உடன்படிக்கைக்கு எந்தவிதத்திலும் முரணாக நடந்து கொள்ளவில்லை
அக்குறனை பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய உறுப்பினர் நியமன விடயத்தில் பி.எம்.ஜே.டி குழுவினர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு எந்தவிதத்திலும் முரணாக நடந்து கொள்ளவில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம். நயீமுல்லாஹ் தெரிவித்தார்.
மேற்படி விடயமாக அக்குறனை பி.எம்.ஜே.டி குழுவினர் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிடும் விமரிசனங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் விதத்தில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
எம். நயீமுல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
2011 ஆம் ஆண்டு அக்குறணை பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட தயாராக இருந்த பி.எம்.ஜே.டி உறுப்பினர்களது நடவடிக்கை முஸ்லிம்களின் வாக்குகளில் சிறிதளவு தொகையை சிதறடித்து விடலாம் என்ற காரணத்தினால் உலமாக்களும் அப் பகுதி முக்கியஸ்தர்களும் கட்சித் தலைமையிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க அவர்களை உள்வாங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் பி.எம்.ஜே.டி குழுவினர் சார்பாக வேட்பாளர்கள் நால்வரை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுவில் இடம்பெறச் செய்ய இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்று தவிசாளராக நியமிக்கப்படுபவர் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டதன் காரணத்தினால், இடை நடுவில் தவிசாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்படுமாயின், அடுத்த நிலையில் உள்ளவர் பி.எம்.ஜே.டி குழுவைச் சேர்ந்த உறுப்பினராக இருந்தால், அடுத்த தவிசாளரை தெரிவு செய்யும் அதிகாரம் பி.எம்.ஜே.டிக்கு வழங்கப்படும் என்ற எழுத்து மூலமான உடன்பாடு அவர்களுடன் செய்து கொள்ளப்பட்டது.
எனினும், உறுப்பினர் ஒருவரின் வெற்றிடம் ஏற்படும் பொழுது, அந்த வெற்றிடத்தை நிரப்புவது குறித்து எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட அமைப்பினர் நன்கு அறிவார்கள்.
பிரதான கட்சியொன்றின் முதுகில் ஏறி சவாரி செய்து இவ்வாறு ஆசனங்களை பெறுகின்ற வித்தையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் அறியாத கட்சி அல்ல. பி.எம்.ஜே.டி உறுப்பினர் நால்வர் உட்பட மொத்தமாக 19 வேட்பாளர்கள் போட்டியிட்ட அத்தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகள் 15 பேருக்கு பிரிந்து செல்ல நேர்ந்தமையே இக் குழுவின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள் சற்று கூடுதல் வாக்குகளை பெற வாய்ப்பாக அமைந்து விட்டது.
இதன் பயனாகவே அவர்களால் உறுப்பினர்கள் இருவரை வென்றெடுக்க முடிந்தது. அவ்வாறன்றி சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால் அவர்களால் உறுப்பினர் ஒருவரையாவது பெற்றிருக்க முடிந்திருக்குமா என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதிகக் கூடிய வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்த முஸ்லிம் காங்கிரஸின் ஒரே உறுப்பினர் அல் ஹாஜ் முஹ்சீன் அவர்களது மறைவினையடுத்து, அந்த வெற்றிடத்திற்கான உறுப்பினராக தமது குழுவைச் சேர்ந்த நான்காவது நிலையில் இருந்த வேட்பாளரை நியமிக்குமாறு பி.எம்.ஜே.டி இ மு.காவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.
இது விடயத்தில் அவர்களுடன் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடியதன் நோக்கம் அவர்கள் கூறுவது போன்று விட்டுக்கொடுக்குமாறு அவர்களை கேட்பதற்கு அல்ல, நியாயத்தை எடுத்துக் கூறுவதற்கே ஆகும்.
இந் நாட்டில் பிரதேச சபை தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் அக்குறணையில் தொடர்ந்தேர்ச்சியாக இருந்து வந்ததை அனைவரும் அறிவார்கள்.
முதன்முறையாக அக்குறணை பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் முஹ்சீன் ஹாஜியாரின் மறைவினால் இழக்கப்பட்ட பொழுது, இவ் விடயத்தில் பிடிவாதமாக இருக்காது, பெருந்தன்மையாக நடந்து கொள்ளுமாறு தலைவர் ஹக்கீம் பி.எம்.ஜே.டி யிடம் வேண்டிக்கொண்டார்.
கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பதற்கு பிரஸ்தாப பிரதேச சபை உறுப்பினர் வெற்றிடத்தை முன்வைத்து பி.எம்.ஜே.டி பேரம் பேசிய பொழுது, மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக ஒத்துழைக்க முடியுமானால், அக்குறணை பிரதேச சபையில் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டு பதவிக் காலத்தில் முதல் வருடத்தை சுழற்சி அடிப்படையில் அவ்வமைப்பின் உறுப்பினருக்கு வழங்குவதாக கட்சியின் தலைமைத்துவம் வாக்குறுதி அளித்தது.
