குழந்தைகளை கண்காணிக்க தவறினால்.. (உண்மைச் சம்பவம்)
இன்டர்நெட் பல வகைகளில் உதவினாலும் குற்றங்களுக்கு வழி வகுக்கும் ஒரு பொருளாகவே மாறிவிட்டது. அதில் மர்மம் நிறைந்து கிடக்கும் ஒரு சமூக வலை தளமாக பேஸ்புக் இருக்கிறது. ஆண் படத்தை போட்டு பெண்கள் பேஸ் புக்கில் ஏமாற்றுவதும், பெண் படத்தை போட்டு ஆண்கள் ஏமாற்றுவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. போலியாக பேஸ் புக் கணக்கு தொடங்கியும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இவ்வளவு நடக்கிறது என்பது தெரிந்தும்... அந்த வலையில் தொடர்ந்து விழுந்து சீரழிந்து வருகின்றனர்.
பெங்களூரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி, பேஸ் புக்கில் மனோஜ்குமார் என்ற வாலிபரை நண்பராக ஏற்றுக் கொண்டார். அதன்பின் சேட்டிங்கில் பல மணி நேரம் பேச.. ஒரு நாள் நேரடி சந்திப்பும் நடந்துள்ளது. மனோஜ்குமாரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். அது இன்னும் வசதியாகிவிட்டது. அவர் வீட்டுக்கு மாணவி சென்ற போது, நடக்க கூடாதது நடந்து விட்டது. வார்த்தைகளால் மயக்கி பலாத்காரம் செய்துள்ளார் மனோஜ்குமார். அதன்பிறகு, டேக் இட் ஈஸி, பேஸ் புக் பிரண்ட்ஷிப், ஜஸ்ட் ஃபன் என்று கூறி கழற்றி விட்டார். மன முதிர்ச்சி இல்லாத அந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். போலீஸ் வந்து மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றும் வரை பெற்றோருக்கு தெரியாததுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
தங்கள் குழந்தைகள் எங்கு செல்கின்றனர், யாருடன் பழகுகின்றனர், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகின்றனர், போனில் யாருடன் பேசுகிறார்கள், எவ்வளவு நேரம் பேசுகிறார்கள், கம்ப்யூட்டரில் என்ன செய்கிறார்கள், எதில் கவனம் செலுத்துகிறார்கள் போன்ற பல விஷயங்களை பெற்றோர் கவனிக்க தவறி உள்ளனர். பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு வீட்டில் சிறுமியின் நடத்தையில் சிறிதளவேனும் மாற்றம் இருந்திருக்கும். அது அப்பாவுக்கு தெரியாவிட்டாலும், அம்மாவால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும். அதுவும் நடக்கவில்லை. கம்ப்யூட்டரை, இன்டர்நெட்டை தவிர்க்க முடியாது. எனினும் குழந்தைகள் குறைந்தபட்ச கண்காணிப்பிலாவது இருக்க வேண்டும். நம்மை அப்பா, அம்மா கவனிக்கிறார்கள் என்ற நிலை இருந்தாலே, உச்சக்கட்ட தவறு செய்ய குழந்தைகளுக்கு எண்ணம் வராது.
Post a Comment