் மாக்கார், தமது பிள்ளைகளை சிங்களப் பாடசாலைகளுக்கு அனுப்பினார் - அமைச்சர் நிமல் சிரிபால டீ சில்வா
(எப்.எம். பைரூஸ்) மக்கள் மனங்களை வென்ற பாக்கீர் மாக்காரின் வாழ்விலிருந்து தற்கால அரசியல்வாதிகளுக்குப் பல முன்மாதிரிகள் இருக்கின்றன. நடுத்தர வகுப்பு குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியால் அரசியலில் பிரவேசித்து மக்கள் மனங்களை வென்று இடம்பிடித்ததாக அமைச்சர் நிமல் சிரிபால டீ சில்வா தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகரும், தென் மாகாண ஆளுநருமான 'தேசமான்ய' எம்.ஏ. பாக்கீர் மாக்காரின் வாழ்க்கைச் சரித நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உரையாற்றினார். இலங்கை மன்றக் கல்லூரியில் தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் மன்றம் இதனை ஏற்பாடு செய்தது.
"மருத்துவ இல்லப் புரட்சி" என்ற மகுடம் கொண்ட இந்த சிங்கள நூலை ஜினசேன வேலாரத்ன எழுதியுள்ளார். இனத்துவ அடிப்படையிலான அரசியல் கட்சிகளால் தற்கால இலங்கையில் அரசியல் துறையில் நல்லவை நடைபெறவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். முஸ்லிமாக இருந்தும் தமது பிள்ளைகளை பாக்கீர் மாக்கார் சிங்களப் பாடசாலைகளுக்கு அனுப்பினார். மர்ஹ¥ம் ரீ.பீ. ஜாயாவின் அரசியல் தரிசனம் பாக்கீர் மாக்காரின் அரசியல் வாழ்வுக்கு துணைபுரிந்ததென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் கொட்டபிட்டியே ராஹுல தேரர் பேசுகையில், யுக புருஷரான பாக்கீர் மாக்காரைப் பற்றி நூல் வெளிவருவது காலத்தின் தேவையாகும். இனங்களை ஒற்றுமையுடன் முன்னேற அவர் பாடுபட்டார். அவரின் செயற்பாடுகளை நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு பேசுகையில்; நாட்டுக்காக அவர் பாடுபட்டார். இதனால் சகலரின் அன்புக்கும் உரித்தானார். அவரைப் போன்றே அவரின் புத்திரரான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் சிறந்தவர். அவர் அரசியலில் இருப்பது முக்கியமாகும் என்றார்.
"லங்காதீப" ஆசிரியர் சிறி ரணசிங்க, நூலாசிரியர் ஜினசேன வேலாரத்ன, ஹேரஸ் பெர்னாண்டோ உட்பட பலர் உரையாற்றினர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் அரசியல் முக்கியஸ்தர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
Post a Comment