ஆனால், அவர்கள் வேறு கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதேவேளையில், முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பதாயின் வெற்றிடமாக உள்ள உறுப்பினர் பதவியை தமக்கு தருமாறு வற்புறுத்தினர்.
அக்குறணை மக்களுக்கு பணியாற்றும் ஒரே நோக்கத்திலேயே இந்த உறுப்பினர் பதவியை கோருவதாக கூறிய பி.எம்.ஜே.டி குழுவினர் திடீரென கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அசாத் சாலியின் அரசியல் மேடையில் தோன்றி அவருக்கு ஆதரவு வழங்குமாறு அக்குறணை மக்களிடம் வேண்டிக்கொண்டார்கள்.
இவர்களின் இந்த குறுகிய மனப்பான்மையுடனான நடவடிக்கையானது காலகாலமாக மத்திய மாகாண சபையில் அக்குறணை மக்களுக்கு இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவத்தை அறவே இல்லாது ஒழிக்க ஏதுவாகியது என்பது கவலைக்கிடமானது.
முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக இவ்வாறு இவர்கள் களமிறங்கியதன் காரணமாக நாம் சுழற்சி முறையில் அவர்களின் வேட்பாளருக்கு பிரதிநிதித்துவம் வழங்கவிருந்த தலைவரின் தீர்மானத்தை மாற்றிக்கொள்ள நேர்ந்தது. எனவே தான் அக்குறணை, புளுகொஹதென்னையைச் சேர்ந்த மிஹ்ரார் என்பவரை நியமிப்பதற்கு கட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
கண்டி மாவட்ட முஸ்லிம்களை ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டு பின்னர் அவர்களை மறந்து விடுவதாக கூறும் இக் குழுவினர், பிரதிநிதித்துவம் வகிக்கின்ற சபைகளிலே மௌனிகளாக இருந்து கொண்டு உருப்படியாக எதையும் சாதிக்க முடியாத உறுப்பினர்களை கண்டும் காணாதது போல மறந்து விட்டு, காய்க்கின்ற மரத்திற்கு கல் அடிக்கும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அக்குறணை மகளிர் வித்தியாலயம் எதிர்கொண்டு வரும் இடப்பற்றாக்குறைக்கு ஒரு கட்டடத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதிலும், முஹ்சீன் ஹாஜியாரின் மறைவையடுத்து அவ் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இடைப்பட்ட குறுகிய காலத்திற்குள் அதனை நிறைவேற்ற வேண்டுமென்ற இவர்களது கோரிக்கையானது அறவே நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை புரிந்துகொள்கின்ற அளவு மனப் பக்குவமும் அனுபவ முதிர்ச்சியும் அவர்களுக்கு இல்லையென்பது சொல்லித் தெரிய வேண்டியதல்ல.
இதற்கு முன்னர் அக்குறணை சாஹிரா வித்தியாலத்திற்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்ட பொழுது, இவர்களைப் போன்ற எந்தக் குழுவினரினதும் அழுத்தங்களுக்கு உட்படாது தனது கடமையை உரிய முறையில் சிறப்பாக நிறைவேற்றிய அமைச்சர் ஹக்கீம், அக்குறணை மகளிர் வித்தியால விவகாரத்திலும் உச்ச கட்ட பங்களிப்பை செய்வார் என்பதில் அக்குறணை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் திடமாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விதத்தில், கல்முனை மேயர் விடயத்தில் தலையிட்டு அதில் குளிர்காய முற்பட்ட இக் குழுவினரின் கூற்றிற்கு முன்னாள் மேயர் மீரா சாஹிப் பெருந்தன்மையுடன் கட்சித் தலைவரை சந்தித்து இராஜினாமா கடிதத்தை கையளித்த நிகழ்வு ஆப்பு வைத்துள்ளது.
எம். நயீமுல்லாஹ்
ஸ்ரீ.ல.மு.கா உயர் பீட உறுப்பினர்
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்
ஸார் ... உங்களது MoU வில் 80 மில்லியன் என்று ஏதாவது எழுதியிருக்கா ??? 2) முஹ்சீன் ஹாஜியார் மறைந்து 4 மாசத்த்துல 3 மாடி கட்டடம் கட்ட வேண்டும் ன்டு PMJD சொன்னாங்களா ??? உங்கள ஆரம்பிக்கத்தானே சொன்னாங்க... நீங்க கொடுத்த வாக்க காப்பாத்த்துறவங்க என்றால் இவ்வளவு பிடிவாதமா இருப்பாங்களா ???? 3) அரசியல் அனுபவமுள்ள உங்களுக்கு ஜனநாயகம் என்று ஒன்று இருப்பது தெரியாமல் இருப்பது கேவலமாக இருக்கிறது.
ReplyDelete